பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/760

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

750 / அயோத்திதாசர் சிந்தனைகள்


பேதைமெயால் அறிவிலிகள் கொடுஞ்சொற்களைக் கூறினும் அறவுரைக் கேள்வியில் முயன்றோர் மறந்துங் கொடுஞ்சொற் கூறார்கள் என்பதேயாம்.

8.கேட்பினுங் கேளா தகையவே கேள்வியாற்
றோட்கப் படாத செவி.

(ப.) கேட்பினுங் - செவியாலறவுரைக் கேட்டும், கேளாதகையவே - கேட்காதவன் போலகலுவோன், கேள்வியாற் - அறவுரைகளால், றோட்கப்படாத - திறக்கப்படாத, செவி - புலனற்ற காதனென்னப்படு வானென்பது பதம்.

(பொ.) செவியாலறவுரைக் கேட்டும் கேட்காதவன் போல் அகலுவோன் அறவுரைகளால் திறக்கப்படாத புலனற்ற காத னென்னப்படுவான் என்பது பொழிப்பு.

(க.) சமணமுநிவர்களது சத்திய தன்மங்களைக் கேட்டுங் கேளாதவன் அறவுரையால் திறக்கப்படாத செவிப்புலன் அற்றவன் என்பது கருத்து.

(வி.) கேட்டல், சிந்தித்தல் தெளிதல் என்னும் மாற்றலுக்கு செவிபுலனே காரணமாகக் கொண்டு தென்புலத்தாராதல் இயல்பாதலின் அறவுரைக்கேட்டும் கேளாத செவிடு என்னப்படுதலால் அறவுரையால் திறக்கப்படாதகாதென்று கூறத்தகும் என்பது விரிவு.

9.நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.

(ப.) நுணங்கிய - நுட்பமாய, கேள்விய - அறநெறிகளை, ரல்லார் - கேட்டுத் தெளியாதோர், வணங்கிய - நெறுக்கமாய, வாயின - முத்திவழி செல்லுவோர், ராதலரிது - ஆவது கடினமாமென்பது பதம்.

(பொ.) நுட்பமாய அறநெறிகளைக் கேட்டுத் தெளியாதோர் முத்திவழி செல்லுவோர் ஆவது கடினமாம் என்பது பொழிப்பு.

(க.) அறநெறிகளின் நுண்ணிய பொருட்களைக்கேட்டுத் தெளியாதோர் முத்தி வழியின் நெறுக்க பாதையிற் செல்லுவது அரிதாம் என்பது கருத்து.

(வி.) நிரயம் என்னுங் கேட்டிற்குப் போகும் வழி விசாலமாகவும், டம்பமாகவும், முத்தியென்னும் மோட்சத்திற்குப் போகும் வழி நெறுக்கமாகவும் ஒடுக்கமாகவுள்ளபடியால் அறநெறியாம் ஞானவிசாரிணைக் கேள்வியில் முயலாதோர் முத்திநெறியாம் ஒடுக்கமாய வாயல்வழி செல்லாதவர்களாவர் என்பது விரிவு.

10.செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்க
ளவியினும் வாழினு மென்.

(ப.) செவியிற் - தங்கள் காதுகளால், சுவை யுணரா - அறநெறிகளைக் கேட்டு சுவைக்காது, வாயுணர்வின் - நாவினால் மட்டுஞ் சுவைத்துணரும், மாக்கள் - மனுக்கள், ளவியினும் - கெட்டாலும், வாழினு - வாழ்ந்தாலும், மென் - என்னாவாமென்பது பதம்.

(பொ.) தங்கள் காதுகளால் அறநெறிகளைக் கேட்டு சுவைக்காது நாவினால் மட்டுஞ் சுவைத்துணரும் மனுக்கள் கெட்டாலும் வாழ்ந்தாலும் என்னாவாம் என்பது பொழிப்பு.

(க.) அறுவகையுணவை நாவினால் உண்டு சுவைத்து செவியினாற் கேட்டுத் தெளியும் ஞான அமுதினை சுவைக்காத மனுக்கள் வாழ்ந்தாலுமென்ன, கெட்டாலும் என்ன என்பது கருத்து.

(வி.) கேட்குஞ் செவியே கேட்டை விலக்குமென்னும் முதுமொழிக்கு ஒக்கும் விசாரிணையாம் அறநெறிக்கேள்வியால் ஞான அமுதினை சுவைத்து பிறவியின் துக்கங்களை ஒழித்து சதானந்தத்தில் நிலைப்பது அநுபவமுங் காட்சியுமேயாதலின் கேட்டலென்னும் செவியுணவை சுவைக்காது நாவினால் மட்டும் அறுவகை உணவின் சுவையை உண்டு களிக்கும் மக்கள் உலகத்தில் வாழ்ந்தாலும் என்ன, கெட்டாலும் என்ன என்பது விரிவு.