பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/697

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 687

எழுவகைத் தோற்றங்களுள் தேவர்களை முதலாகவும் தாபரங் கடையாகவும் வகுத்துள்ளது கொண்டு இரண்டாவது சிறந்த மநுவுருவனாயினும் அழியும் பொருட்களை அழியாதென்று உணரும் அறிவிலியாயின் கடை தோற்றமாம் புற்பூண்டுகளுக்கு ஒப்பானவனாவான் என்பவற்றிற்குச் சார்பாய் நீதி நூல் விவேகசிந்தாமணியார் "ஈயாரை யீயவொட்டா னிவனுமீயா னெழு பிறப்பினுங் கடையா மிவன்பிறப்பே” என்பது விரிவு.

2.கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிந் தற்று.

(ப.) கூத்தாட - கழைக்கூத்தாடியின், டவைக்குழாத் - சப்தங் கேட்டவுடன் கூட்டங்கூடி, தற்றே - நின்றவுடன் கலைந்து போவதுபோல, பெருஞ்செல்வம் - திரண்ட திரவியஞ் சேரினும், போக்கு - போகுங்கால், மதுவிளிந்தற்று - அங்கு பார்த்த கூட்டம்போல் நிலைக்காமற் போமென்பது பதம்.

(பொ.) கழைக் கூத்தாடியின் சப்தங்கேட்டவுடன் கூட்டங்கூடி நின்ற வுடன் கலைந்துபோவதுபோல திரண்ட திரவியஞ் சேரினும் போகுங்கால் அங்கு பார்த்தக்கூட்டம்போல் நிலைக்காமற்போம் என்பது பொழிப்பு.

(க.) ஏராளமாய செல்வஞ் சேர்ந்திருப்பினும் அஃது போகுங்கால் கழைக்கூத்தாடியின் சப்தங் கேட்டு பெருங்கூட்டங் கூடி ஆட்டம் நின்றவுடன் ஓராளும் இல்லாமற் போய்விடுவதுபோல் பெருஞ்செல்வமும் நிலைக்காமல் போய்விடும் என்பது கருத்து.

(வி.) கழைக்கூத்தாடியின் சப்தங் கேட்டவுடன் பெருங்கூட்டங்கள் வந்து சூழவிருந்தும் அக்கழைக்கூத்தன் ஆட்டம் நின்றவுடன் அங்கொருவரும் நிலைக்காமற் போய்விடுவதுபோல பெருஞ்செல்வம் சேர்ந்திருந்த போதினும் போகுங்கால் ஏதும் நிலைக்காமற் போய்விடும் என்பது விரிவு.

3.அற்கா வியல்புற்று செல்வமது பெற்றா
லற்குப வாங்கே செயல்.

(ப.) வியல்புற்று - தனது முயற்சியால், அற்கா - நிலையற்ற, செல்வமது - திரவியத்தை, பெற்றா - சேகரித்தபோதினும், லற்குப் - அதற்குத்தக்க உபகாரத்தை, வாங்கே - அங்ஙனே, செயல் - செய்யவேண்டுமென்பது பதம்.

(பொ.) தனது முயற்சியால் நிலையற்ற திரவியத்தை சேகரித்தபோதினும் அதற்குத்தக்க உபகாரத்தை அங்ஙனே செய்யவேண்டும் என்பது பொழிப்பு.

(க.) செல்வமானது நிலையற்றதாயினும் நன்முயற்சியால் அஃதை சேகரித்தவன் நல் உபகாரத்தால் அவற்றை செலவுசெய்ய வேண்டும் என்பது கருத்து.

(வி.) அற்கா, காலற்றவென்னும், நிலையற்ற செல்வத்தைத் தனது நன்முயற்சியாம் இயல்பிலேயே சேகரித்த ஒருவன் அதனை வரியருக்கும் நல்விருத்திச் செயல்களுக்கும் உதவல் வேண்டு மென்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் "ஈட்டியவொண்பொருளு மில்லொழியும் சுற்றத்தார், காட்டுவாய் நேரே கலுழ்ந்தொழிவர்-மூட்டு, மெரியினுடம்பொழியும் ஈரங்குன்றநாட, தெரியி னறமேதுணை" என்பதுகண்டு ஈதலும் ஏற்றலுமாய துறவறம் விளங்கவேண்டும் என்பது விரிவு.

4.நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.

(ப.) நாளென - வாழ்நாட்களென்றும், வொன்றுபோற் - நிலையுள்ளது போல், காட்டி - நின்று, யுயிரீரும் - உயிர்போய்விடுமாதலின், பெறின் - உயிர் நிலைக்கவேண்டின், வாள - தனது வாழ்நாளை, துணர்வார் - உள்ளுணர்வில் நிலைத்தல் வேண்டுமென்பது பதம்.

(பொ.) வாழ்நாட்க ளென்றும் நிலையுள்ளது போல் நின்று உயிர் போய்விடுமாதலின் உயிர் நிலைக்கவேண்டின் தனது வாழ்நாளை உள்ளுணர்வில் நிலைத்தல் வேண்டும் என்பது பொழிப்பு.

(க.) தனது வாழ்நாளானது நிலையாயுள்ள வொன்றுபோல்காட்டி உயிர்போய்விடுமாதலின் அவ்வுயிரினைப் போகாது தன்னைக் காப்போர்