பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/740

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

730 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அறுத்துசேர்த்துக்கொண்டு, யிறைவற் - அரசருக்கு சேர்க்கவேண்டிய வரியிறைக்கு, கிறையொருங்கு - மேலாக வொருபங்கு வரியிறை, நேர்வது - செலுத்திவருவது, நாடு-வளநாடென்னப்படும்.

(பொ.) பூமியில் விளைப்பொருட்கள்யாவும் ஒன்று சேர்ந்து ஓங்கிவளர்ந்த காலத்தில் அறுத்து சேர்த்துக்கொண்டு அரசருக்கு சேர்க்க வேண்டிய வரியிறைக்கு மேலாக ஒருபங்கு வரியிறை செலுத்திவருவது வளநாடென்பது பொழிப்பு.

(க.) பூமியின்கண் பலவகையான தானியங்களும் ஒங்கி வளர்ந்து பெரும்பயன்தருமாயின் அவற்றை ஆனந்தமாக பண்டியிற் சேர்த்து அரசனுக்குச் சேர்த்து வரும் வரி யிறையோடு ஒருபங்கு சேர்த்தளித்து வருவதே வளநாடென்பது கருத்து.

(வி.) நஞ்சைதானியம் புஞ்சைதானியமென்னும் பலவகைப் பொறை தானியங்களுங் குறைவற ஓங்கிவளருங் காலத்து அறுத்துத் தாங்கிக் கொண்டு அரசருக்குச் செலுத்திவரும் வரியிறைக்கு மேலாக ஒருபங்கு வரியிறை செலுத்திவருவதாயின் விளைவில்லாத காலத்து செலுத்தும் வரியிறையிற் குறைத்தே அளிப்பதற்காதாரமாய முன்னிறை வரிவிளக்கிய நாட்டின் சிறப்பாமென்பது விரிவு.

4.உறுபசியு மோவாப்பிணியுஞ் செறுபகையுஞ்
சேரா தியல்வது நாடு.

(ப.) உறுபசியு - பசியால் வருந்துவோரும், மோவாப்பிணியுஞ் - சகிக்க வொன்றாத நோயால் வாதைப்படுவோரும், செறுபகையுஞ் - ஏதொன்றுக்கும் பகை பாராட்டுவோரும், சேராதியல்வது - அணுகாது வாழ்க்கை சுகம்பெற்றிருப்பது, நாடு - வளநாடென்பது பதம்.

(பொ.) பசியால் வருந்துவோரும் சகிக்க வொன்றா நோயால் வாதைப்படுவோரும் ஏதொன்றுக்கும் பகை பாராட்டுவோரும் அணுகாது வாழ்க்கை சுகம் பெற்றிருப்பது வளநாடு என்பது பொழிப்பு.

(க.) பசியென்பதே தெரியாமலும் நோயென்பதே அணுகாமலும் பகைவரென்பதே இல்லாமலும் ஆனந்த சுகவாழ்க்கைப் பெற்றிருப்பதே வளநாடு என்பது கருத்து.

(வி.) பூமியின் உழவோராம் வேளாளருக்குள்ள அன்பின் பெருக்கினாலும் ஈகையின் செயலாலும் நீர்வளம் பெருகி நிலவள ஓங்குதலால் பசியற்ற சுகமும் நோயற்ற தேகமும் பகையற்ற வாழ்க்கையுங் கொண்டு வளநாடு பசியற்றும் பிணியற்றும் பகையற்றும் உள்ளதாம் என்பது விரிவு.

5.பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங்
கொல்குறும்பு மில்லது நாடு.

(ப.) பல்குழுவும் - பல்வகைக் கூட்டங்களையும், பாழ்செய்யு - கெடுத்தற் கேதுவாய, முட்பகையும் - வஞ்சினமும், வேந்தலைக்குங் - அரசரையசட்டைச் செய்தலும், கொல்குறும்பு - சீவர்களைக்கொன்று திரியுஞ் சேட்டைகளும், மில்லது - இல்லாதது, நாடு - வளநாடென்பது பதம்.

(பொ.) பலவகைக் கூட்டங்களையும் கெடுத்தற்கேதுவாய, வஞ்சினமும் அரசரை அசட்டைச்செய்தலும் சீவர்களைக் கொன்று திரியுஞ்சேட்டைகளும் இல்லாதது வளநாடு என்பது பொழிப்பு.

(க.) மக்கள் கூட்டங்களையும் ஆடுமாடுகளின் பட்டிகளையுந் தானியக்குவியல்களையுங் கெடுப்பதற் ஏதுவாய வஞ்சினமில்லாமலும் அரசரை அவமதிக்குங் கர்வமில்லாமலும் பட்சிகள் மட்சங்கள் முதலிய சீவராசிகளைக் கொன்று திரியும் சேட்டைகளில்லாமலும் ஆனந்த சுகவாழ்க்கைப் பெற்றிருப்பதே வளநாடு என்பது கருத்து.

(வி.) தங்களுக்குள்ள உட்பகையால் மக்களை வஞ்சிப்பதும், ஆடுமாடுகளைத் துன்புறுத்துவதும், தானியப்போர்களை அழிப்பதுமாய துற்செயல்களில்லாமலும் அரசருக்கு வரி இறை செலுத்தாதலக்கழிக்குங் கர்வமில்லாமலும்