பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 59

மூவாயிர வருடங்களுக்குமுன் சாக்கையகுல சக்கரவர்த்தியின் திருமகனாகப் பிறந்து மநுட சீவர்களுக்கு உண்டாகும் துக்கங்களை நிவர்த்தி செய்வதற்கான வழியைக்கண்டு தெளிவிக்க வேண்டும் என்னும் கருணையால் இருபத்தியோராவது வயதில் இராசாங்கத்தைத் துறந்து வெளிவந்து ஒன்பது வருடகாலம் பலதேசங்களிற் சென்று விசாரித்தும் துக்க நிவர்த்தியைக் கண்டடைந்தவர் ஒருவருமில்லாதபடியால் தனக்குள்ள அன்பை ஒருருவமாகப் பெருக்கி அகிம்சை - சத்தியம் - ஆஸ்தேயம் பிராமசரியம் - மிதாகாரம் - சவுசம் எனும் தசதீட்சையுற்று முப்பதாவது வயதில் பங்குனி மாத பௌர்ணமி திதியில் ஓர் அரசமரத்தடியில் உட்கார்ந்து தன்னைத்தான் உணர்ந்து ததாகதம் பெற்றவுடன் ஞானக்கண் திறந்து காமன் என்னும் மன்மதனாகிய தன் மனதையும் காலன் என்னும் மரணத்தையும் ஜெயித்து பெண்ணாசை - மண்ணாசை - பொன்னாசை எனும் முப்புரங்களையும் எரித்து அநித்திய - அனாத்தும நிர்வாணமெனும் நாமரூபம் இரண்டும் அற்ற அத்துவிதமானவுடன் அம்மோனானந்த சுகவழியை சருவ சீவர்களுக்கும் போதித்த அந்நாளின் புகழ்ச்சியை பூர்வ புத்தமார்க்க அரசர்கள் ஒவ்வொருவரும் அந்தந்த வருட பங்குனிமாத பௌர்ணமியில் குடிகளுக்கு பறையரை வித்து தேச சிங்காரஞ் செய்து நீர்விளையாடி ஏழைகளுக்கு தானஞ் செய்துவந்தார்கள், (காமன் பண்டிகை) என்பதில் காமன் என்பதை ஆனந்த நிலையாகவும், பண்டிகை என்பதை பூர்வ தருமம் அதாவது பண்டைகால ஈகை என்றும் கூறப்படும்.

தற்காலம் அதை அனுசரித்துவரும் பூர்வபுத்தமார்க்கத்தோரிற் சிலர் பங்குனிமாத பௌர்ணமியில் காமன் கூத்தென்று ஓர் ஆனந்தங் கொண்டாடியும் வருகின்றார்கள். மற்றுமுள்ள சிலர் நீர்விளையாடி தீபம் ஏற்றி வருகின்றார்கள்.

நூலாதார நிரூபகம் - மணிமேகலை

ஆலமர்ச்செல்வன் மதன்விழாக்கோல்கொள.

காமன் ஐங்கணை - 12-நிகண்டு

அசைவிலா வனசஞ்சூத மசோகமே முல்லைநீலம்
ஒசியும் வேள் கணைகளாகும் உன்மத்த மதனமோகம்
வசையில் சந்தாபத்தோடு வசிகரணங்களும்பேர்
இசையுமற்றிவைகள் செய்வதே யிடு மவத்தையு மேற்சொல்வாம்.
ஆதியில் காமனையுங் காலனையும் வென்று விளக்கியவர் புத்தர்.

மணிமேகலை

அருளறம் பூண்ட வொரு பெரும் பூட்கையின்
அறக்கதிராழி திறப்பட வுருட்டிய
காமற்கடந்த வாமன் பாதம் - மாரனை வெல்லும் வீரநின்னடி.

வீரசோழியம்

வாடாப்போதி மரகதப்பாசடை
மர நிழ லமாந்தோன் நெஞ்சம்
யாவாக்கு மருளின்றீந் தேநிறைந்து நனிஞெகிழ்ந்து
மலரினி மெல்லியரென் பரதனைக்காமர்செல்வி
மாரன் மகளீர் நெடு மாமழைக்கண் விலங்கி
நிமிர்ந்தெடுத்தவாளும் போழ்ந்திலவாயின்
யாதோ மற்றது மெல்லியவாறே
மாரனிதையாவேட்டு மன்னுபுற மெரித்தனையே

- 1:29; சனவரி 1, 1908 –

சூளாமணி

ஆதியங்கடவுளை யருமறை பயந்தனை
போதியங் கிழவனை பூமிசை யொதுங்கினை
போதியங் கிழவனை பூமிசை யொதுங்கிய
சேதியஞ் செல்வ நின்றிருவடி வணங்கினம்
காமனைக் கடிந்தனை காலனைக் காய்ந்தனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
மாமலர் வண்ண நின் மலரடி வணங்கினம்.

புத்தர் காமனையுங் காலனையும் வென்ற சரித்திராதரவைக் கொண்டு புத்தமார்க்க அரசர்கள் காமன் பண்டிகை கொண்டாடி வந்த விவரம்.