பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/699

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 689


8.குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்போ டுயிரிடை நட்பு

(ப.) குடம்பை - முட்டை வோடானது - தனித்தொழிய - தனியே யகல, புட்பறந் - பட்சி பறந்து, தற்றே - நீங்கிவிடுவதுபோல, யுடம்போ - உடலோடாடிய, டுயிரிடை - மனோ தத்துவத்தினது, நட்பு - நேயமென்பது பதம்.

(பொ.) முட்டை ஓடானது தனியே அகல பட்சி பறந்து நீங்கி விடுவதுபோல உடலோடு ஆடிய மனோரதத்தின் நேயம் என்பது பொழிப்பு.

(க.) முட்டையிலுள்ள பட்சியானது பறந்துபோய்விட முட்டையோடு தனியேயொழிவதுபோல் உடலோடாடு மனோதத்துவம் அகல உடலும் ஒழிந்து நிலையில்லாமற்போம் என்பது கருத்து.

(வி.) முட்டையை முட்டையென்று கூறுவாரேயன்றி முட்டையுள் பட்சியென்று கூறுவோரில்லை. அம்முட்டையிற் பட்சி பறந்து வெளிபோன்றபோது முட்டையென்னும் பெயரற்று ஓடென்னும் நிலையற்றழிவதுபோல உடம்பை உடம்பென்று கூறுவாரேயன்றி உடம்புள் உயிரென்று கூறுவாரில்லை. அவ்வுடம்போடாடிய உயிர்நிலையாம் மனோதத்துவம் அகன்றபோது உடம்பென்னும் பெயரற்று பிணமென்னும் நிலை இல்லாமற் போம் என்பது விரிவு.

9.உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

(ப.) உறங்குவது - தூங்குவது, போலும் - போல, சாக்கா - மரணமுண்டாதலும், டுறங்கி - தூங்கி, விழிப்பது - எழுந்திடுதல், போலும் - போலவும், பிறப்பு - தோற்றமுமென்பது பதம்.

(பொ.) தூங்குவதுபோல் மரணம் உண்டாதலும் தூங்கி எழுந்திடுதல்போல் தோற்றமும் என்பது பொழிப்பு.

(க.) உலகத்தில் தோற்றும் பொருட்கள் யாவும் தோன்றி தோன்றி நிலையற்று மறைவது இயல்பாதலின் தூங்குவதே மரணத்திற்கு ஒப்பாயதென்றும் தூங்கிவிழிப்பதே பிறப்பிற்கு ஒப்பாயதென்பதுங் கருத்து.

(வி.) தூங்கினேன் தூங்கினேனென்பது நித்திய நிறையாம் மரணத்திற்கு ஆளாக்கி நிலைகெடச் செய்கின்றபடியால் நிலையாமெயாம் உடலம் தூங்கினானென்னும் மறைவையும் விழித்தானென்னும் பிறவியையும் விளக்கிய விரிவு.

10.புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட்
டுச்சி லிருந்த வுயிர்க்கு

(ப.) வுடம்பினுட் - தேகத்தினது, டுச்சி - சிரசில், லிருந்த -தங்கி யொளிரும், வுயிர்க்கு - மனவொளிவுக்கு, புக்கி - நிலைபுகுந்து, லமைந்தின்று - அடங்குவதன்றோ நிலைமெய், கொல்லோ - சொல்லுவாயென்பது பதம்.

(பொ.) தேகத்தினது சிரசில் தங்கி ஒளிரும் மன ஒளிவுக்கு நிலை புகுந்து அடங்குவதன்றோ நிலைமெய் சொல்லுவாய் என்பது பொழிப்பு.

(க.) உடலுக்கு சிரசே பிரதானமாகி அங்கு நின்று ஒளிரும் உயிர் நிலையை அங்ஙனே கண்டு அடங்குவதே நிலைமெய் என்றும் அவ்வகை அடங்காமெய் நிலையாமெய் என்பது கருத்து.

(வி.) ஆசையால் தோற்றுவதே பாசமென்னும் உடலாகவும் அதுவதுவாய் உலாவுவதே பசுவென்னும் உயிராகவும், அது ஒளிரும் உச்சியினது நிலைகண்டு ஒடுங்கும் நிலைமெய்யே பதியாகவுங்கண்ட பெரியோன் பயிரங்க உடலாந் தோற்றத்தை நிலையாமெயென்றும் அதன் உச்சியினுள் ஒடுங்கி பதிவதையே நிலைமெய்யாம் மெய்ப்பொருளென்றுங் கூறியுள்ளற்குச் சார்பாய் ஞானக்கும்மி "உச்சிக்குநேரே வுண்ணாவுக்குமேல் நிதம், வைச்ச விளக்கே யெறியுதடி, அச்சுவிளக்கதே வாலையடி அவியாமலெறியுதுஞானப்பெண்ணே" என்றும்,