பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/763

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 753


7.அறிவுடைய ராவ தறிவா தறிவிலா
ரஃதறி கல்லா தவர்.

(ப.) அறிவுடையவராவ - அறிவின் விருத்தியை யடையவேண்டுவோர், தறிவா - அவ்வறிவின் விருத்தியை யறிவர், ரஃதறி - அவ்வறிவின் விருத்தியையுங் குறைவையும், கல்லாதவர் - கலைநூற்களைக் கல்லாதவர், ரறிவிலா - அறியார்களென்பது பதம்.

(பொ.) அறிவின் விருத்தியை அடைய வேண்டுவோர் அறிவின் விருத்தியை அறிவர் அவ்வறிவின் விருத்தியையுங் குறைவையுங்கலை நூற் கல்லாதவரறியார் என்பது பொழிப்பு.

(க.) கலை நூற்களைக் கல்லாதோர் அறிவின் விருத்தி அறியார். கலை நூற் கற்று அறிவின் விருத்தியை அடைய வேண்டியவர்கள் அவ்வறிவின் விருத்தியை அறிவார்கள் என்பது கருத்து.

(வி.) கலைநூற்களை கற்றுணராதவர்கள் அறிவினது விருத்தியையும் அதன் குறைவையும் அறியார்கள். கலை நூற்களைக் கற்று அறிவின் விருத்தியடைய வேண்டுவோர் அவ்வறிவின் விருத்தியையும் அறிவின் குறைவையுந் தங்களுக்குத் தாங்களே அறிந்துக் கொள்ளுவதுடன் ஏனையோர் அறிவின் விருத்தியையும் குறைவையும் எளிதில் அறிந்துக் கொள்ளுவார்கள் என்பது விரிவு.

8.அஞ்சுவ தஞ்சாமெ பேதைமெ யஞ்சுவ
தஞ்ச லறிவார் தொழில்.

(ப.) அஞ்சுவ - அடங்கவேண்டிய காலமறிந்து, தஞ்சாமே - அடங்காதவன், பேதைமெ - அறிவற்றவனேயாகும், லறிவார் - அறிவின் விருத்தியுள்ளவர்களோ, தஞ்ச - அடங்கவேண்டிய காலமறிந்து, யஞ்சுவ - அடங்குவதே, தொழில் - அவர்களது செயலாகுமென்பது பதம்.

(பொ.) அடங்கவேண்டிய காலமறிந்து அடங்காதவன் அறிவற்ற வனேயாகும் அறிவின் விருத்தியுள்ளவர்களோ அடங்க வேண்டிய காலமறிந்து அடங்குவதே அவர்களது செயலாகும் என்பது பொழிப்பு.

(க.) அறிவினது விருத்தியே அற்றவர்கள் அடங்கவேண்டிய காலமறிந்து அடங்கமாட்டார்கள். அறிவின் விருத்தியை உடையவர்களோ அடங்க வேண்டிய காலமறிந்து அடங்கிக் கொள்ளுவார்கள் என்பது கருத்து.

(வி.) மனிதனுக்குள்ள அறிவென்னும் விசேஷித்தச் செயலை யறியாதவன் அடங்காச் செயலால் வருந் தீவினைகளை அநுபவித்தே தீருவன் அறிவென்னும் விசேஷித்தச் செயலை அறிந்தவனோ அடங்க வேண்டிய காலங்களிலடங்கி வருந் தீவினைகளை விலக்கிக்கொள்ளுவான் என்பது விரிவு.

9.எதிரநாக் காக்கு மறிவினார்க் கில்லை
யதிர வருவதோர் நோய்.

(ப.) எதிரநாக்காக்கு - வருங்காலச் செயல்களை யறிந்து காத்துக்கொள்ளும், மறிவினார்க் - அறிவின் விருத்தியுள்ளோர்க்கு, யதிரவருவ - நடுங்கத்தக்கதாகவரும், தோர் நோய் - ஒர் துக்கமானது, கில்லை - வராதென்பது பதம்.

(பொ.) வருங்காலச் செயல்களை அறிந்துக் காத்துக்கொள்ளும் அறிவின் விருத்தியுள்ளோர்க்கு நடுங்கத்தக்கதாகவரும் ஓர் துக்கமானது வராது என்பது பொழிப்பு.

(க.) அறிவின் விருத்தியால் எதிர்காலச் செயல்களைத் தெரிந்து நடப்போர்க்கு தேகம் அதிரத்தக்க யாதாமொரு துன்பமும் அணுகாது என்பது கருத்து.

(வி.) அறிவிலார் தனக்கு வரும் துன்பங்களைத் தெரிந்தும் அநுபவிப்பது போல அறிவின் விருத்தியுள்ளோர் செல்காலம் நிகழ்காலம் வருங்கால மூன்றினையும் உணர்ந்து தங்களுக்கினி எதிர்காலத்து வருந்துன்பங்களை அணுகாதுகாத்துக் கொள்ளுவார்கள் என்பது விரிவு.