பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/694

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

684 / அயோத்திதாசர் சிந்தனைகள்


4. நிலைவரை நீள்புக ழாற்றிற் புலவரை
போற்றாது புத்தே ளுலகு.

(ப.) நிலவரை - பூமியினும், நீள் - பாதாளத்தினும், புகழாற்றிற் (கவியாற) புகழ்பெறினும், புலவரை - வித்வான்களை, போற்றாது - கொண்டாடாது, புத்தேளுலகு - புத்ததேவ னுலகென்பது பதம்.

(பொ.) பூமியினும் பாதாளத்தினும் கவியாற் புகழ்பெறினும் வித்வான்களை கொண்டாடாது புத்ததேவனுலகு என்பது பொழிப்பு.

(க.) மத்திய பாதாளம்வரைப் புகழத்தக்க நாற்கவிபாடினும் புலவரை சுவர்க்கமாம் வானராட்சியம் போற்றாது என்பது கருத்து.

(வி.) வறியார்க்கு ஈய்ந்து வருமெ அகற்றிக்கொள்ளுவோரையே புத்ததேவ னுலகாம் வானராட்சியம் புகழுமேயன்றி நாற்கவிபாடி பூவிலுள்ளோராலும் பாதாளத்துள் உள்ளோராலும் புகழ்பெறினும் வானுலகம் போற்றிப் புகழாது என்பது விரிவு.

5.நத்தம்போற் கேடு முளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது.

(ப.) நத்தம்போற் - இருளைப்போல, சாக்காடும் - மரணத்தின், கேடு - துன்பமானது, முளதாகும் - தன்னை மறைத்தலாகும் (அத்தகைய துன்பமற்றபுகழ்) வித்தகர்க்கல்லா - மெய்ஞ்ஞானப் புலவர்க்கன்றி, லரிது - மற்றயருக் கரிதாமென்பது பதம்.

(பொ.) இருளைப்போல் மரணத்தின் துன்பமானது தன்னை மறைத்தலாகும். அத்தகைய துன்பமற்ற புகழ் மெய்ஞ்ஞானப் புலவருக்கன்றி மற்றயருக்கு அரிதாம் என்பது பொழிப்பு.

(க.) இருளானது சகலவற்றையும் மறைத்து மயக்கிவிடுவதுபோல மரணதுன்பம் தன்னை மயக்கும். அத்துன்பமயக்கத்தை ஜெயித்துப் புகழ்பெறுவோர் தெய்வப்புலவரன்றி ஏனையப்புலவர்களால் ஆகாது என்பது கருத்து.

(வி.) இருள்மூடி உலகத்தை மறைத்துவிடுவதுபோல மரண துன்பமானது தன்னை மறைத்துவிடுவது இயல்பாதலின் அத்தகைய மரண துன்பத்தை ஜெயித்துப் புகழ்பெறுவோர் தன்மபோதமும் மெய்ஞ்ஞானமும் நிறைந்த தெய்வப்புலவர்களேயன்றி சுவையற்றக் கவிபாடும் வித்தியாவிர்த்திகள் ஆகார் என்பது விரிவு.

6.தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
தோன்றலிற் றோன்றாமெ நன்று.

(ப.) தோன்றிற் - ஓர் காரியத்தைத் தொடுத்து வெளிதோன்றில், புகழொடு - அதனாலோர் கீர்த்தியுண்டாக, தோன்றுக - வெளிவரல்வேண்டும், அஃதிலார் - அவ்வகையில்லாதோர், தோன்றலிற் - அக்காரியத்தைக் தொடுத்து வெளிவருதலினும், றோன்றாமெ - உருதோன்றாதிருத்தலே, நன்று - நல்லதாமென்பது பதம்.

(பொ.) ஓர் காரியத்தைத் தொடுத்து வெளிதோன்றில் அதனாலோர் கீர்த்தியுண்டாக வெளிவரல்வேண்டும் அவ்வகையில்லாதோர் அக்காரியத்தைத் தொடுத்து வெளிவருதலினும் உரு தோன்றாது இருத்தலே நல்லதாம் என்பது பதம்.

(க.) ஏதோர் காரியத்தைத் தொடுத்துச்செய்ய ஆரம்பித்தபோதினும் அதனால் ஓர் புகழுண்டாகச்செய்யல்வேண்டும். அத்தகை இல்லாவிடின் அக்காரியத்தைச் செய்யாமலிருப்பதே நன்று என்பது கருத்து.

(வி.) ஓர் காரியத்தைச் செய்யற்கு வெளிதோன்றியகால் அக்காரியமானது சகலமக்களுக்கும் உபகாரமாயிருக்குமாயின் புகழைத்தரும், உபகாரமற்றிருக்குமாயின் பயனில்லையென்பதைக் கண்ட பெரியோன் உபகாரமுற்றச் செயலிலேயே தோன்றல் வேண்டுமென்றும் அத்தகைய உபகாரம் யாதொன்றும் இல்லாதாயின் அச்செயலில் தோன்றாமலிருப்பதே நன்றென்றுங்கூறிய விரிவு.