பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/743

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 733


1.ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற்
போற்றுபவர்க்கும் பொருள்.

(ப.) மரண்பொரு - அரசன் வாழும் நகரப் பொருளாயது, ளஞ்சித்தற் - வீரம் அற்றவர்க்கல்லாது, ஆற்றுபவருக்கு - குடிகளைக் காத்து ரட்சிப்போருக்கும், போற்று பவருக்கும் - சுத்த வீரர் எனக் கொண்டாடத் தகுவோருக்கும், பொருள் - அது யிடமென்னப்படும்.

(பொ.) அரசன் வாழும் நகரப்பொருளாயது வீரம் அற்றவர்க்கு அல்லாது குடிகளைக் காத்து ரட்சிப் போருக்கும் சுத்த வீரர் எனக் கொண்டாடத் தகுவோருக்கும் அது பொருளென்னப்படும் என்பது பொழிப்பு.

(க.) அரண்மனை என்னும் பொருள் யாவருக்குரியது என்னில் வல்லபம் இல்லார்க்கு அல்லாது வல்லபமிகுத்த அரசருக்குங் குடிகளைப் பாதுகாத்து ரட்சிப் போருக்குமே அஃது பொருளென்னப்படும் என்பது கருத்து.

(வி.) அரணென்றும் நகரமென்றும் வழங்கும்படியானது அழகென்னும் பொருளையே குறித்து அரசன் வாழ்க்கைக்குரியப் பீடத்தைக் குறித்தலால் அதற்குரிய மன்னன் ஆற்றலுற்ற நிதானியாய் தன் குடிகளைக்காக்குஞ் செயலும் எதிரிகளுக்கு அஞ்சாது வல்லபமிகுத்தோனுமாகி அஞ்சாத் தலைமெயும் கருணையும் மிகுத்த வாழ்க்கைக்குரிய அரண் சிறப்பைக் குறிப்பித்துக் கூறிய விரிவாம்.

2.மணிநீரு மண்ணுமலையு மணிநிற்
காடு முடைய தரண்.

(ப.) மணி - தானியப்பண்டிகளும், நீரு - சுத்த நீரோடைகளும், மண்ணு - சுகந்த மணலும், மலையு - அருவி நீரோடுங் குன்றுகளும், மணிநிழற்காடு - அணியணியாக நிழலைத்தரும் நந்தவனங்களும், முடைய - அமைந்துள்ளதே, அரண் - அழகிய நகரமா மென்பது பதம்.

(பொ.) தானியப் பண்டிகளும் சுத்த நீரோடைகளும் சுகந்த மணலும் அருவி நீரோடுங் குன்றுகளும், அணியாக நிழலைத்தரும் நந்தவனங்களும் அமைந்துள்ளதே அழகிய நகரமாம் என்பது பொழிப்பு.

(க.) பல தானிய நிறைவின் பண்டிகளும், நீரோடைகளும் எக்காலும் புதுமணல் பரப்பும் வீதிகளும் அருவி நீர் பாயுங்குன்றுகளும் சுகந்தமலரும் இனியக் கனியும் அளிக்கக்கூடிய நந்தவனங்களுங் கூடியிருப்பதே அரண்மனை என்று கூறத்தகுமென்பது கருத்து.

(வி.) நகரமென்று கூறும் அரசனது அரண்மனைக்கு அழகாயது சுத்த நீரோடையே யாதலின் அவற்றிற்கு நீர் அரணென்றும் புதுமணல் பரப்பலே நில அரணென்றும், குன்றுகளருவியே மலை அரணென்றும், நந்தவனத்தையே காட்டரணென்றுங் கூறியுள்ளவற்றிற்குப் பொருள் கொண்டு மன்னனது வாழ்க்கை பீடமாம் அரணுக்கு இத்தியாதி சிறப்பு அமைந்திருத்தல் வேண்டும் என்பது விரிவு.

3.உயர்வ கலந் திண்மை யருமை யிந்நான்கி
னமைவர ணென்றுரைக்கு நூல்.

(ப.) உயர் - மதில்வுயரமும், வகல - விசாலமும், திண்மை - உறுதியும், யருமை - பார்வைக்கழகுமாய, யிந்நான்கி - இந்நான்கும், னமைவர ணென்றுரைக்கு - அரணுக்கமையவேண்டுமென்று கூறும், நூல் - சிற்ப நூலென்பது பதம்.

(பொ.) மதில் உயரமும் விசாலமும் உறுதியும் பார்வைக்கழகுமாய இந்நான்கும் அரணுக்கு அமையவேண்டுமென்று கூறும் சிற்ப நூல் என்பது பொழிப்பு.

(க.) அரணுக்கு ஆதாரமாம் சுற்றுமதில் எழுப்புங்கால் மிக்க விசாலமாகவும் உயரமாகவும் நல்லுறுதிவும் பார்ப்போர்க்கு அரியதாகவும் கட்ட வேண்டும் என்பது சிற்ப நூல் உறுதிமொழி என்பது கருத்து.