பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/735

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 725


(வி.) அகப்பொருள் ஆய்வதே ஆனந்தம் என்றும் புறப்பொருள் ஆய்வதே துக்கமென்றும் புத்த தன்மம் முறையிடுகின்றதாதலின் அகப்பொருளாம் உண்மெய்ப் பொருள் உணருமாறு துறவு பூண்டவன் தனதுள்ளச் செயலையாயுங் குறைவுற்று அஞ்ஞானமருட்சியால் புறப்பொருளொன்று உண்டென்று மலைந்து நிற்பானாயின் அம்மலைவே பிறப்புக்கும் இறப்புக்கும் ஏதுவாகி நான்குவகை துக்கத்திற்குங் கொண்டுபோம் என்பது விரிவு.

2.இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

(ப.) மருணீங்கி - துறவிகள் தங்களுக்கப்புறப்பட்ட ஒரு பொருள் உண்டென்னும் அஞ்ஞானமகன்று, மாசறு - களங்கமற்ற, காட்சியவர்க்கு - உட்பார்வையை அடைவார்களாயின், இருணீங்கி - மனமாசகன்று, இன்பம் பயக்கு - அழியாபேரின்பத்தைப் பெறுவார்கள் என்பது பதம்.

(பொ.) துறவிகள் தங்களுக்கப்புறப்பட்ட ஒரு பொருள் உண்டென்னும் அஞ்ஞானம் அகன்று களங்கமற்ற உட்பார்வையை அடைவார்களாயின் மனமாசகன்று அழியாப்பேரின்பத்தைப் பெறுவார்களென்பது பொழிப்பு.

(க.) துறவுபூண்டு சங்கஞ் சேர்ந்த சமணர்கள் தங்களது முன்னிலைச் சுட்டாக ஒரு பொருள் உண்டென்று அலைவுறும் அஞ்ஞானம் அகன்று மனமாசுகழுவி உட்பார்வையிலிருப்பார்களாயின் அழியாப்பேரின்பத்தை அடைவார்கள் என்பது கருத்து.

(வி.) தங்களுக்குள்ள மனக்களங்கங்களினால் தங்களுக்கப்புறப்பட்ட ஒரு பொருளுண்டென்று மயங்கி மலைவுபடும் அஞ்ஞான இருளகன்று மெய்ப்பொருளுணர்ந்து உட்பார்வையில்லயித்து ஞானோதயம் பெறுவார்களாயின் என்றும் அழியா பேரின்ப சுகமாம் நிருவாணமடை வாரென்னும் மெய்யுணர்வுக்கு சார்பாய் அறநெறிச்சாரம் “உணர்ச்சியச்சாக உசாவண்டியாகப், புணர்ச்சிப்புலனைந்தும் பூட்டி உணர்ந்ததனை, ஊர்கின்ற பாகனுணர்வு டையனுகுமேல், பேர்கின்றதாகும் பிறப்பு" என்பதுகொண்டு அஞ்ஞானம் அற்றோரே மெஞ்ஞான இன்படைவார்கள் என்பது விரிவு.

3.ஐயத்தி னீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து.

(ப.) ஐயத்தினீங்கி - உள்ளோ புறம்போவென்னு மச்சமற, தெளிந்தார்க்கு - உண்மெயுணர்ந்தோர், வையத்தின் - பூமியின் கண்ணிருப்பினும், வான - வானவர்களுடன், நணிய - பொருந்த, துடைத்து - உடையவர்களாவரென்பது பதம்.

(பொ.) உள்ளோ புறம்போ என்னும் அச்சமற உண்மெயுணர்ந்தோர் பூமியின் கண்ணிருப்பினும் வானவர்களுடன் பொருந்தவுடையவர்களாவர் என்பது பொழிப்பு.

(க.) மெய்ப்பொருள் தனக்கப்புறப்பட்டது அன்றென்று எண்ணும் ஐயம் நீங்கி மெய்ப்பொருளுணர்ந்த துறவி பூமியின் கண்ணிருப்பினும் வானராட்சியத்திற்குரிய தேவர்களுக்கொப்பாவான் என்பது கருத்து

(வி.) மெய்பொருளுண்டோ இல்லையோ என்னும் மலைவும், அஃது அகத்திலுண்டோ புறத்திலுண்டோ என்னும் அச்சமும் நீங்கி தன்னிற்றானே உண்மெய்ப்பொருளை உணர்ந்தடங்கிய துறவி சகலருடன் பூமியில் வாழினும் வானராட்சியத்தின்கண் இரவு பகலற்று நித்தியவொளியாய் உலாவும் தேவர்களுக்கு ஒப்புடைத்தானவனேயாவன் என்பது விரிவு.

4.ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயனின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு

(ப.) ஐயுணர் - ஐம்புல நுகற்சியில், வெய்தியக் - சென்றுணர்ந்த, கண்ணும் - கியானபார்வையும், பயனின்றே - உதவியற்றுப்போம், மெய்யுணர் - உண்மெய்பொருளின்மீது, வில்லாதவர்க்கு - உள்விழி நோக்கில்லாதவர்க்கு என்பது பதம்.