பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/692

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

682 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(பொ.) பசிப்போர் முகம்பார்த்து உணவை அளிக்கும் ஒருவனை பசியாக்கினியாம் கொடுநோய் அணுகாது என்பது பொழிப்பு.

(க.) கடும் பசியால் வருந்துவோனது முகம்பார்த்து உணவளிக்கும் ஒருவனுக்கு அத்தகையக் கடும்பசி அடையும் அரிய காலம் வாராது என்பது கருத்து.

(வி.) சீவகாருண்யமுள்ள ஒருவன் பசியுள்ளோன் முகங்கண்டு உணவளிக்குஞ் செயலால் அக்கருணைச் செல்வமே நிறைந்து சுகசீவியாக வாழ்தலால் பசியென்னுந் தீப்பிணி அவனை என்றும் அணுகாது என்பது விரிவு.

8.ஈத்துவக்கு மின்ப மறியார்கொறா முடைமெ
வைத்திழக்கு வன்க ணவர்.

(ப.) ஈத்துவக்கு - ஈய்ந்து காக்கும், மின்ப - சுகத்தை, மறியார்கொ - தெரிந்துக்கொள்ளாதோர், றாமுடைமெ தங்கட்பொருட்களை, வைத்திழக்கு - சேர்த்திழந்துவிடுவார், வன்கணவர் - இதக்கமற்ற நெஞ்சினர்களென்பது பதம்.

(பொ.) ஈய்ந்து காக்குஞ் சுகத்தைத் தெரிந்து கொள்ளாதோர் தங்கள் பொருட்களை சேர்த்து இழந்துவிடுவார், இதக்கமற்ற நெஞ்சினர்கள் என்பது பொழிப்பு.

(க.) ஏழைகளுக்கு உண்டிகொடுத்து உண்ணும் சுகமறியாது இதக்கமற்ற நெஞ்சினார்கள் சேர்க்குஞ் செல்வத்தைத் தாங்கள் அறியாமலே இழந்து விடுவார்கள் என்பது கருத்து.

(வி.) வரியார்களுக்கு உண்டி கொடுத்து உயிரளிக்குஞ் சுகத்தையும் புண்ணிய பலத்தையும் அறியாது பொருளைச் சேர்த்துவைக்குங் கடின சித்தத்தையுடையவர் தாங்கள் தேடிய பொருளை தங்களை அறியாமலே இழந்துவிடுவார்கள் என்பது விரிவு.

9.இறத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்.

(ப.) நிரப்பிய - செல்வம் நிறைந்து, தாமே - தான், தமிய - தனியே, ருணல் - புசித்தல், இறத்தலி மரித்தோனென்று, னின்னாதுமன்ற - சொல்லுதற் கொப்பானவனே என்பது பதம்.

(பொ.) செல்வம் நிறைந்து தான் தனியே புசித்தல் மரித்தோனென்று சொல்லுதற் ஒப்பானவனே என்பது பொழிப்பு.

(க.) வேணசெல்வம் நிறைந்திருந்தும் தன்மட்டில் புசித்து சுகிப்பவன் இறந்தவருள் ஒருவனாக எண்ணப்படுவான் என்பது கருத்து.

(வி.) உள்ள செல்வத்தை இன்று நாளை என்னாது சகலருக்கும் இட்டுண்டு சுகிப்பதே ஈகையின் இயல்பாதலின் நிறைந்த செல்வமிருந்து சகலருக்கும் இட்டுண்ணாது தானே புசித்து சுகிப்பவனுக்கும் மரணமடைந்தோனுக்கும் பேதமில்லை என்பதே விரிவு.

10.சாதலி னின்னாத லில்லை யினிததூஉ
மீத லியையாக் கடை.

(ப.) சாதலி - மரணமடைதலினும், லின்னாத - கொடிய துன்பம், தில்லை - வேறொன்றுமில்லை, யினிததூஉ - மற்றுமினியதாகப் பொருள் சேர்த்தும், மீத - ஈயுங் குணம், லியையா - இசையாதாயின், கடை - அதனினுங் கொடிதாமென்பது பதம்.

(பொ.) மரணமடைதலினும் கொடிய துன்பம் வேறொன்றுமில்லை. மற்றும் இனிதாகப் பொருள் சேர்த்தும் ஈயுங்குணம் இசையாதாயின் அதனினுங் கொடிதாம் என்பது பொழிப்பு.

(க.) மக்களுக்கு மரணமுண்டாவதே கொடிய துன்பமென்னப்படும். அதனினுங் கடையாய கொடிய துன்பம் ஆசையுடன் பொருள் சேர்த்தும் ஈயுங்குணம் இசையாததே என்பது கருத்து.

(வி.) மரணமானது பிணியின் உபத்திரவத்தாலும் பஞ்சவவத்தையாலும் உண்டாய கொடிய துன்பமேயாயினும், செல்வத்தை இனிதாக சேர்த்தும்