பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/683

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 673


(பொ.) கொடுஞ்செயல்களை இன்னுங் கொடிதாகச் செய்வதினால் அக்கொறூரச் செயலைக் காண்போர் நெருப்பினும் அதிகம் பயப்படுவார்கள் என்பது பொழிப்பு.

(க.) எக்காலுந் தீயச் செயல்களையே மேலுமேலுஞ் செய்து வருவோர்களைக் காண்போர் அவர்களை அக்கினிக்குங் கொடியோர் என அஞ்சி அகலுவார்கள் என்பது கருத்து.

(வி.) சீவகாருண்யம் என்னுஞ் செயலற்று மக்கள் ஈறாகவுள்ள சீவராசிகளுக்கு எக்காலுந் துன்பத்தையே செய்துவருவோர்களைக் காணும் சருவ சீவராசிகளும் தீயைக்கண்டு அஞ்சுவதினும் தீயச்செயலுள்ளோருக்கு அதிகம் அஞ்சுவார்கள் என்பது விரிவு.

3.அறிவினு ளெல்லாந் தலையென்பதீய
செறுவார்க்குஞ் செய்யா விடல்.

(ப.) அறிவினுளெல்லாந் - விவேகமிகுதியைநாடுபவற்றுள், தலையென்ப - விவேகமுதல் யாதெனில், தீய - கொடியத் தீங்குகளை, செறுவார்க்குஞ் - செய்யும்படியானவர்களுக்கு, செய்யாவிடல் - பிரதிதீங்கு செய்யாதிருப்பதா மென்பது பதம்.

(பொ.) விவேகமிகுதியை நாடுபவற்றுள் விவேகமிகுதி யாதெனில் கொடியத்தீங்குகளைச் செய்யும்படியானவர்களுக்குப் பிரதி தீங்கு செய்யாதிருப்பதாம் என்பது பொழிப்பு.

(க) அறிவினது விருத்திகள் யாவற்றினும் மேலாய அறிவு யாதெனில் அன்னியர் செய்யுந் தீங்குகளுக்கு பதிலாய தீங்கு செய்யாதிருப்பதேயாம் என்பது கருத்து.

(வி.) கலை நூற்களைவாசித்து அறிவினை விருத்திச்செய்ய முயல்வோர்க்கு முதலாய அறிவின் செயல் யாதெனில் தங்களுக்கோர் துன்பத்தை விளைவிப்போருக்குத் தாங்களும் முயன்று பிரதி துன்பஞ் செய்யாதிருப்பதே தலையாய அறிவு என்பது விரிவு.

4.மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி
னறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.

(ப.) மறந்தும் - தான் கற்றவைகளை மறந்தும், பிறன்கேடு - அன்னியனது தீங்குகளை, சூழற்க - உள்ளத்தி லூன்றாதகற்றல்வேண்டும், சூழில் - உள்ளத்தி லூன்றுவதாயின், னறஞ்சூழ் - சேர்ந்துள்ள தன்மங்கள் யாவும், சூழ்ந்தவன் - தீங்கினை யூன்றியவனுக்கு, கேடு - கெடுதியாக முடியுமென்பது பதம்.

(பொ.) தான் கற்றவைகளை மறந்தும் அன்னியனது தீங்குகளை உள்ளத்தில் ஊன்றாது அகற்றல் வேண்டும். உள்ளத்தில் ஊன்றுவதாயின் சேர்ந்துள்ள தன்மங்கள் யாவும் தீங்கினை ஊன்றியவனுக்குக் கெடுதியாக முடியும் என்பது பொழிப்பு.

(க.) கற்றக் கலை நூற்களை மறந்த போதினும் அன்னியர் செய்த தீங்குகளை மனதில் ஊன்றாது அகற்றல் வேண்டும். அகலாது நிலைக்கச் செய்வதாயின் சேர்ந்துள்ள தன்மங்கள் யாவற்றிற்குங் கேடுண்டாகிப்போம் என்பது கருத்து.

(வி.) நீதி நூற்களை மறந்த போதினும் அன்னியனது தீங்குகளை மறவாதிருத்தல் செய்துள்ள தன்மங்கள் யாவையும் அகற்றும் வழிக்கு பீடமிட்டிடலால் அன்னியனது தீங்கினை மறத்தல் வேண்டும். மறவாதிருப்பின் அதுவே அவனுக்கோர் கேடாக முடியும் என்பது விரிவு.

5.இலனென்று தீயவை செய்யற்க செய்யி
னிலனாகு மற்றும் பெயர்த்து.

(ப.) இலனென்று - யாதொருவுதவியுமற்றவனென்று, தீயவை - கொடியச் செயல்களை, செய்யற்க - அவனுக்குச் செய்யாதகலுக, செய்யி - கொடுஞ்செயற்புரிவதாயின், மற்றும் - தனக்குள்ள சுற்றத்தோர், பெயர்த்து - அகன்று, னிலனாகி - உதவியில்லாமற் போமென்பது பதம்.

(பொ.) யாதொரு உதவியுமற்றவனென்று கொடியச்செயல்களை அவனுக்குச் செய்யலாகாது. கொடுஞ்செயற் புரிவதாயின் தனக்குள்ள சுற்றத்தோர் அகன்று உதவியில்லாமற்போம் என்பது பொழிப்பு.