பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/675

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 665


(பொ.) தனக்கு அன்னியமானவர்களது குறைகளைக் காண்பதுபோல் தனது குறைகளைக் கண்டுணர்ந்துக்கொள்ளுவானாயின் பிறகு வேறு தீங்குகளுண்டோ அன்னிய சீவப்பிராணிகளுக்கு என்பது பொழிப்பு.

(க.) அன்னியனிடம் உண்டாகுங் குற்றங்களைக் கண்டுகொள்வதுபோல தன்னுடைய குற்றங்களையும் உணர்ந்து அடங்குவானாயின் பிறவுயிர்களுக்கு யாதொரு தீங்கு உண்டாகாம் என்பது கருத்து.

(வி.) உலகத்துள் வாழும் மக்களுள் அவன் பொய்யன், இவன் கள்ளன் உவன் குடியனென அவர்களது செயல்களை உணர்ந்து அவற்றைத் தீயச்செயல்கள் என்றுணர்ந்து புறங்கூறுவோன் தனக்குள்ளத் தீயச்செயல்களைக் கொடிது என்றுணர்ந்து அடங்குவானாயின் அன்னியப் பிராணிகளுக்கு யாதொரு துக்கமும் அணுகாது என்பது விரிவு.

24. பயனில் சொல்லாமெய்

மக்களுள் புறங்கூறா வகையை விளக்கியும் நாவினின்று எழும் சொற்களில் மற்றோருக்குப் பயனைத் தரத்தக்க மொழிகளைப் பேசவேண்டுமே அன்றி பயனற்ற மொழிகளைப் பேசுவதால் பொய்மொழி, இழிமொழி, கடுமொழி முதலிய தோன்றி தன்னை துன்பத்திற்கு ஆளாக்குவதுடன் எதிரிக்கு ஓர் பயனின்றி துன்பத்தை விளைவிக்குமாதலின் எக்காலும் பயனற்ற மொழிகளைப்பேசி வீண்காலம் போக்காது எதிரிக்குந் தனக்கும் பயனைத் தரக்கூடிய அறநெறிகளைப் பேச வேண்டியதே இல்லறவாழ்க்கைக்கு இனிதென் றுணர்ந்த பெரியோன் பயனிலா மொழிகளைப் பேசலாகாதெனக் கூறியுள்ளார்.

1.பல்லார் முநியப் பயனில சொல்லுவா
னெல்லாரு மெள்ளப் படும்.

(ப.) பல்லார் - பலகலை யாய்ந்த பெரியோர், முநிய - அருவெறுக்க, பயனில - அப்பிரயோசன மொழிகளை, சொல்லுவா - பேசுவோனை,னெல்லாரு - சகலரும், மெள்ளப்படும் - வெறுப்பார்களென்பது பதம்.

(பொ.) பலகலை ஆய்ந்த பெரியோர் அருவெறுக்க அப்பிரயோசன மொழிகளைப் பேசுவோனை சகலரும் வெறுப்பார்கள் என்பது பொழிப்பு.

(க.) நீதி நெறி வாய்மெகளை உணர்ந்த விவேக மிகுத்தோர்முன் அருவெறுக்கு மொழிகளைப் பேசுவோனை சகலரும் இகழ்வார்கள் என்பது கருத்து.

(வி.) பலகலைகளை ஆய்ந்து விவேகமிகுத்துள்ள மேன்மக்கள்முன் சென்று அவர்கள் அருவெறுக்கத்தக்கப் பயனிலா மொழிகளைப் பேசுவோரை மற்றுமுள்ள சகலரும் வெறுப்பதுடன் தானுங்கெடுவான் என்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் "தண்டாமம் பொய்வெகுளி பொய்ச்சாப் பழுக்காமெ யைந்தே கெடுவார்க்கியல்பென்ப - பண்பாளா, யீதலறிதலியற்றுதலின் சொற்கற், றாய்தலறிவார்தொழில்" என்பதுகொண்டு முன்பின் ஆய்ந்து பயனுள மொழி கூறவேண்டும் என்பதே விரிவு.

2.பயனில பல்லோர்முற் சொல்ல நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது.

(ப.) பயனில - அப்பிரயோசன மொழிகளை, பல்லோர்முற் - பலகலை யாய்ந்த நல்லோர்முன், சொல்ல - மொழிதலானது, நட்டார்கட் - தன்னைக் காப்பாற்றியவர்களுக்கு, நயனில - கொடியச்செயலை, செய்தலிற் - செய்தலினும், றீது - கொடிது யென்பது பதம்.

(பொ.) அப்பிரயோசன மொழிகளை பலகலை ஆய்ந்த நல்லோர்முன் மொழிதலானது தன்னைக் காப்பாற்றியவர்களுக்குக் கொடியச்செயலை செய்வதினுங் கொடிது என்பது பொழிப்பு.

(க.) கலை நூற்கள் யாவையும் நன்குணர்ந்து அடங்கியுள்ள மேன் மக்களிடஞ் சென்று பயனிலா சொற்களைப் பேசுதல், தன்னைக் காப்பாற்றியவர்களுக்குக் கேடுவிளைவிப்பதினும் அஃது கொடிது என்பது கருத்து.