பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/718

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

708 / அயோத்திதாசர் சிந்தனைகள்


9.கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.

(ப.) கணைகொடிது - வில் வளையில் துன்பத்தைக்கொடுக்கும், யாழ்கோடு - வீணைவளையில், செவ்விதாங் - இன்பத்தைக்கொடுக்கும், கன்ன - அதுபோல். வினைபடு - துறவிகளது செயல்களா லுண்டாம் பயனை, பாலாற் - நல்வினை தீவினையென்னு மிருவகுப்பால், கொளல் - தெரிந்துக் கொள்ளவேண்டுமென்பது பதம்.

(பொ.) வில்வளையில் துன்பத்தைக் கொடுக்கும் வீணைவளையில் இன்பத்தைக் கொடுக்கும் அதுபோல் துறவிகளது செயல்களால் உண்டாம் பயனை நல்வினை தீவினையென்னும் இருபகுப்பால் தெரிந்து கொள்ளவேண்டு மென்பது பொழிப்பு.

(க.) வில்லால் துன்பம் உண்டாதலையும் வீணையால் இன்பமுண்டா தலையுங் கண்டறிந்துக் கொள்ளுவதுபோல் துறவிகள் தங்கள் தீவினையாலடையுந் துக்கவிருத்தியையும் நல்வினையாலடையுஞ் சுகவிருத்தியையும் இருபகுப்பினால் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்பது கருத்து.

(வி.) துறவியானவன் வில்லைப்போன்று வளைந்து ஒடுங்கினவனாகக் காட்டி துன்பத்தைச் செய்தலும், வீணையைப் போன்று வளைந்து ஒடுங்கினின்று யின்பத்தைத் தருதலுமாயதுகொண்டு துறந்துந் தீவினையை அகற்றாது துக்கவிருத்தி அடைதலையும், துறந்து நல்வினையைப் பெருக்கி சுவிருத்தியடைதலுமாய இருவகுப்பாலுங் கண்டுக் கொள்ளலாம் என்பது விரிவு.

10.மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம்
பழித்த லொழித்து விடின்.

(ப.) உலகம் - துறவு பூண்டும் உலகமக்களால், பழித்த - மரணமடைந்தானென்றிழிவுகூறலை, லொழித்துவிடின் - நீக்கிக் கொள்ளுவானாயின், மழித்தலும் - சிரமயிர் கழித்தலும், நீட்டலும் - சிரமயிர் வளர்த்தலும், வேண்டா - கருதாமற்போமென்பது பதம்.

(பொ.) துறவுபூண்டும் உலகமக்களால் மரணமடைந்தானென இழிவு கூறலை நீக்கிக்கொள்ளுவானாயின் சிரமயிர் கழித்தலும் சிரமயிர் வளர்த்தலுங் கருதாமற்போம் என்பது பொழிப்பு.

(க.) இறந்தானென்னு இழிமொழியை உலகமக்களாற் கேளாது ஜெயம் பெற்றானாயின் சிரோமயிரைக் கழித்தல் வேண்டும் வளர்த்தல் வேண்டுமென்பது இல்லாமல் போம் என்பது கருத்து.

(வி.) சங்கஞ்சேர்ந்த சிரமணன் மரணஜெயம் அடையும்வரையில் சிரமயிர் கழித்தே வரவேண்டுமென்பது பூர்வவிதியாதலின் உலகோர் இறந்தானென்று இழிமொழி கூறாது சிறந்தானென்று மரணஜெய மடைவானாயின் மயிர் கழித்தலும் வளர்த்தலுமாய இருவகைச் செயல்களும் வேண்டாமற்போம், இறந்தானென்னும் பழித்தல் உண்டாயின் வேண்டுமென்பதற்குச் சார்பாய் மச்சமுநியார் ஞானம் "இறந்து போனவர்க்கென்ன மெஞ்ஞானங்காண் ஏச்சியேச்சி யிகத்துள்ளளோர் தூஷிப்பார், மறந்து செத்து மறு ஜென்மம் புக்கினால் வருவதாகிய சஞ்சலமென்னவோ, பிறந்துநிற்கின்ற பெரியதிரோதகைப்பெண்ணைப்போல் வந்து பேயாக்கிப் போடுவாள், துறந்துவிட்டுக் கரையேறக் கற்பங்கேள் சொல்லுவேனிந்த சூட்சத்தைக் கேட்டிடே” என்னும் மரணத்தை ஜெயித்து பிறவி துக்கத்தைப் போக்குங் கியான போதத்தை அநுசரித்து துறந்தும் இறந்தானென்னில் உலகோர் பழித்தல் எவ்வகையென்னில் துறந்து பிறந்தானேயென்னும் பரிதாபத்தால், ஐயோ பாபம் பாபமென்னும் இழிமொழியே பழித்தலாகும், துறந்தும் புண்ணியம்பெருகாது பாவம் பெருகியதுகொண்டு இறந்தானென்று கேழ்வியுற்றவுடன் பாவம், பாவமென்னு மொழி தோற்றுதல் இயல்பாம். இறப்பிற்கு எதிரடையாய சம ஆதியானான், இரு பிறப்படைந்தான் என்றவுடன் கேட்போர் ஆ!ஆ! வென்னும் ஆனந்தக்