பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/729

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 719


8.தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.

(ப.) தன்னுயிர் - தனது யிரென்னும் பற்றினை, தானற - தானே தானறுத்து, பெற்றானை - நிருவாணம் பெற்றோனை, யேனைய - மற்றுமுள்ள, மன்னுயிரெல்லாம் - சீவராசிகள் யாவும், தொழும் - வணங்குமென்பது பதம்.

(பொ.) தனது உயிரென்னும் பற்றினை தானேதான் அறுத்து நிருவாணம் பெற்றோனை மற்றுமுள்ள சீவராசிகள் யாவும் வணங்கும் என்பது பொழிப்பு.

(க.) உயிரென்னும் நாமத்தையும் உடலென்னு முருவத்தையுந் தானாக அகற்றி வீடு பேறுபெற்றோனை சருவ சீவர்களும் வணங்கும் என்பது கருத்து.

(வி.) துறவுபூண்டு தவநிலை உறுதிபெற சாதிப்போன் நான் நீயென்னும் பின்ன பாவமும், உடலுயிரென்னும் இரண்டும் அற்றுஞானவரம்பு கடவாது என்றும் அழியா நிருவாண சுகமடைவோன், ஆதலின் அவ்வகையடைந்தோனை சருவசீவர்களுங் கைகூப்பித் தொழூஉம் என்பது விரிவு.

9.கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி
னாற்ற லைப்பட் டவர்க்கு.

(ப.) நோற்றலி - தவவிரதத்தினால், னாற்ற - ஆறுதலுற, றலைப்பட்டவர்க்கு - முநிந்தவர்களுக்கு, கூற்றங் - மரணபயத்தை , குதித்தலுங் - கடக்கக்கூடிய, கை கூடு - வழியுண்டாம் என்பது பதம்.

(பொ.) தவ விரதத்தினால் ஆறுதலுற முநிந்தவர்கள் மரண பயத்தைக் கடக்கக் கூடிய வழியுண்டாம் என்பது பொழிப்பு.

(க.) துக்கத்தை போக்கி சுகநிலை பெறும் தபோ பலத்தால் ஆறுதலுற்றோருக்கு மரணபயம் அகன்றுப்போம் என்பது கருத்து.

(வி.) பிறப்பின் துக்கம், பிணியின் துக்கம், மூப்பின் துக்கம், மரண துக்கங்களாகிய நான்கையுங் கடக்கவேண்டி தவநிலை நாடிய துறவி, பாவஞ் செய்யாதிருத்தல் நன்மெய்க்கடைபிடித்தல், இதையத்தை சுத்தி செய்தலாகிய மூவகை சாதனத்தில் ஒன்றில் நிலைபெற முயன்று முந்துவானாயின் மரணநிலை கடந்து சுகநிலை பெறுவான் என்பதற்குச் சார்பாய், ஒளவையார் ஞானக்குறள் “துரியங்கடந்த சுடரொளியைக் கண்டால், மரணம் பிறப்பில்லை வீடு" என்றும், தாயுமானவர் “சந்தமும் வேதமொழி யாதொன்றை பற்றினது தான்வந்து முற்றுமெனலால், சகமீதிருந்தாலுமரணமுண்டடென்பது சதா நிஷடர் நினைவதில்லை” என்னும் ஆதாரங்கொண்டு தவநிலையில் உறுதி பெற்றோருக்கு மரண நிலையை கடக்கும் வழியுண்டாம் என்பது விரிவு.

10.இலர் பலராகிய காரண நோற்பார்
சிலர்பல நோலா தவர்.

(ப.) இலர் பலர் - மரணசெயமில்லார், பலராகிய காரண - பலருண்டாகுங் காரணமியாதெனில், நோலாதவர் - தவநிலையில் நில்லாததினாலாம், நோற்பார் - தவநிலையுறுதிபெற்று மரணத்தை செயித்துக் கொள்ளுவோர், சிலர் - சொற்பமாகக் காணப்படுவார்களென்பது பதம்.

(பொ.) மரணசெயமில்லார் பலருண்டாங் காரணம் யாதெனில் தவநிலையில் நில்லாததினாலாம், மரணத்தை செயித்துக் கொள்வோர் சொற்பமாகக் காணப்படுவார்கள் என்பது பொழிப்பு.

(க.) மரணத்தை செயித்து பிறவியை அறுக்கவேண்டுமென்னும் ஊக்கமில்லாதோர் பலரும் மரணத்தை செயித்து பிறவியை அறுக்க வேண்டுமென்னும் ஊக்கமுடையோர் சிலருமாயிருக்கின்றார்கள் என்பது கருத்து.

(வி.) உலகமக்கள் பெரும்பாலும் பாசபந்தத்திற் சிக்குண்டு மூவாசையுள் பதிந்துள்ளோராதலின் துறவுபூண்டு சங்கங்சேர்ந்தும் பலர் மரணபயமின்றி பிறவியை அறுக்கும் வழியிற் பிந்துகின்றார்கள், சிலரோ தாங்கள் பூண்ட துறவில் நிலைத்துதவ உறுதிபெற்று சதா நல்லூக்கத்தில் நின்று எடுத்த நோன்பை தொடுத்து முடித்து மரணத்தை செயித்து பிறவியை அறுத்துக் கொள்கின்றார்கள் என்பது விரிவு.