பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/716

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

706 / அயோத்திதாசர் சிந்தனைகள்


3.வலியி னிலைமெயான் வல்லுருவம் பெற்றம்
புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று.

(ப.) வலியினிலைமெயான் - இயல்பிலேயே மனத்திடனில்லா னொருவன், வல்லுருவம்பெற்றம் - துறவியின துருவங்காட்ட லெவ்வாறெனில், புலியின்றோல், புலியினுடைய தோலால், போர்த்து - மறைந்து, மேய்ந்தற்று - புலிகளுடன் மேய்வதற் கொக்குமென்பது பதம்.

(பொ.) மனத்திட னில்லா ஒருவன் துறவியினது உருவங்காட்டல் எவ்வாறெனில் புலியினுடைய தோலால் மறைத்து புலிகளுடன் மேய்வதற்கு ஒக்குமென்பது பொழிப்பு.

(க.) மனமாசற்ற துறவிகளுடன் மனமாசறாதோன் சேர்க்கை எவ்வாறுள்ள தென்னில் எருதானது புலியின் தோலைப் போர்த்துக்கொண்டு புலியுடன் உலாவுவதற்கு ஒக்கும் என்பது கருத்து.

(வி.) மனக் களங்கங்களை அறுக்கவும், தேவர்கள் உலாவும் தெய்வசபையில் மீளா வன்னெஞ்சக் களங்கம் நிறைந்தோன் சேர்ந்து வாழ்தல் எவ்வாறுள்ளதென்னில் ஓர் எருதானது புலித்தோலைப் போர்த்துக்கொண்டு புலிகளது கூட்டத்து உலாவலை ஒக்கும் என்பது விரிவு.

4.தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
வேட்டுவன் புட்சிமீழ்த் தற்று.

(ப.) தவமறைந் - துறவின துடைபூண்டும், தல்லவை - அதற்கடாதவைகளை, செய்தல் - செய்வதானது, வேட்டுவன் - வேடனானவன், புதன்மறைந்து - புதறுக்குள்ளொளிந்திருந்து, புட்சிமீழ்த்தற்று - பட்சிகளைப் பிடித்தலை யொக்குமென்பது பதம்.

(பொ.) துறவின் உடைபூண்டும் அதற்கடாதவைகளை செய்வதானது வேடனானவன் புதருக்குள் ஒளிந்திருந்து பட்சிகளைப் பிடித்தலை ஒக்கும் என்பது பொழிப்பு.

(க.) துறவுபூண்டு, சங்கஞ்சேர்ந்தும் இல்லறத்தோரை வஞ்சித்துப் பொருள்பரிப்பதாயின், அவர்களது செய்கை புதருக்குள் மறைந்து பட்சிகளைப் பிடிக்கும் வேடனுக்கொப்பாம் என்பது கருத்து.

(வி.) துறந்து சித்திப்பெற்றோரையே உலகத்தோர் தெய்வமென்று கொண்டாடுவது இயல்பாதலின் தானுமோர் துறந்தவனென்னுந் தவவேடம்பூண்டு இல்லத்தோரை வஞ்சித்து பொருள்பறித்தல் எவ்வாறுள்ள தென்னில் புதருக்குள் மறைந்து பட்சிகளைப் பிடித்து வதைக்கும் வேடனுக்கு ஒப்பாம் என்பது விரிவு.

5.பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென்
றேகம் பலவுந் தரும்.

(ப.) பற்றற்றே - சகல பாசபந்தங்களையும் விட்டோம், மென்பர் - என நடிப்போர்க்கு, படிற்றொழுக்க - தங்களுட்படிந்துள்ளத் தீச்செயல்களே, மெற்றெற்றென் - எப்போதெப்போதென, றேகம் - துன்பங்களை, பலவுந்தரும் - பலவாற்றானுங் கொடுக்குமென்பது பதம்.

(பொ.) சகல பாசபந்தங்களையும் விட்டோமென நடிப்போர்க்குத் தங்களுட் படிந்துள்ளத் தீச்செயல்களே எப்போதெப்போதெனத் துன்பங்களை பலவாற்றானுங் கொடுக்கும் என்பது பொழிப்பு.

(க.) துறவு பூண்டுந் தங்களுக்குள்ளத் தீச்செயல்களை உள்ளத்தினின்று அகற்றாது வெறுமனே பற்றற்றோமென நடிப்போரை துன்பம் எப்போதெப்போதெனத் தொடர்ந்தே நிற்கும் என்பது கருத்து.

(வி.) பலவகைத் துக்கங்களையும் போக்குதற்குத் துறவுபூண்டு தனக்குள்ள தீயகுணங்களை அகற்றாது துறவியென நடிப்பினும் உள்ள வஞ்சினமே எப்போதெப்போதெனக் கார்த்து மீளாதுக்கத்திற்கு ஆளாக்கிவிடும் என்பது விரிவு.