பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/702

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

692 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(க.) புண்ணியவசத்தால் பொருள்சேரின் அஃது நற்செயல்களுக்கும், பாபவழியாற் பொருட்சேரில் அஃது துற்செயல்களுக்கும் செலவாகும் என்பது கருத்து.

(வி.) நான்காவது செய்யுளில் ஞானிகளையும் இருவகையாகப் பிரித்ததின் சிறப்பைக் கூறியவிடத்து செல்வமானது ஆரியராம் மிலேச்சரிடத்தும் சேரும். அரியராம் நீதிமான்களிடத்துஞ் சேரும். இவற்றுள் மிலேச்சரிடத்துள்ள செல்வத்தைக்கொண்டு நற்கருமங்களைச்செய்யின் அஃது துற்கருமங்களாகவே முடியும். நீதிமான்களிடத்துள்ள செல்வத்தைக்கொண்டு துற்கருமங்களைச் செய்யின் அஃது நற்கருமங்களாகவே முடியும். அதாவது புண்ணியவசத்தால் சேர்ந்த செல்வம் புண்ணியகருமங்களுக்கும், பாவவசத்தால் சேர்ந்த செல்வம் பாவகருமங்களுக்கும் உரித்தாயதால் ஒன்றை நினைத்துச்செய்ய மற்றொன்றாக முடிதல் ஊழின் பயன் என்பது விரிவு.

6.பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்து
சொரியினும் போகா தம.

(ப.) பரியினும் - அதி யவாவால் பொருளைச் சேர்க்கினும், மாகாவாம் - சேராவாம், பாலல்ல - பொருளைப் பொருளாக பாவியாது, வுய்த்து - நிதானித்து, சொரியினும் - வேண தானஞ் செய்யினும், போகா - குறையாது, தம - தங்கள் ஊழின் பயனென்பது பொழிப்பு.

(பொ.) அதி அவாவால் பொருளைச்சேர்க்கினும் சேராவாம். பொருளைப்பொருளாக பாவியாது நிதானித்து வேணதானஞ்செய்யினுங் குறையாது தங்கள் ஊழின்பயன் என்பது பதம்.

(க.) பேராசையாற் பொருளைச் சேர்க்க முயலினும் பூர்வ தீவினைவசத்தால் பொருள் சேராவாம். உள்ள பொருளை வேணதானஞ் செய்யினும் பூர்வ நல்வினைவசத்தால் அஃது குறையாவாம் என்பது கருத்து.

(வி.) ஒருவனுக்கு முற்பிறப்பிற் செய்த தீவினை தொடர்ந்து நிற்க வினைவழிமாறுற்று தனது பேராசையால் பொருளைச் சேர்க்க முயலின் அஃது சேராது மற்றொருவன் வினைவழியூடு சேர்ந்திருந்த பொருளைச் செலவு செய்யினுங் குறையாமல் வளரும் என்பது விரிவு.

7.வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குத் துய்த்த லரிது

(ப.) வகுத்தான் - நல்வழியால் சேர்த்த தொகையே, வகுத்த - தொகைநிலையில் நிற்கும், வகையல்லால் - நல்வழியி லல்லாது, கோடி - நூறாயிரமென்னும், தொகுத்தார்க்கு - கணக்கிட்டுவைப்பினும், துய்த்தலரிது - அத்தொகை நிலைத்தலில்லாமற்போமென்பது பதம்.

(பொ.) நல்வழியால் சேர்த்த தொகையே தொகையில் நிற்கும் நல்வழியிலல்லாது நூறாயிரங் கணக்கிட்டுவைப்பினும் அத்தொகை நிலைத்தல் இல்லாமற்போம் என்பது பொழிப்பு.

(க.) ஒருவன் தனது ஊழ்வழியின் துற்கன்மத்தால் சேர்க்குந் தொகையானது கணக்கில் நிலைக்காமலே கழியும் மற்றொருவன் தனது ஊழ்வழியின் நற்கருமத்தால் சேர்க்குந்தொகை அவனது கணக்கில் நிலைத்தோங்கும் என்பது கருத்து.

(வி.) ஈகையின்றி உலோபத்தாலுங் குடிகெடுப்பாலும் வஞ்சினத்தாலுஞ் சேருந்தொகை தனக்கும் உதவாது, சுற்றத்தோருக்கும் உதவாது, தொகை கணக்கிலும் நிலைக்காது போம். நல்முயற்சியாலும் கருணைநிலையாலும் சேரும்பொருள் தனக்கும், தன் சுற்றத்தோருக்கும், ஏனையோருக்கும் உதவுவதுடன் கணக்கிலும் நிலைக்கும் என்பது விரிவு.

8.துறப்பார்மற் றுப்புர லில்லா ருறற்பால
வூட்ட கழியு மெனின்.

(ப.) துறப்பார் - இவைகளைக்கண்டு இல்லந் துறந்தோர், மற்றுப் புரலில்லா - வேறொரு பற்றுக்களுமின்றி, ருறற்பா - திடநிலையினிற்பரேல், வூட்டா - உடூடே, கழியு - அகலும், மெனின் - என்னலாமென்பது பதம்.