பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 675

தடியுரைந்தற்று - தனது பாதத்தைத் தொடர்ந்து நிற்பதுபோ லிருக்குமென்பது பதம்.

(பொ.) கொடிய துன்பங்களைச் செய்வோர்களுக்குக் கேடானது தன்னுடைய நிழலகலாது தனது பாதத்தைத் தொடர்ந்துநிற்பது போலிருக்கும் என்பது பொழிப்பு.

(க.) தன்னுடைய நிழலானது தனது பாதத்தைத் தொடர்ந்தே நிற்பதுபோல தான் செய்தத் தீவினையாங் கொடியச் செயல்களானது தன்னைக்கெடுத்தற்குத் தொடர்ந்தே நிற்கும் என்பது கருத்து.

(வி.) நடக்கினும் நிற்கினும் ஓடினுந் தன்னுடைய நிழலானது தன் பாதத்தைத் தொடர்ந்தே நிற்பதுபோல தான் அன்னியருக்குச் செய்தத் துன்பங்களானது ஓடினும் ஒளியினும் மறுபிறவி மாறினும் விடாது தொடர்ந்தே கேடினைத் தரும் என்பது விரிவு.

9.தன்னைத்தான் காதல னாயி னெனைத்தோன்றுந்
துள்ளற்க தீவினைப் பால்.

(ப.) தன்னைத்தான் - தானே தன்னை , காதலனாயி - நேசிப்பவனாயின், தீவினைப்பால் - கொடியச்செயலென்னு மொன்றை மட்டிலும், னெனைத்தோன்றுந் - எள்ளளவேனுந் தோன்றவிடாது, துன்னற்க - நேசிக்கா தகற்றவேண்டுமென்பது பதம்.

(பொ.) தானே தன்னை நேசிப்பவனாயின் கொடியச் செயலென்னும் ஒன்றை மட்டிலும் எள்ளளவேனுந் தோன்றவிடாது, நேசிக்காது அகற்றவேண்டும் என்பது பொழிப்பு.

(க.) உண்மெய்யாந் தன்னில் அன்பை வளர்த்தவேண்டியவன் தன்னுள் எழுங் கொடியச்செயலை மட்டிலும் எழவிடாமல் அகற்றவேண்டும் என்பது கருத்து.

(வி.) தன்னைத்தானே நேசித்துத் தனக்கோர் துன்பமுமணுகாமல் காத்துக்கொள்ளவேண்டியவன் அன்னியனுக்கோர் துன்பத்தைத் தோன்ற வைக்காது காத்துக்கொள்ளவேண்டும் என்பது விரிவு.

10.அருங்கோட னென்ப தறிக மருங்கோடித்
தீவினைச் செய்யா னெனின்.

(ப.) மருங்கோடி - மக்கள்பக்கச்சென்று, தீவினை - கொடுஞ் செயல்களை, செய்யானெனின் - செய்யாதிருப்பானாயின், அரு - அருள்நிறைந்தோர், கோடனென்ப - மரபினையுடையோனென்று, தறிக - தெரிந்துக்கொள்ள வேண்டுமென்பது பதம்.

(பொ.) மக்கள் பக்கஞ் சென்று கொடுஞ்செயல்களைச் செய்யாதிருப்பானாயின் அருள் நிறைந்தோர் மரபினையுடையோனென்று தெரிந்துக் கொள்ளல் வேண்டும் என்பது பொழிப்பு.

(க.) அருளினைநிறைந்த கூட்டத்தைச் சேர்ந்தோன் மற்றுமுள்ள மக்களை நாடியவர் பக்கஞ்சேரினுந் தீவினையாங் கொடுஞ் செயல்களைச் செய்யான் என்பது கருத்து.

(வி.) அன்பின் பெருக்கத்தையே பீடமாக நின்றொழுகும் அருள்நிறைந்தோர் மரபில் நின்று ஒழுகினோன் மற்றுள்ள மக்கள் பக்கஞ் சேரினும் தீவினைச்செய லற்றுள்ள தோற்றத்தாலவனை அருங்கோடன் என்றறிதற்கு ஆதாரமானான். தீயவினைகள் யாதெனில்:- தேகத்தால் நிகழுங் கொலை, களவு, காமம் மூன்றும், வாக்கால் நிகழும் பொய், குறளை, கடுஞ்சொல், பயனிலாச்சொல் நான்கும், மனத்தால் நிகழும் வெஃகல், வெகுளல், பொல்லாக்காட்சி மூன்றும் ஆகிய பத்துமே என்பதற்குச் சார்பாய் மணிமேகலை "தீவினையென்பதியாதெனவினவி, னாய்தொடி நல்லாயாங்கது கேளாய், கொலையே களவே காமத்தீவினை, யலையாதுடம்பிற்றோன்றுவமூன்றும், பொய்யேகுறளை கடுஞ்சொல் பயனில், சொல்லே சொல்லிற் றோன்றுவ னான்கும், வெஃகல் வெகுளல் பொல்லாக்காட்சி, யென்றுளந்தனினுருப்ப மூன்றுமெனப், பத்து வகையாற்