பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/696

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

686 / அயோத்திதாசர் சிந்தனைகள்


நாயன் கூறியுள்ள முதுமொழியினது அநுபவத்தை தற்காலமுள்ள உலோபிகளது செயல்களாலும் பூமிகளின்வளங் குன்றிவருங் காட்சியினாலுந் தெரிந்துக் கொள்ளலாம்.

10.வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய
வாழ்வாரே வாழாதவர்.

(ப.) வசையொழிய - உலோபியென்னு மிழிமொழிபெறாது, வாழ்வாரே - வாழ்க்கைப் பெற்றோரே, வாழ்வா - சுகசீவிகளாக வாழ்வார்கள், ரிசையொழிய - ஈதலில்லாப் புகழகன்று, வாழ்வாரே - வாழ்பவர்களே, வாழாதவர் - சுகசீவவாழ்க்கையை யற்றவர்களென்பது பதம்.

(பொ.) உலோபியென்னு இழிமொழி பெறாது வாழ்க்கைப்பெற்றோரே சுகசீவிகளாக வாழ்வார்கள், ஈதலில்லாப் புகழகன்று வாழ்பவர்களோ சுகசீவவாழ்க்கையையற்றவர்கள் என்பது பொழிப்பு.

(க.) ஈதலென்னும் புகழ் பெற்று உலோபியென்னும் பெயரற்று வாழ்வோர்களே சுகசீவ வாழ்க்கையைப் பெறுவார்கள். உலோபியென்னும் பெயர்பெற்று ஈதலென்னும் புகழற்று வாழ்வோர்களோ சுகசீவ வாழ்க்கையைப் பெறார்கள் என்பது கருத்து.

(வி.) இறைக்குங்கிணறு சுரக்கும் என்னும் பழமொழிக்கிணங்க ஈவோனதுசெல்வம் என்றுங் குறையாது ஓங்குவதுடன் அவனது குணநலத்தால் வாழ்க்கையிலும் சுகசீவ வாழ்க்கையைப் பெறுவான், அங்ஙனமில்லா உலோபி தனது குணக்கேட்டினால் உள்ள செல்வமுமற்று சுகவாழ்க்கையுங் கெட்டு அல்லலடைவான் என்பது விரிவு.

30. துறவியல்

பௌத்த தன்மத்தைச் சார்ந்த குடும்பியானவன் இல்லாளுடனிருந்து அறச்செயலை வழுவற நடாத்துவதில் கொல்லாவிரதத்து ஒழுகலால் சீவகாருண்யமிகுத்தும், பொய்யை அகற்றி வாழ்தலால் மெய்யென்னும் உண்மெ உணர்ச்சி தோன்றியும், களவு அகற்றி வாழ்தலால் பற்றுக்கள் சிலது அகன்றும், அன்னியர் தார இச்சையை அகற்றலால் காமாக்கினி குறைந்தும், மதியை கெடுக்கும் சுராபானங்களை அகற்றலால் நிதானமென்னும் விழிப்பிலிருந்து, இல்லறத்தோர் என்னும் பெயர் பெற்றவன் தனது விசாரிணை மிகுதியால் உலகத்தில் தோன்றும் பொருட்கள் யாவும் க்ஷணத்திற்கு க்ஷணம் அழிந்து மாறுதலுறும் நிலையாமெயாதலின் நிலையுற்ற மெய்ப்பொருளைத் தன்னில்தான் உணர்ந்து ததாகதமாம் நிருவாணம் பெறுதற்கு இல்லறத்தை ஒழித்து துறவறமுற்று பௌத்தசங்கஞ் சேர்ந்து சீரற உடையணிந்து பிச்சா பாத்திரங் கையிலேந்தி உண்மெய்யில் அன்பை வளர்த்திக் கடைத்தேறுமாறு நிலையாமெயை விளக்குகின்றார்.

1.நில்லாத வற்றை நிலையின வென்றுணரும்
புல்லறி வாண்மெ கடை.

(ப.) நில்லாதவற்றை - என்றும் நிலையில்லாப் பொருட்களை, நிலையின - என்றும் உள்ளதென, வென்றுணரும் - எண்ணியிருக்கும், புல்லறி - அறிவற்றவன், வாண்மெ - மநுடரூபியாயினும், கடை- புற்பூண்டுக் கொப்பானவ னாவானென்பது பதம்.

(பொ.) என்றும் நிலையில்லாப் பொருட்களை என்றும் உள்ளதென எண்ணியிருக்கும் அறிவற்றவன் மநுடரூபியாயினும் புற்பூண்டுக்கு ஒப்பானவனாவான் என்பது பொழிப்பு.

(க.) தோன்றி தோன்றி அழியும் பொருட்களைக் கண்ணினாற் கண்டிருந்தும் அதனை அழியாதென்றுணரும் அறிவற்றவன் மநுட ரூபியாயினும் கடை பிறவியாம் புற்பூண்டுகளுக்கு ஒப்பானவனாவான் என்பது கருத்து.

(வி.) பூமியின்கண் தாபரவர்க்கம் முதல் தோற்றமாயினும் செயலின் சிறப்பில் தேவர், மக்கள், விலங்கு, பட்சி, ஊர்வனம், நீர்வாழ்வனம், தாபரமென்னும்