பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/753

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 743


(க.) மனிததேகம் எடுத்துள்ளோன் அத்தேகம் விழுமுன் கலைநூற்களைக் கற்றுத் தெளிவானாயின் அதன் பயனால் தான் தோற்றி தோற்றி மறைந்த யெழுவகைப் பிறவிகளையுங் கண்டடங்குவான் என்பது கருத்து.

(வி.) மனிதனென்னும் ஆறாவது தோற்றத்தில் தான் கற்றுத்தேர்ந்த கலைநூல் தெளிவால் தேவனென்னும் ஏழாவது தோற்றமுண்டாகி தான் தோன்றி தோன்றி மறைந்த எழுவகை பிறப்பையும் அறியத்தக்க ஏதுவினை உடையவனாவன் என்பது விரிவு.

9.தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

(ப.) கற்றறிந்தார் - கல்வியைக் கற்றுத் தேர்ந்த மகா ஞானிகள், தாமின்புறுவ - தாங்களடைந்துள்ள பேரின்ப சுகத்தை, துலகின்புறக்கண்டு - மற்றும் உலக மக்களு மடையக் காணுவராயின், காமுறுவர் - அன்பு பாராட்டுவாரென்பது பதம்.

(பொ.) கல்வியைக் கற்றுத்தேர்ந்த மகா ஞானிகள் தாங்கள் அடைந்துள்ள பேரின்ப சுகத்தை மற்றும் உலக மக்களும் அடையக் காணுவார்களாயின் அன்பு பாராட்டுவாரென்பது பொழிப்பு.

(க.) கற்றுத்தேர்ந்த மேலோர்கள் தாங்களடைந்துள்ளப் பேரின்ப சுகத்தை ஏனைய உலகமக்களுங் கற்றுத்தேர்ந்தடைவார்களாயின் அவர்களது நட்பினை விரும்புவார்கள் என்பது கருத்து.

(வி.) கலை நூல் கற்று தேர்ந்த கியானிகளின் கருத்து யாதெனில் தாங்கள் கற்றடைந்த பேரின்ப சுகத்தை உலகமக்களுங் கற்று அவ்வின்பசுகத்தை அநுபவிப்பார்களாயின் அவர்கள் மீதன்பு பாராட்டுவதுடன் கூட்டுரவின் ஞான கருணாகர நட்பையும் பாராட்டுவார்கள் என்பது விரிவு.

10.கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்ற யவை.

(ப.) யொருவற்கு - ஒருவனுக்கு, கேடில் - என்று மழியாது, விழு - வேரூன்றி நிலைக்கும், செல்வம் - செல்வமாயது யாதெனில், கல்வி - கற்றுத்தேர்ந்த பொருளேயாம், மாடல்ல - பொன்னோடு, மற்ற - ஏனைய மண்பெண்யாவும், யவை - அழிந்து போமென்பது பதம்.

(பொ.) ஒருவனுக்கு என்று மழியாது வேரூன்றி நிலைக்கும் செல்வமாயது யாதெனில் கற்றுத் தேர்ந்த பொருளேயாம், பொன்னோடு ஏனைய மண்ணும் பெண்யாவும் அழிந்துபோம் என்பது பொழிப்பு.

(க.) மண்பெண் பொன்னென்னும் யாவும் அழிந்துபோம் கற்றுத் தேர்ந்த கல்வியொன்றே அழியாது என்பது கருத்து.

(வி.) கற்றுத்தேர்ந்த கல்வியின் நல்வினைத் தொடர்ந்தே நிற்றலால் அஃதையழியாச்செல்வமென்றும் மற்றய மண்பெண் பொன்னென்பவைகள் யாவும் மாறுதலுற்றே வருகின்றபடியால் அவற்றை அழியுஞ் செல்வமென்றுங் கூறிய விரிவாம்.

45. கல்லாமெய்

இவற்றுள் கல்லாதேகியின் செயலையும், அவன் தன்னை நிரம்ப நோக்காக் கேட்டையும் படவேண்டி நேரும் அல்லலையும், விளக்குகின்றார்.

1.அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

(க.) அரங்கின்றி - சதுரக்கோடுகளில்லாது, வட்டாடி - வட்டமாய பில்லையிட்டாடி யற்றே - முடிவது போல, நிரம்பிய - தன்னைத்தானறியக்கூடிய நூலின்றிக் - கலை நூற்களைக் கல்லாது, கோட்டி - தன்னைப்போற்றி, கொளல் - கொள்ளுவதை யொக்குமென்பது பதம்.