பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/695

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 685


7.புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மெ
யிகழ்வாரை நோவ தெவன்.

(ப.) புகழ்பட - உபகாரி யென்னுங் கீர்த்தியுண்டாக, வாழாதார் - வாழ்க்கைப் பெறாதவர்கள், தந்நோவார் - தாங்களே துன்புறுவதுடன், தம்மெ - தங்களைக் கண்டு, யிகழ்வாரை - உலோபியென் றிகழ்வோரை, நோவதெவன் - பார்த்து வருந்துவோன் யாவனென்பது பதம்.

(பொ.) உபகாரி என்னுங் கீர்த்தி உண்டாக வாழ்க்கைப் பெறாதவர்கள் தாங்களே துன்புறுவதுடன் தங்களைக்கண்டு உலோபியென்று இகழ்வோரை பார்த்துவருந்துவோன் யாவன் என்பது பொழிப்பு.

(க.) தாங்களே மற்றோருக்கு உபகாரியாக வாழாமல் மற்றொரு உபகாரமற்று துக்கிப்பதுடன் தங்களை உலோபியென்று இகழ்வோரைக் கண்டு தான் துக்கிப்பதில் அவனுக்கு யாது பயன்கொல்லோ என்பது கருத்து.

(வி.) உலக மக்கள் தங்களுடைய சுக வாழ்க்கையில் ஏனைய மக்களையுஞ் சுகம் பெறச்செய்துப் புகழடையாது வாழ்வோர் தனக்கு ஏனையோர் உதவி உண்டாகாதிடத்து வருந்துவதுடன் தங்களையாதொரு உதவியுமற்றவன் என்று ஏனையோர் இகழக்கேட்டு அதனால் துக்கிப்பவனை எத்தகையோன் என்று கூறலாம் என்பது விரிவு.

8.வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு
மெச்சம் பெறாஅ விடின்.

(ப.) மிசையென்னும் - புகழ்பேறென்னும், மெச்சம் - எஞ்சிய பயனை, பெறா அவிடின் - பெற்றுக்கொள்ளாவிடின், வையத்தோர்க்கெல்லா - சகலமக்களாலும், வசையென்ப - உலோபியென்னு மிழிச்சொல்லே யுண்டாமென்பது பதம்.

(பொ.) புகழ்பேறென்னும் எஞ்சிய பயனைப் பெற்றுக்கொள்ளாவிடின் சகலமக்களாலும் உலோபியென்னும் இழிச்சொல்லே உண்டாம் என்பது பொழிப்பு.

(க.) சகல மக்களுக்கும் உபகாரியாக விளங்கி மேலாயப் புகழை பெற்றுக்கொள்ளாவிடின் சகலராலும் உண்டாம் உலோபியென்னும் இழிச்சொல்லே துன்புறுத்தும் என்பது கருத்து.

(வி.) மநுமக்களென்னும் சிறந்த பிறப்பைப் பெற்றவர்கள் அச்சிறப்பைத் தங்கள் உபகாரத்தால் விளக்கிப் புகழ்பேறு பெறாவிடின் மநுக்களுள் மநுக்களாக பாவிக்காது போவதுடன் சகல மநுக்களாலும் உலோபியென்னும் வசைச்சொல்லாம் இழிவையும் அதனால் துக்கத்தையும் அனுபவிக்கவேண்டியது இயல்பாதலின் அவ்வசைச்சொல்லைக் கேட்டுத் துக்கிப்பதினும் அச்சொல்லெழாமலும் துக்கிக்காமலும் உபகாரியென்னும் புகழ்பெற்று வாழ்வதே பயன் என்பது விரிவு.

9.வசையலா வண்பயன் குன்று மிசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

(ப.) வசையலா - இழிய கூறுவதுமட்டுமன்று, மிசையிலா - புகழற்ற, யாக்கை - உடலை, பொறுத்த - தாங்கிய, நிலம் - பூமியின், வண்பயன் - விளைவின் பலனும், குன்று - குறைந்து போமென்பது பதம்.

(பொ.) இழிய கூறுவதுமட்டுமன்று புகழற்ற உடலைத் தாங்கிய பூமியின் விளைவின் பலனுங் குறைந்துபோம் என்பது பொழிப்பு.

(க.) ஈகையினது புகழற்றோனை உலோபி என்னும் வசைமொழி கூறுவதல்லாது அத்தகைய உலோபியின் உடலைத்தாங்கும் பூமியின்வளமுங் குன்றிப்போம் என்பது கருத்து.

(வி.) ஈதலென்னும் புகழற்றோனை உலகமக்கள் உலோபி என்னும் வசைமொழி கூறுவதல்லாது அவ்வுலோபி தங்கியிருக்கும் பூமியின் வளமுங் குன்றி தானியங்களும் விளைவில்லாமற் போம் என்பது விரிவு.