பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/710

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

700 / அயோத்திதாசர் சிந்தனைகள்


7.உண்ணாமெ வேண்டும் புலா அல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்.

(ப.) பிறிதொன்றன் - தனக்கன்னியமாகத் தோன்றும், புலாஅல் - மாமிஷவுடலி லுண்டாய, புண்ண - இரணத்தினது கோரத்தை, துணர்வார்ப்பெறின் உற்று நோக்கப்பெற்றானாயின், உண்ணாமே வேண்டும் - அன்றே புலாலுண்பதை விடுவானென்பது பதம். -

(பொ.) தனக்கு அன்னியமாகத்தோன்றும் மாமிஷ உடலில் உண்டாய இரணத்தினது கோரத்தை உற்றுநோக்கப்பெற்றானாயின் அன்றே புலால் உண்பதை விடுவான் என்பது பொழிப்பு.

(க.) அன்னிய சீவராசிகள் உடலிலுள்ளப்புண்ணினைக்கண்டு அருவெறுப்பவன் அன்றே புலால் உண்ணலைத் தவிர்ப்பான் என்பது கருத்து.

(வி.) புலாலினை அதி இன்பமோடு உண்டு வருவோன் மற்றுமோர் புலால் உடம்பிலுள்ளப் புண்ணினது கோரத்தை உற்று உணர்வானாயின் புண்ணினைக்கண்டு அருவெறுப்பதுப்போல் அப்புலாலினை உண்பதையும் அருவெறுப்பானென்பதற்கு சார்பாய் அறநெறிச்சாரம் "தம்புண்கழுவி மருந்திடுவர் தாம்பிரிதின், செம்புண்வறுத்து வறைதின்பர் - அந்தோ நடுநின்றுலக நயனிலாமாந்தர், வடுவன்றோ செய்யும் வழக்கு" என்று கூறியவற்றே சான்றாம் என்பது விரிவு.

8.செயிரிற் றலைபிரிந்த காட்சியா ருண்ணா
ருயிரிற் றலைபிரிந்த வூன்.

(ப.) செயிரிற் - அவாவினின்று, றலை பிரிந்த - விடுபட்ட, காட்சியா - உருவமுற்றோர், ருண்ணா - புசியார்கள், ருயிரிற் - சீவர்களின், றலைபிரிந்த - சிரசினைக்கொய்த, வூன் - புலாலை யென்பது பதம்.

(பொ.) அவாவினின்று விடுபட்ட உருவமுற்றோர் புசியார்கள் சீவர்களின் சிரசினைக் கொய்த புலாலினை என்பது பொழிப்பு.

(க.) இல்லறத்தை விடுத்து துறவறம் பூண்டவர்கள் சிரசினைக் கொய்து ஓருயிரினை வதைத்தப் புலாலைப் புசிக்கமாட்டார்கள் என்பது கருத்து.

(வி.) இல்லறத்திலிருந்து உண்பதினாலும் உடுப்பதினாலும் பலவகைச் செயல்களினாலும் காம வெகுளி மயக்கங்கள் அறாதென்று எண்ணித் தங்கள் அன்பினை வளர்க்கத் துறவறம் பூண்டவர்கள் சீவகாருண்ய மற்றச் செயலாம் கொல்லுதலும் கொல்லாததுமாயப் புலாலை மறந்தும் புசியார்கள் என்பது விரிவு.

9.அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற
னுயிர்செகு த்துண்ணாமெ நன்று.

(ப.) தாயிரம் வேட்டலி - ஆயிரங் கலியாணங்களைச் செய்து, அவிசொரிந் - அதிக நெய்பிசைந்த சோற்றை யளிப்பவனாயினும், னொன்ற - ஓர், னுயிர்செகுத்து - சீவனைக்கொன்று, துண்ணாமெ அதன் புலாலைப் புசியாதோனென்போனே, நன்று - நல்லவனென்பது பதம்.

(பொ.) ஆயிரங் கலியாணங்களைச் செய்து நெய்பிசைந்த சோற்றை அளிப்பவனாயினும் ஓர் சீவனைக் கொன்று அதன் புலாலைப் புசியாதோன் என்போனே நல்லவன் என்பது பொழிப்பு.

(க.) ஆயிரம் விவாகங்களைச் செய்து நெய்பிசைந்த அன்னதானஞ் செய்வோனாயினும் சிறப்படையமாட்டான். ஓர் உயிரினை வதையாமலும் அதன் புலாலை உண்ணாமலும் உள்ளவன் எவனோ அவனே சிறப்படைவான் என்பது கருத்து,

(வி.) கருணையே புகழிற்குங் கருணையற்ற நிலையே இகழிற்குங் காரணமாயுள்ளதால் ஆயிரம் வேட்டலைச் செய்து அன்னத்தில் நெய்சொரிந்து பிசைந்து ஊட்டுவதினும் ஓர் உயிரினைக் கொன்றும் அதன் புலாலைப் புசித்தும் சுகியாதிருப்பதே நல்லதென்று துறவோர்க்குக் கருணைநிலையை விவரித்த விரிவு.