பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/761

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 751


47. அறிவுடைமெய்

அரசர்கள் கல்விக்கேள்வியில் சிறந்த போதினும் அந்தரங்கம் பயிரங்கமென்னும் உண்மெய்ப்புறமெய்யினை அறியும் அறிவுடை மெய்யனாதலே சிறப்பென்றுணர்ந்த நாயன், சதுரங்க சேனையால் தன்னரசைக் காப்பதினுந் தானே தானுண்மெய் அறிந்து தன்னைக் காப்பதற்காதாரமாம் அறிவை வளர்க்கவேண்டிய வழிவகைகளை விளக்கலானார்.

1.அறிவற்றல் காக்குங் கருவி செறுவார்க்கு
முள்ளழிக்கலாகா வரண்.

(ப.) அறிவற்றல் - தனதறிவை மயங்கவிடாது, காக்கும் - விருத்தி செய்யுங், கருவி - கல்விக்கேள்வியாம் ஆயுதங்களை யுடையவரசனது, வரண் - அரண்மனையை, செறுவார்க்கு - சத்துருக்களாய வேற்றரசர், முள்ளழிக்க - உட்பிரவேசித்துக் கெடுத்தற்கு, லாகா - ஒருபோது மாகா வென்பது பதம்.

(பொ.) தன்னறிவை மயங்கவிடாது விருத்திசெய்யும் கல்விக் கேள்வியாம் ஆயுதங்களையுடைய அரசனது அரண்மனையை சத்துருக்களாய, வேற்றரசர் உட்பிரவேசித்துக் கெடுத்தற்கு ஒருபோதும் ஆகா என்பது பொழிப்பு.

(க.) கல்வி கேள்வி மிகுத்து அறிவை வளர்த்துள்ள அரசரது அரண்மனையை வேற்றரசர் எளிதிற் கைப்பற்றலாகாது என்பது கருத்து.

(வி.) அரசன் தன் கல்விக்கேள்விகளாம் ஆயுதங்களைக்கொண்டு அறிவை விருத்திசெய்துக் கொள்ளுவானாயின் அவனது அரண்மனையை வேற்றரசர் கைபற்றி ஆளுவதற்கிடங்கொட மாட்டான் என்னும் அரசர்காய அறிவின் பயனை விளக்கிய விரிவு.

2.சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீ|
நன்றின் பாலுய்ப்ப தறிவு.

(ப.) சென்ற விடத்தாற் - தான் வேற்றரசரிடம் சென்றபோது, தீதொரீஇ - தனக்குள்ளெழுங்கொடுஞ்செயலை, செலவிடா - காட்டாதகல்வதே, நன்றின்பா - பிரிதியுபகாரங் கருதி, லுய்ப்ப - உணர்ந்த, தறிவு - அறிவினது பயனாமென்பது பதம்.

(பொ.) தான் வேற்றரசரிடஞ் சென்ற போது தனக்குள் எழுங்கொடுஞ் செயலைக் காட்டாது அகல்வதே பிரிதியுபகாரங் கருதியுணர்ந்த அறிவினது பயனாம் என்பது பொழிப்பு.

(க.) வேற்றரசரிடஞ் சென்றபோது அவர்கள் நன்றியை ஏற்று தனது தீய குணங்களை எழவிடாது பிரிதி நன்றியளிப்பதே அறிவின் விருத்தி என்பது கருத்து.

(வி.) ஓரரசன் வேற்றரசனிடஞ் சென்றபோது அவனால் அன்புடன் வரவேற்கப் பெற்று அவன் சுகவாழ்க்கையை தன் சுகம்போற் கருதாது பொறாமெக்கொள்ளுவது அறிவின் குறைவென்றும் சென்றவிடத்து அன்பு பாராட்டிப் பிரிதி நன்றியைக் கருதி நிற்பதே அறிவின் விருத்தி பேறாம் என்பது விரிவு.

3.எப்பொருள் யார்யார்வாய் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

(ப.) எப்பொருள் - கண்டடைய வேண்டிய பொருளை, யார் யார் வாய் - எவரெவரிடஞ் சென்று, கேட்பினு - கேட்ட போதினும் விளங்காவாம், மப்பொருள் - அப்பொருளை, மெய்ப்பொருள் - தன்னிற்றானே, காண்பதறிவு - கண்டுக்கொள்வதே பேரறிவாமென்பது பதம்.

(பொ.) கண்டடைய வேண்டிய பொருளை எவரெவரிடஞ் சென்று கேட்ட போதினும் விளங்காவாம், அப்பொருளை தன்னிற்றானே கண்டுக்கொள்வதே பேரறிவாம் என்பது பொழிப்பு.

(க.) அறிவின் விருத்தியால் கண்டடைய வேண்டிய பொருளை தன்னிற்றானே கண்டடையவேண்டுமே அன்றி ஏனையேரால் கண்டடையலாகாது என்பது கருத்து.