பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/704

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

694 / அயோத்திதாசர் சிந்தனைகள்



1.யாதனின் யாதனி வீங்கியா னோத
லதனி னதனி நிலன்.

(ப.) யாதனின் - யாதாமொரு பொருளுண்டென்றும், யாதனி - யாதொரு தனிப்பொரு ளில்லையென்றும், னீங்கியா - துறந்தோன், னோத - விசாரிணையால், லதனி - தானே, னதனி - தானாய், நிலன் - நிலைபெற வேண்டுமென்பது பதம்.

(பொ.) யாதாமொரு பொருள் உண்டென்றும் யாதொரு தனிப்பொருள் இல்லை என்றும் துறந்தோன் விசாரிணையால் தானேதானாய் நிலைபெற வேண்டும் என்பது பொழிப்பு.

(க.) துறவுற்றோன் தனக்கப்புறப்பட்ட பொருளொன்று உண்டென்று ஏனும் இல்லை என்றேனுங் கருதாது தானேதானாய் நிலைக்கவேண்டும் என்பது கருத்து.

(வி.) இல்லறம் முடித்து துறவறம் ஆசித்து சங்கஞ் சேர்ந்தோன் தனக்கு அப்புறப்பட்டத் தனிப்பொருள் வேறொன்று உண்டு என்றேனும் இல்லை என்றேனுங் கருதாது ஐம்புலன் தென்பட சாதித்து தென்புலத்தானாகி தானேதான் என்னுந் ததாகதனாக வேண்டும் என்பது விரிவு.

2.வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபி
னீண்டியற் பால பல.

(ப.) வேண்டி - சுகத்தைக் கருதி, ளுண்டாக - பெருக்கவேண்டி, துறக்க - இல்லறம் விட்டவன், துறந்தபி - துறவறத்தை யாசித்தும், னீண்டியல் - மனதை நீட்டுவனாயின், பல - பலவகைத் துக்கங்களுஞ் சூழ்ந்து, பால - வெறுமனாவானென்பது பதம்.

(பொ.) சுகத்தைக் கருதி பெருக்கவேண்டி இல்லறம் விட்டவன் துறவறத்தை ஆசித்தும் மனதை நீட்டுவானாயின் பலவகைத் துக்கங்களுஞ் சூழ்ந்து வெறுமனாவன் என்பது பொழிப்பு.

(க.) துக்கத்தை அகற்றவேண்டுமென்று துறவறம் பூண்டவன் தனக்கப்புறப்பட்ட வேறுபொருள் உண்டென்று மனதை நீட்டுவானாயின் பலவகை துக்கங்களுஞ் சூழ்ந்து வெறுமனாகிப் பாலை நிலத்திற்கு ஒப்பாவான் என்பது கருத்து.

(வி.) பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்குவகை துக்கங்களை அகற்றவேண்டி துறவறத்தை யாசித்து சங்கஞ்சேர்ந்து தனக்கப்புறப்பட்ட வேறு பொருளுண்டென்று விரும்புவானாயின் இல்லறம் விடுத்தும் மனம் நிலையாது மாளா துக்கத்தில் ஆழ்ந்து தானெண்ணிய எண்ணமும் முடியாது ஏனையோர்க்கு ஓர்பலனும் இன்றி பாலைநிலத்திற்கு ஒப்பாவான் என்பது விரிவு.

3.அடல்வேண்டு மைந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லா மொருங்கு.

(ப.) அடல் வேண்டும் - ஒடுங்கல்வேண்டும், மைந்தன் - அவ்வகை யொடுங்குவோன், புலத்தை - ஐம்புல நுகர்ச்சியை, விடல்வேண்டும் - அகற்றல் வேண்டும், வேண்டிய - கோறிய, வெல்லா - சகலசுகங்களும், மொருங்கு - ஒழுங்காமென்பது பதம்.

(பொ.) ஒடுங்கல் வேண்டும், அவ்வகை ஒடுங்குவோன் ஐம்புல நுகர்ச்சியை அகற்றல் வேண்டும், கோரிய சகல சுகங்களும் ஒழுங்காம் என்பது பொழிப்பு.

(க.) துறவுபூண்டோன் மனதையடக்கல் வேண்டும். அவ்வகை அடக்குவதில் பஞ்ச புலன்வழியாகச் செல்லும் நுகர்ச்சியை விட்டுவிடல் வேண்டும். அவ்வகை விடுவானாயின் அவன் கோரும் சுகங்கள் யாவும் ஒழுங்குற முடியும் என்பது கருத்து.

(வி.) இல்லறம் விடுத்துத் துறவறம் விரும்பி சங்கஞ்சேர்ந்து நித்திய சுகம் பெற வேண்டியவன் மனதை அடக்கும் வழியைத் தேடல் வேண்டும்.