பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/749

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 739

எவையோ அவைகள் யாவும் அக்குடிகளால் கிடைத்து ஆனந்த சுகத்திலிருப்பான் என்பது விரிவு.

8.முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்.

(ப.) முறைசெய்து - தரும நெறியினின்று, காப்பாற்று - குடிகளை ரட்சிக்கு, மன்னவன் - அரசனை, மக்கள் - மனுக்கள், கிறையென்று - தருமராசனாம் புத்தரென்றே, வைக்கப்படும் - தங்களிதயத்திற் பதிய நினைப்பார்களென்பது பதம்.

(பொ.) தருமநெறியினின்று குடிகளை ரட்சிக்கும் அரசனை மனுக்கள் தருமராசனாம் புத்தரென்றே தங்கள் இதயத்திற் பதிய நினைப்பார்கள் என்பது பொழிப்பு.

(க.) எக்காலுந் தருமநெறி பிறழாது குடிகளைக் காப்பாற்றிவரும் அரசனை அக்குடிகள் யாவரும் இறைவறனாம் புத்தருக்கு ஒப்பாகவே இதயத்திற் கொள்ளுவார்கள் என்பது கருத்து.

(வி.) வரியிறைக்கொள்ளும் அரசனாகப் பிறந்து தருமநெறியினது சுகங்கண்டு உலகமக்களுக்கு அத்தன்ம நெறிகளைப் போதித்து நித்தியானந்தமடையச்செய்து இறைவனென்னுங் காரணப்பெயரை பெற்றவர் புத்தரேயாகலின் அத்தகைய தருமநெறி பிறழாது குடிகளைக் காப்பாற்றும் மன்னனை மனுமக்கள் யாவரும் இறைவனாம் புத்தருக்கு ஒப்பானவன் என்றே தங்கள் இதயத்தில் எண்ணுவார்கள் என்பது விரிவு. முறையெனல் தருமநெறி முறையேயாம்.

9.செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ் தங்கு மூலகு.

(ப.) செவிகைப்பச் - தன்காதில் கொடூரமாய, சொற் - சொல்லினைக் கேட்டும், பொறுக்கும் - மன்னித்துக்கொள்ளும், பண்புடைய - குணநலமுடைய, வேந்தன் - அரசனது, கவிகைக்கீழ் - குடையினுள்ளே , தங்குமுலகு - உலகம் நிலைக்குமென்பது பதம்.

(பொ.) தன்காதில் கொடூரமாய சொல்லினைக் கேட்டும் மன்னித்துக் கொள்ளும் குணநலமுடைய அரசனது குடையினுள்ளே உலகம் நிலைக்கும் என்பது பொழிப்பு.

(க.) உலகமக்கள் அரசனை செவியிலுறக் கொடுஞ் சொற்களால் வையினும் அவற்றைப் பொறுத்துக் காப்பதே தரும கவிகையாமென்பது கருத்து.

(வி.) நல்வழி தெரிந்து குடிகளை நடாத்தும் அரசனை நல்லோர் நலமாகக் கொண்டாடுவதும் தீயோர் கொடூரமாக வைவது இயல்பாதலின் அவ்விருமொழிகளையும் அரசன் செவியிற் கேளாது குண நலத்தால் குடிகளை ஆதரிக்குஞ் செயலையே மேற்கொண்டு நிற்பானாயின் உலகமக்கள் யாவரும் அவனது அரிய நீழலிலமர்ந்து வாழ்வார்கள் என்பது விரிவு.

10.கொடையளி செங்கோல் குடியோம்ப நான்கு
முடையானாம் வேந்தர்க் கொளி.

(ப.) கொடை - தருமசிந்தையும், யளி - ஈகை மிகுதியும், செங்கோல் - வழுவாநீதியும், குடியோம்ப - குடிகளைக்காக்கு மன்புமாய, னான்கு - இன்னான்கும், முடையானாம் - அமைந்துள்ளவன், வேந்தர்க்கொளி - அரசருக்குள் பிரகாசமுற்றவனாவானென்பது பதம்.

(பொ.) தருமசிந்தையும், ஈகை மிகுதியும் வழுவா நீதியும் குடிகளைக் காக்கும் அன்புமாய இன்னான்கும் அமைந்துள்ளவன் அரசருக்குள் பிரகாசமுற்றவனாவான் என்பது பொழிப்பு.

(க.) அறநெறி தவறாமலும் ஈகையின் குணமாறாமலும் தனதரசகோலை செவ்விய வழியில் நடாத்தி குடிகளைக் காப்பதே நோக்கமாயிருக்கும் மன்னன் சகல அரசர்களிலும் மேலாக விளங்குவான் என்பது கருத்து.