பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/707

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 697

 (பொ.) தோற்றும் பொருட்களில் அவா அற்றலே பிறவியின் துன்பம் போக்கும், அவ்வவா அறாவிடில் மாறிமாறி துன்புற்று தோற்றும் உடலை எங்கும் பார்க்கலாம் என்பது பொழிப்பு.

(க.) காணும் பொருட்களாம் மண், பெண், பொன் என்னும் மூவாசையற்றிருத்தலே பிறவியின் துன்பத்தைப் போக்கும் வழியாகும். அம்மூவாசை அறாவிடின் மாறிமாறி நிலையா துன்புற்று தோற்றும் உடலை எவ்விடத்துங் காணலாம் என்பது கருத்து.

(வி.) தோற்றும் பொருட்கள் யாவும் க்ஷணத்திற்கு க்ஷணம் அழிந்துகொண்டேபோவது இயல்பாதலின் அவைகளின் மீது ஆசைவையாது அகற்றலே பிறவியின் துன்பத்தைப் போக்கும், அங்ஙனமிராது காணும் பொருட்கண்மீது ஆசைகொண்டு அலைவதாயின் மாறாப்பிறவியின் துன்பத்தால் அல்லலடையவேண்டும் என்பது விரிவு.

10.பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

(ப.) பற்றுவிடற்கு - மூவாசையினது பற்றுக்கள் விடவேண்டுமாயின், பற்றுக - பற்றவேண்டியதாய, பற்றற்றான் - மூவாசையை யொழித்த புத்தர்தன், பற்றினை - உண்மெயில் அன்பை வளர்க்கும் பற்றாம், யப்பற்றை - அந்தப்பற்றினை, பற்றுக - உறுதிபெற பற்றல்வேண்டுமென்பது பதம்.

(பொ.) மூவாசையினது பற்றுக்களை விடவேண்டுமாயின் பற்ற வேண்டியதாய மூவாசையை ஒழித்த புத்தர் தன் உண்மெயில் அன்பை வளர்க்கும் பற்றாம் அந்தப்பற்றினை உறுதிபெறப் பற்றல் வேண்டும் என்பது பொழிப்பு.

(க.) பற்றறுக்கவேண்டியவன் புத்தபிரான் பற்றிய உண்மெயில் அன்பை வளர்க்கும் பற்றைப் பற்றுவானாயின் க்ஷணத்திற்கு க்ஷணம் தோற்றி அழியும் பொருட்கள் மீது அவாகொண்டழியும் பற்று தானே அகன்றுப்போம் என்பது கருத்து.

(வி.) புத்தபிரான் இராஜாங்கத்திலுள்ள சகல சுகபோகப் பற்றுக்களையும் அறுத்து உண்மெயில் அன்பை வளர்த்திய பற்றை ஒருவன் பின்பற்றுவானாயின் மற்றும் பிறவி துன்பத்திற்குக் கொண்டுபோகும் பெண்ணாசை பற்று, மண்ணாசை பற்று, பொன்னாசை பற்று மூன்றுந் தானே விட்டுப்போம் என்பது விரிவு.

33. புலால் மறுத்தல்

புத்தசங்கஞ்சேர்ந்து சமணநிலையுற்று சித்திப்பெற வேண்டியவர்கள் அதிகாலையில் எழுந்து உடலஞ் சுத்தி செய்து பச்சரிசியும் பாசிப்பயறும் இட்டுக் காய்த்துள்ளக் கஞ்சியைச் சாப்பிட்டு மனோ சுத்தஞ்செய்யவேண்டிய நீதி நூற்களையும், ஞான நூற்களையும் வாசிப்பதுடன் உலக மக்களுக்கு உதவுவதாய நூற்களையும் எழுதிவிட்டு உதையாதி பதினைந்து நாழிகைக்குள் காய், கீரை, கிழங்குகளைக் கொண்டு செய்தக் குழம்புடன் சோறுண்டு இரவு முழுவதும் யாதொரு பொருளையும் புசியாது சுத்த நீரருந்தி ஞான சாதனத்தினின்று விழித்து இரவு பகலற்ற இடஞ் சேரவேண்டியவர்களாதலின் துறவு பூண்டும் ஒடுக்கத்தைப் பெறாது தன்னூன் பெருக்கப்பிரிதூன் புசிப்பதாயின் காம வெகுளி மயக்கம் பெருகி துறவின் செயலைக் கெடுத்துவிடுமென்றறிந்த பெரியோன் இல்லறத் தோரையே புலால் அகற்றி வாழ்கவேண்டுமென்று கூறியுள்ள புத்ததன்மத்தை மற்றுந் துறவோர்க்குக் கருணைநிலை பூர்த்தி பெறுமாறு தெளிவுறக் கூறுகின்றார்.

1.தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
னெங்கன மாளு மருள்.

(ப.) தன்னூன் - தன்னுடலது புலாலை, பெருக்கற்கு - பெருகுதற்கு, தான்பிறி - தான் மற்றோருடலது, தூனூண்பா - புலாலைப் புசிப்போனை, னெங்கன