பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/726

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

716 / அயோத்திதாசர் சிந்தனைகள்


10.ஆரா வியற்கை யவாநீப்பினந் நிலையே
பேரா வியற்கை தரும்.

(ப.) ஆரா - துறவி தன்னையாராயுங்கால், வியற்கை-தன்னிற்றானே, யவா - ஆசையென்பது தோன்றி கெடுத்தலால், நீப்பி - அவற்றை யொழித்து, னந்நிலையே - ஒழிந்த நிலையினிற்பானாயின், பேரா-என்று மழியா, இயற்கை - தண்மெயை, தரும் கொடுக்கு மென்பது பதம்.

(பொ.) துறவி தன்னை ஆராயுங்கால் தன்னிற்றானே ஆசை என்பது தோன்றி கெடுத்தலால் அவற்றை ஒழித்து ஒழிந்த நிலையில் நிற்பானாயின் என்றும் அழியா தண்மெயைக் கொடுக்கும் என்பது பொழிப்பு.

(க.) இயல்பிலேயே தன்னிற்றானே உண்டாவது ஆசையின் குணமாதலின் அவற்றை பற்றற ஒழித்து, ஒழிந்த நிலையில் நிற்பானாயின் இயல்பிலேயேயுள்ள தண்மெயாம் சாந்தவுருவந்தானே தானாக விளங்கும் என்பது கருத்து.

(வி.) உலக ஆசையின் பெருக்கமானது இயற்கையிலேயே தன்னிற்றானே தோன்றி கெடுப்பதை ஆராய்ந்து உணர்ந்த துறவியானவன் அவ்வாசையைப் பற்றற நீக்கி நீங்கிய நிலையில் நிற்பானாயின் சாந்தமாம் என்றும் இயற்கையா யுள்ளப் பழம்பொருள் தானே தானேயாக விளங்கும் என்பது விரிவு.

38. தவம்

அதாவது தவமென்னும் நல் ஊக்கமாய சீவகாருண்யத்தை நிறப்பவேண்டிய துறவி தனக்கோர் துன்பமும் அணுகாதுத்தானே தன்னைக் காத்துக் கொள்ள வேண்டியவனாதலின் அதற்கு பலமாகசருவ சீவர்களுக்கும் ஏதோர் துன்பமும் அணுகாதுகாத்தலும், தவமாம் நல்லூக்கத்திற்கெதிறடையாய அவமாம் பொல்லூக்கத்தை அகற்றலு மாய வழி வகைகளை விளக்குகின்றார்.

1.உற்றநோய் தோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமெ
யற்ற தவத்திற் குரு.

(ப.) உற்றநோய் - தனக்குள்ளெழும் பிணிகளை, தோன்ற - எழவிடாமற்காத்தலும், லுயிர்க்குறுகண் - மற்றுஞ் சீவப்பிராணிகளுக்குத் துன்பத்தை, செய்யாமெ - செய்யாதொழிதலுமாய, யற்றே - அதுவே, தவத்திற் - நல்லூக்கத்திற்கு, குரு - அச்சாணியாகுமென்பது பதம்.

(பொ.) தனக்குள் எழும் பிணிகளை எழவிடாமற் காத்தலும் மற்றுஞ் சீவப்பிராணிகளுக்குத் துன்பத்தைச் செய்யா தொழிதலுமாயதுவே நல்லூக்கத்திற்கு அச்சாணியாகும் என்பது பொழிப்பு.

(க.) தனக்குள் நின்றெழுவி கெடுக்கும் பிணிகளாம் காமவெகுளி மயக்கங்களை எழவிடாமற் தடுத்தலும் அன்னியப் பிராணிகளுக்கோர் துன்பம் அணுகாது காத்தலுமாயச்செயல்களெதுவோ அதுவே தவத்தின் சுகநிலை என்பது கருத்து.

(வி.) ஓர் மனிதன் தனக்குள்ளெழும் இராகத் துவேஷமோகங்கள் என்னுங்காமாக்கினி, கோபாக்கினி பசியாக்கினியாம் பிணியினுற்பவத்திற்கு இடங்கொடாமல் காத்தலும் அன்னிய சீவப்பிராணிகளுக்கோர் துன்பமும் அணுகாது பார்த்தலுமாயச் செயல்களெதுவோ அதுவே தவமென்னும் நல்லூக்கத்திற்கு பீடமாம் என்பது விரிவு.

2.தவமுந் தவமுடையார்க் காகும வமதனை
யஃதிலார் மேற்கொள் வது.

(ப.) தவமுந் - துறவியினது நல்லூக்கமானது, தவமுடையோர்க்காகு - முற்பிறவியில் விட்டதவத்தொடர் பால் யெளிதில் முடிவதாகும், யஃதிலார் - தவத்தினது விட்டகுறையில்லாதோர்க்கு, மவமதனை - பொல்லூக்கமாமவச் செயலே, மேற்கொள்வது - முந்தநிற்கு மென்பது பதம்.

(பொ.) துறவியினது நல்லூக்கமானது முற்பிறவியில்விட்ட தவத்தொடர்பால் எளிதில் முடிவதாகும், தவத்தினது விட்டகுறையில்லாதோர்க்கு பொல்லூக்கமாம் அவச் செயலே முந்த நிற்கும் என்பது பொழிப்பு.