பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/737

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 727

- தனக்கப்புறப்பட்ட ஒரு பொருள் உண்டென்னும், பேர்த்துள்ள - உள்ளத்தினஞ்ஞானமகன்று, வேண்டாபிறப்பு - மறுபிறவி உண்டென்னும் அச்சமுமில்லாமற்போமென்பது பதம்.

(பொ.) தன்னைத்தான் ஆய்ந்துள்ள நெறியால் உள்ள மெய்ப்பொருளை உணர்ந்துக் கொள்ளுவானாயின் தனக்கப்புறப்பட்ட ஒரு பொருள் உண்டென்னும் அஞ்ஞானம் அகன்று மறுபிறவி உண்டென்னும் அச்சமும் இல்லாமற்போம் என்பது பொழிப்பு.

(க.) துறவி தன்னைத்தான் ஆய்ந்தறிந்த உணர்வால் உண்மெய்ப் பொருளை உணர்ந்துக் கொள்ளுவானாயின் தனக்கப்புறப்பட்ட ஒரு தலையாய மறு பொருளுண்டென்னும் மயக்கம் நீங்கி மறுமெய்யயுண்டென்னும் பயமுமில்லாமற் போம் என்பது கருத்து.

(வி.) உலகமக்கள் தங்கள் அஞ்ஞான மயக்கத்தால் தங்களுக்கு அப்புறப்பட்ட ஒரு பொருள் உண்டென்று மயங்கி மீளா பிறவியிற் சுழன்று மாளா துக்கத்திலாழ்ந்தி கிடப்பதை அறிந்து துறவுபூண்டு சங்கஞ்சேர்ந்து சமணனானவன் தன்னைத்தானாய்ந்து உண்மெய்ப்பொருளை உணர்ந்துக் கொள்ளுவானாயின் தனக்கப்புறப்பட்ட பொருளுண்டென்னும் மயக்கம் பேர்ந்தொழிவதுடன் பிறவி உண்டென்னும் பயமும் வேண்டாது ஒழிந்து போம் என்பது விரிவு.

8.பிறப்பென்னும் பேதெமெ நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு.

(ப.) பிறப்பென்னு - மாறிமாறி பிறந்துழலும், பேதைமெ - கருமறுவிய காயத்தை, நீங்க - நிருமலமாக்கி, சிறப்பென்னும் - அழியா - கீர்த்தியுடைத்தாய, செம்பொருள் - செவ்விய வுண் மெய்பொருளை, காண்பதறிவு - கண்டானந்திப்பதே அறிவின் பூரண நிலையாமென்பது பதம்.

(பொ.) மாறி மாறி பிறந்துழலுங் கரு மறுவிய காயத்தை நிருமலமாக்கி அழியாக் கீர்த்தியுடைத்தாய செவ்விய வுண்மெய்ப்பொருளை கண்டானந் திப்பதே அறிவின் பூரண நிலையாமென்பது பொழிப்பு.

(க.) அறிவினது பூரண நிலையாதெனில் நான் என்னும் அஞ்ஞான உடலை நிருமலமாக்கி தான் என்னும் அழியாப் பழம்பொருளாம் உண்மெய்யை அறிவதேயாம்.

(வி.) இறப்பிற் பிறப்பிற் கடிகைக்குக்கடிகை தோன்றி தோன்றி மறையும் பேதையுடலைப் பற்றிய பற்றுக்கள் யாவும் ஒழிய செம்மெயாய என்றும் அழியாவுண்மெய்ப் பொருளுதயமாம் என்பதற்குச் சார்பாய் தாயுமானவர் "தானான தன்மயமே யல்லா லொன்றைத் தலையெடுக்க வொட்டாது தலைப்பட்டாங்கே, கோனாலுங் கற்பூர தீபம்போல போயொளிப்பதல்லாது புலன்வேறின்றி ஞானாகாரத்தினொடு ஞேயமற்று ஞாதுருவமில்லாமல் நழுவி நிற்கும், ஆனாலுமதன் பெருமெ யெவர்க்கார் சொல்வாரதுவானால துவாரதுவே சொல்லும்” என்னுமஃதே அறிவறிவாய காட்சியுமாம் என்பது விரிவு.

9.சார்புணர்ந்து சார்புகெட வொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

(ப.) சார்புணர்ந்து - துறவி தனக்குள்ளப் பற்றுக்களேதேதென்றறிந்து, சார்புகெட - அப்பற்றுக்களற, வொழுகின் - சாதிப்பானாயின், மற்றழித்து - பற்றுக்களறுவதுடன், சார்தருநோய் - தன்னைச் சேர்ந்து கெடுக்கும் பிறப்புப்பிணி மூப்புச் சாக்காடென்னும் துக்கங்களுக்கும், சார்தாரா - இடங்கொடுக்காதென்பது பதம்.

(பொ.) துறவி தனக்குள்ள பற்றுக்கள் ஏதேதென்றறிந்து அப்பற்றுக்களற சாதிப்பானாயின், பற்றுக்களறுவதுடன் தனனைச் சேர்ந்து பிறப்புப்பிணி மூப்புச்சாக்காடென்னுந் துக்கங்களுக்கும் இடங்கொடுக்காது என்பது பொழிப்பு.