பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

672 / அயோத்திதாசர் சிந்தனைகள்


10.எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமெ யில்.

(ப.) எண்சேர்ந்த - எட்டுவகை யுறுப்பினமைந்த, நெஞ்சத்திட - மனவுறுதி, னுடையார்க் - உடையவர்களுக்கு, கெஞ்ஞான்றும் - எக்காலத்தும், பெண்சார்ந்தாம் - மனைவியினது வாக்குக்கடங்கி நடக்கும், பேதைமெயில் - அறிவிலிச்செயல் தோற்றமாட்டாதென்பது பதம்.

(பொ.) எட்டுவகை உறுப்பினமைந்த மனவுறுதி உடையவர்களுக்கு எக்காலத்தும் மனைவியினது வாக்குக்கடங்கி நடக்கும் அறிவிலிச்செயல் தோற்றமாட்டாது என்பது பொழிப்பு.

(க.) எண்வகை உறுப்பில் நிலைத்து மனவுறுதிபெற்றவர்கள் தங்கள் மனையாளை அடக்கி ஆண்டு வருவார்களேயன்றி அவர்கள் வாக்குக்கு அடங்கி அவர்களால் ஆளும் அறிவிலிகளெனத் தோற்றமாட்டார்கள் என்பது கருத்து.

(வி.) எண்வகை உறுப்புகளாம் ஐயநீக்கல், அவாவறுத்தல், நிந்தையகற்றல், மயக்கொழித்தல், செய்பழி நீக்கல், அழிவோரைக் காத்தல், அன்பை வளர்த்தல், அறவுரை கூறலுடையச்செயலில் உறுதி பெற்ற மனோதிடமுள்ள புருடர்கள் தங்கள் மனையாளது மையல்வாக்குக்கு அடங்கியும் அவர்களுக்கு ஒடுங்கியுந் தங்களை அறிவிலிகளென்றுகூற வைத்துக்கொள்ள மாட்டார்களென்பதற்குச் சார்பாய் எண்சேர்ந்த காட்சி அருங்கலைச்செப்பு “எட்டுவகையுறுப் பிற்றாகியியன்றது, சுட்டிய நற்காட்சிதான்”, அறிநெறிச்சாரம் “ஐயமவாவே யுவர்ப்புமயக்கின்மெ, செய்பழிநீக்க நிறுத்துதல் - மெய்யாக, அன்புடைமெ யான்ற வறவிளக்கஞ்செய்தலோ, டென்றிவையெட்டாமுறுப்பு” என்பது கொண்டு எண்சேர்ந்தோர் பெண்சார்ந் தடங்கார்கள் என்பது விரிவு.


26. தீவினையச்சம்

இல்லறத்திருந்து நல்லறம் நடத்தவேண்டியவன் அஃதை மறந்து கொடுஞ்செயல்களாம் தீவினைகளைச் செய்வானாயின் வழிபடு நல்லறங்கெடுவதுடன் அவனும் அவனில்லாளும் புத்திரர்களுங் கெடுவார்களென்று உணர்ந்த நமது நாயன் பெண்வழி சேரலை விளக்கி அதன்பின் தீவினையின் கேடுகளை உணர்த்தலானார்.

1.தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செருக்கு.

(ப.) தீவினையா - கொடுஞ்செயலினையுடையோர், ரஞ்சார் - ஏதுக்கும் பயப்படார்கள், தீவினையென்னுஞ் - கொடியச்செயல்களென்னும், செருக்கு - அகங்காரத்திற்கு, விழுமியா - ஒடுங்கிய நல்லோர், ரஞ்சுவர் - பயப்படுவார்களென்பது பதம்.

(பொ.) கொடுஞ்செயலினையுடையோர் ஏதுக்கும் பயப்படார்கள், கொடியச் செயலென்னும் அகங்காரத்திற்கு ஒடுங்கிய நல்லோர் பயப்படுவார்கள் என்பது பொழிப்பு.

(க.) எக்காலுங் கொடியச் செயல்களையே செய்துவருவோர் யாதுக்கும் அஞ்சார்கள். ஒடுக்கத்தை நாடியுள்ள நல்லோர்கள் கொடுஞ்செயல்கள் யாவற்றிற்கும் அஞ்சியே நிற்பார்கள் என்பது கருத்து.

(வி.) பொய், கொலை, களவு, விபச்சாரங், கள்ளருந்தல் முதலியத் தீயச்செயல்களையுடையோர் குருநிந்தையாகும் மற்றுங் கொடூரச் செயல்களுக்கு அஞ்சமாட்டார்கள். நீதிநெறியொழுக்கங்களைப் பின்பற்றிய பெரியோர் தீயவினைகளாகும் கொடுஞ்செயல்களுக்குப் பயந்து நிற்பார்கள் என்பது விரிவு.

2.தீயவை தீய பயத்தலாற் றீயவை
தீயிலு மஞ்சப் படும்.

(ப.) தீயவை - கொடுஞ்செயற்களை, தீய - இன்னுங் கொடிதாக, பயத்தலாற் - செய்வதினால், றீயவை - அக் கொறூரச்செயலைக் காண்போர், தீயிலு நெருப்பினும், மஞ்சப்படும் - அதிகம் பயப்படுவரென்பது பதம்.