பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/705

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 695


அஃதமைதற்கு கண்ணினாற் பார்த்தப்பொருளை இச்சிப்பதும், மூக்கினால் முகர்ந்தப்பொருளை இச்சிப்பதும், செவியினாற் கேட்ட தொனியை இச்சிப்பதும், நாவினால் உருசித்தப் பொருளை இச்சிப்பதும், உடலால் சுகித்த சுகத்தை இச்சிப்பதுமாகியப் பஞ்சபுல நுகர்ச்சியை விடல் வேண்டும். அவ்வகை விடுவானாயின் அவன் கோரும் நித்தியசுகம் யாவும் பெருகி நான்குவகைத் துக்கங்களையும் போக்கிக் கொள்ளுவான் என்பது விரிவு.

4.இயல்பாகு நோன்பிற் கொன்றின் மெயுடைமெ
மயலாகு மற்றும் பெயர்த்து.

(ப.) இயல்பாகு - சாதாரணமாய, நோன்பிற் - விரதத்திற்கு, கொன்றின்மெ - முன்னிலைச்சுட்டாக வோருருவுங் கிடையா, யுடைமெ - அவ்வகை யுருவொன்றுண்டென வெண்ணுவதாயின், மற்றும் பெயர்த்து - சகல சுகங்களையும் போக்கிக் கொள்ளும், மயலாகு - அஞ்ஞானமா மென்பது பதம்.

(பொ.) சாதாரணமாய விரதத்திற்கு முன்னிலைச்சுட்டாய ஓர் உருவுங் கிடையா, அவ்வகை உருவொன் றுண்டென எண்ணுவதாயின் சகல சுகங்களையும் போக்கும் அஞ்ஞானமாம் என்பது பொழிப்பு

(க.) இயல்பில் நிறைவேற வேண்டிய இதயசுத்த விரதத்தை விடுத்து முன்னிலைச்சுட்டாய ஓர் உருவுண்டென்று நோக்குவதாயின் அஃது பலவகைக் கேட்டிற்குங் கொண்டுபோகக்கூடிய மயக்கம் என்பது கருத்து.

(வி.) மனிதன் மேனோக்க வேண்டிய துறவுபூண்டும் மனமாசினை அகற்றும் இயல்பாய விரதத்தை விடுத்து தனக்கப்புறப்பட்ட ஓர் உரு உண்டென்று சிந்திப்பானாயின் மனமாசகலாது மேலும் மேலுந் துக்கமாயைக்கு உள்ளாவதுடன் சகலசுகங்களையும் இழந்துவிடுவான் என்பது விரிவு.

5.மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை.

(ப.) மற்றுங் - அதற்கு வேறாய, தொடர்ப்பாடெவன் - பற்றிவருங்கேடு யாதென, கொல் - சொல்லவேண்டுமாயின், பிறப்பறுக்க - மாளா பிறவி துன்பத்தைப் போக்கிக் கொள்ளுவதற்கின்றி, லுற்றார் - சுற்றத்தார், குடம்பூ - உடல் துன்பத்தையும், மிகை - மிக்கப் பெருக்கிவிடுமென்பது பதம்.

(பொ.) அதற்கு வேறாய பற்றிவருங்கேடு யாதென சொல்லவேண்டுமாயின் மாளா பிறவிதுன்பத்திற்கு ஆளாவதின்றி சுற்றத்தார் உடல் துன்பத்தையும் மிக்கப் பெருக்கிவிடும் என்பது பொழிப்பு.

(க.) சகலசுகங்களையும் இழப்பதுடன் வேறாயக் கேடு யாதென்று சொல்லவேண்டுமாயின் மாளா பிறவி துன்பத்திற்கு ஆளாகி குடும்ப துக்கத்திலும் அவதியுறுவான் என்பது கருத்து.

(வி.) இஃது நான்காவது செய்யுளைத் தொடர்ந்தே ஐந்தாவது செய்யுள் தோன்றியுளதால் மற்றும் அவற்றைத் தொடர்ந்து நிற்கும் பிறவியின் துன்பத்தையும் குடும்பத்தின் அல்லலையும் விளக்கித் துறவு பூண்டவன் தன்னைவிட்டு தனக்கப்புறமாய வேறொரு பொருளுண்டென்று நோக்காது தன் இதயக்களிம்பை அகற்றவேண்டும் என்பது விரிவு.

6.யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும்.

(ப.) யானெனதென்னும் - நான் என்பதும் என்னுடையதென்பதுமாய், செருக்கறுப்பான் - அகங்கரிப்பாம் பற்றினையறுப்போன், வானோர்க்குயர்ந்த - மேலோர்க்குகந்த, வுலகம் - புத்தே ளுலகம், புகும் - சேருவானென்பது பதம்.

(பொ.) நான் என்பதும் என்னுடையது என்பதுமாய அகங்கரிப்பாம் பற்றினை அறுப்போன் மேலோர்க்கு உகந்த புத்தேள் உலகம் சேருவான் என்பது பொழிப்பு.