பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/671

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 661


(பொ.) உடலினது சுத்தம் அப்பினாலுண்டாம், உண்மெய்யினது சுத்தமானது நாவினா லெழூஉ மெய்ம் மொழிகளால் தோற்றப்படும் என்பது பொழிப்பு.

(க.) நீரினால் உடல் சுத்தமுண்டாவதைக் காணலாம். அதுபோல் அவரவர்கள் மெய்யாய வாய்மொழிகளால் உண்மெய்யினது சுத்தத்தைக் கண்டறியலாம் என்பது கருத்து.

(வி.) உடலுக்கு நீரினாற் சுத்தமுண்டாவதை அநுபவத்திற் கண்டுக் கொள்ளுவதுபோல உண்மெய்யாம் அந்தர அங்கத்தின் சுத்தத்தை பொய்சொல்லா நன்மெய்யாம் வாய்மொழிகளால் அறிந்துக்கொள்ளலாம் என்பது விரிவு.

9.எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு.

(ப.) எல்லாவிளக்கும் - சகல வகை ஒளியும், விளக்கல்ல - ஒளியாகா, சான்றோர்க்கு - சாந்தரூபிகளுக்கு, பொய்யாவிளக்கே - என்றென்றும் அவியா வொளியே, விளக்கு - ஒளியென்பது பதம்.

(பொ.) சகலவகை ஒளியும் ஒளியாகா. சாந்தரூபிகளுக்கு என்றென்றும் அவியா ஒளியே ஒளியென்பது பொழிப்பு.

(க.) சகலவகை ஒளிகளுந் தோன்றி தோன்றி கெடுவதியல்பாதலின் பொய்யகற்றிய சாந்தரூபிகளுக்கு என்றென்றுங் கெடா மெய்யொளியே ஒளி என்பது கருத்து.

(வி.) உலகத்தோர் ஏற்றிவரும் விளக்காகிய ஒளிகள் யாவும் ஏற்றயேற்ற அவிந்துபோவதே சுவாபீகமாயினும் சாந்தரூபிகளாம் மேன்மக்களுக்கு பொய்யாது நின்ற, என்றுங்கெடா மெய்விளக்கே சகலருள்ளத்திலும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றும் விளக்காக ஒளிருகின்றபடியால் அதனை பொய்யாவிளக்கே விளக்கென்று கூறிய விரிவு.

10.யாமெய்யாக் கண்டவற்று ளில்லையெனைத் தோன்றும்
வாய்மெயி னல்ல பிற.

(ப.) யாமெய்யாக் - யாமநுபவத்தில், கண்ட வற்று - பார்த்தவைகளில், ளில்லை - யாதொன்றுமில்லை, யெனைத்தோன்றும் - எனக்குக் காணப்படுவதுயாதெனில், வாய்மெயி - மெய்யைக் கண்டடைவதைவிட, எல்லாபிற - வேறு நன்றென்பதில்லையென்பது பதம்.

(பொ.) யாம் அநுபவத்தில் பார்த்தவைகளில் யாதொன்றுமில்லை. எனக்குக் காணப்படுவது யாதெனில் மெய்யைக் கண்டடைவதைவிட வேறுநன்றென்பதில்லை என்பது பொழிப்பு.

(க.) நாம் நமதனுபவத்திற் கண்டுவருபவற்றுள் யாதொன்றையுங் காணோம். எமதநுபவத்திற் கண்டும் அநுபவித்தும் வரும் நான்கு வாய்மெ கண்டு தெளிவதினும் வேறொன்றுமில்லை என்பது கருத்து.

(வி.) யாம் உலகத்திற் கண்டுவருந்தோற்றங்களில் யாதொன்றையும் காணோம். எனதநுபவத்திலும் பார்வையாலுங் கண்ட மெய்கள் யாதெனில் மாறிமாறி பிறப்பது மெய், பிணி தோன்றுவது மெய், மூப்படைவது மெய், மரணமுண்டாதல் மெய் எனக் கண்டுதெளிந்து கடிகைக்குக் கடிகை தோற்றி அழியும் பொய்யினை அகற்றி பிறப்பது துக்கம், பிணி துக்கம், மூப்பு துக்கம், மரணதுக்கம் உண்டாவது மெய்யேயென்றுணர்ந்து அத்துக்கத்தையும், அத்துக்க உற்பவத்தையும், அத்துக்க நிவாரணமார்க்கத்தையும், துக்கநிவாரணத்தையுங் கண்டுதெளிய வேண்டியதே அநுபவமும், நோக்கமுமே ஆதலின் நான்கு வாய்மெய்க்கு மேலாயது வேறில்லை என்பது விரிவு.

23. புறங்கூறாமெய்

இல்லறமக்கள் பஞ்சபாதகங்களை அகற்றி வாழ்க்கைப்பெறுவதில் தம்மெ ஒத்த மக்களைக் காணுமிடத்துப் புகழ்தலுங் காணாவிடத்து இகழ்தலுமாகியப் புறங்கூறுவோனது செயலை இவ்விடம் விளக்குகின்றார்.