பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

678 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(வி.) நீர்வளம்பெருகி நிலவளம் ஓங்குமாயின் உலகமும் உலகமக்களும் சிறப்பைப் பெறுவதுபோல விவேக மிகுத்தோன் தனக்குள்ள செல்வத்தைக் கொண்டே உபகாரியாக விளங்குதலினால் செல்வன் என்று அழைக்கப்படுகின்றான். செல்வமிருந்தும் உபகாரமற்று வாழ்வானாயின் உலோபியென்று அழைக்கப்படுவான் என்பது விரிவு.

6.பயன்மர முள்ளூர்ப் பழத்தற்றாற் செல்வ
நயனுடை யான்கட் படின்.

(ப.) பயன்மர - பிரயோசனமானக் கனியைக்கொடுக்கும் விருட்சம், முள்ளூர் - ஊர்மத்தியில், பழுத்தற்றாற் - கனிந்துவிழுவதுபோல், செல்வ - திரவியமானது, நயனுடையான்கட் - கிருபை நிறைந்தவனிடத்து, படின் - அமையி லென்பது பதம்.

(பொ.) பிரயோசனமானக் கனியைக்கொடுக்கும் விருட்சம் ஊர்மத்தியில் கனிந்து விழுவதுபோல் திரவியமானது கிருபை நிறைந்தவனிடத்து அமையில் என்பது பொழிப்பு.

(க.) நல்ல கனியைக் கொடுக்கும் மரத்தின் பழம் உள்ளுர் மத்தியில் கனிந்துவிழுந்து சகலசீவர்களும் உண்பதற்கு உதவுதல்போல் கிருபை நிறைந்தவனிடத்து செல்வமும் நிறையுமாயின் சகலமக்களுக்கும் உபகாரியாக ஒழுகுவான் என்பது கருத்து.

(வி.) சகலசீவர்களும் உண்பதற்குரிய கனியைத்தரும் விருட்சமானது உள்ளூர் மத்தியில் கனியை உதிர்ப்பதுபோல சீவகாருண்யம் நிறைந்தவனிடத்து செல்வமும் வந்தமருமாயின் ஒப்புரவோருக்கும் ஏனைய சீவராசிகளுக்கும் உபகாரியாக விளங்குவான் என்பது விரிவு.

7.மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்.

(ப.) செல்வம் - திரவியமானது, பெருந்தகையான்கட் - பேராசை யுடையோனிடத்து, படின் - சேருவது, மருந்தாகி - எட்டிக்கனி, தப்பா - தவிராது, மரத்தற்றாற் - மரத்தடியில் கனிந்து வீழ்வதற்கொக்குமென்பது பதம்.

(பொ.) திரவியமானது பேராசை உடையோனிடத்து சேருவது எட்டிக்கனி தவிராது மரத்தடியில் கனிந்து வீழ்வதற்கு ஒக்கும் என்பது பொழிப்பு.

(க.) உலோபியி னிடத்துப் பொருள் சேருவது எவ்வகையாக விளங்குமென்னில் எட்டிமரத்தடியில் கனிகள் வீழ்ந்து குப்பல் சேர்வதுபோலாம் என்பது கருத்து.

(வி.) சருக்கரையைக் கையிலேந்தி மருந்தென்றுகூறி கொடுப்பதாயின் கசக்குமென்று பயந்து எட்டி அகல்வது இயல்பாதலின் எட்டி என்னும் மருந்தாய கனி ஏராளமாக மரத்தடியில் வீழ்ந்திருப்பினும் அக்கனி எச்சீவர்கள் உணவிற்கும் உதவாததுபோல பேராசையுடையோனிடம் படியுந் திரவியமானது பல்லோருக்கும் பயன்படாது என்பதற்கு ஒக்கப் பழமொழி "எட்டிப்பழுத்தாலென்ன ஈயாதவன் வாழ்ந்தாலென்ன" என்பது விரிவு.

ஓடதி நிகண்டில் எட்டி யென்பதற்குப் பொருள் கசப்பு, மருந்து, என்னும் பொருளைத்தரும்.

8.இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.

(ப.) இடனில் - தனக்கு வாசஞ்செய்ய யிடமில்லாத, பருவத்து - காலத்தினும், மொப்புரவிற் - ஒப்பிய வுரவினர்க்குச் செய்யும் உபகாரத்தில், கொல்கார் - தளரமாட்டார்கள், கடனறி - தான் செய்ய வேண்டிய செயலினை யுணர்ந்த, காட்சியவர் - நற்காட்சி யுள்ளவர்களென்பது பதம்.

(பொ.) தனக்கு வாசஞ்செய்ய இடமில்லாதகாலத்தும் ஒப்பிய உரவினர்க்குச் செய்யும் உபகாரத்தில் தளரமாட்டர்கள், தான் செய்யவேண்டிய செயலினையுணர்ந்த நற்காட்சியுள்ளவர்கள் என்பது பொழிப்பு.