பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/731

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 721

பொருட்கள் ஆரியராம் மிலேச்சரிடங்களிலுமுண்டு, அதனால் அவை சிறப்பெய்தாது, அருட்செல்வமாம் பொருளே சிறப்பெய்தும் என்று கூறியவற்றுள், பூரியர் கண்ணும் பொருளுள்ளதென்பதாயின் கல்விப் பொருளுக்கு பொருந்தாவாம். அதாவது பூரியென்பது பதரென்னும் பொருளைத்தரும், பூரியரென்பது, பதருக்கொப்பானவர்கள் ஏழை, ஆதுலர்களென்னும் பொருளைத்தரும் இவற்றுள் தானிய மணியற்றபோது பதர், பூரியென்றும் வழங்குதல்போல் தனப்பொருள் தானியப் பொருளற்றவர்களை பூரியரென்றும் ஏழைகளென்றுங் கூறுமொழியை மாற்றி பௌத்தர்களால் வழங்கிவந்த ஆரியரென்னு மொழியை வரைந்துள்ளோமாக. ஆரியரென்னு மொழியே குணசந்தியால் ஆரியாரென மறுவிற்று என்பது விரிவு.

2.நல்லாற் றானாடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினு மஃதே துணை.

(ப.) நல்லாற்றானாடி - சுகவாற்றலுற்று, யருளாள்க - கிருபையை நிறப்புவீராக, பல்லாற்றாற் - பலவகையாற்றலுற்று, றேரினு - முன்னேறினும், மஃதேதுணை - கிருபையாமருளே ஆதாரமாகுமென்பது பதம்.

(பொ.) சுகவாற்றலுற்று கிருபையை நிறப்புவீராக பலவகையாற் றலுற்று முன்னேறினும் கிருபையாம் அருளே ஆதாரமாகும் என்பது பொழிப்பு.

(க.) சுகமாய நல்வாழ்க்கைப் பெற்றிருப்பினும் கிருபையாம் அருளையே நிறப்பற்கு முயல்வீராக, அவ்வருளே பற்பல சுகங்களுக்குந் துணையாக நிற்கும் என்பது கருத்து.

(வி.) எத்தகையாய சுகவாழ்க்கைப் பெற்று வாழினும் தங்கடங்கள் உள்ளத்தின்கண் அருளென்னும் பொருளையே சேர்த்தற்கு முயலல் வேண்டும், அவ்வருளின் மிகுதியால் எடுக்கும் பல காரியங்களுங் கைகூடுமென்பதற்குச் சார்பாய், தாயுமானவர் "ஞான கருணாகரமுகங் கண்ட போதிலோ நவநாத சித்தர்களு முன்னட்பினை விரும்புவா” ரென்னு மாதாரங் கொண்டு பல்லாற்றாற்றேரினும் அருளே துணை நிற்கும் என்பது விரிவு.

3.அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள் சேர்ந்த
வின்னா வுலகம் புகல்.

(ப.) யிருள்சேர்ந்த - அஞ்ஞானத்தாற் பிறவியுற்று, வுலகம் புகல் மண்ணுலகத்தில் தோன்றி, வின்னா - துன்பத்தையநுபவிக்குஞ் செயல், அருள்சேர்ந்த - கிருபைநிறைந்த, நெஞ்சினார்க் - உள்ளத்தினர்க்கு, கில்லை - இராவென்பது பதம்.

(பொ.) அஞ்ஞானத்தால் பிறவியுற்று மண்ணுலகத்தில் தோன்றி துன்பத்தை அநுபவிக்குஞ் செயல் கிருபைநிறைந்த உள்ளத்தினார்க்கு இரா என்பது பொழிப்பு.

(க.) இருள் நிறைந்த பாசத்தால் மண்ணுலகத்திற் பிறந்து மீளா துன்பத்தை அனுபவிக்குஞ் செயல் அருள்நிறைந்த துறவிக்கு அணுகாது என்பது கருத்து.

(வி.) துறவியானவன் சங்கஞ்சேர்ந்து தனது இடைவிடா சாதனத்தின் கண் அருளாம் கிருபையினை தனதுள்ளத்தில் நிறப்பிக்கொள்ளுவானாயின் அருளொளியால் அஞ்ஞான இருளகன்று உலகின்கண் மாறாப்பிறவியினால் உண்டாந்துன்பங்கள் நீங்கி சுயம்பாவான் என்பது விரிவு.

4.மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை.

(ப.) மன்னுயிர் - அன்னிய சீவப்பிராணிகளை, ரோம்பி - காத்து, யருளாள்வாற் கிருபையுடன் ஆதரிப்போர், தன்னுயி தனதுயி ருக்கோர் துன்பம் வருமென்று, ரஞ்சும் - பயப்படும்படியான, வினை - செயல், கில்லென்ப - இல்லையாகு என்பது பதம்.

(பொ.) அன்னிய சீவப்பிராணிகளை காத்து கிருபையுடனாதரிப்போர் தனதுயிருக்கோர் துன்பம் வருமென்று பயப்படும்படியான செயல் இல்லை யாகும் என்பது பொழிப்பு.