பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/764

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

754 / அயோத்திதாசர் சிந்தனைகள்


10.அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா
ரென்னுடைய ரேனு மிலர்.

(ப.) அறிவுடையா - அறிவின் விருத்தியை யுடையவர்கள், ரெல்லாமுடையா - சகல பொருட்களு முடையவர்களாக விளங்குவார்கள், ரறிவிலா - அறிவின் விருத்தி இல்லாதவர்களோ, ரென்னுடையரேனு - எத்தகைத்தாய பொருளுடையவர்களே ஆயினும், மிலர் - இல்லாதவர்களாகவே விளங்குவார்கள் என்பது பதம்.

(பொ.) அறிவின் விருத்தியை உடையவர்கள் சகல பொருட்களும் உடையவர்களாக விளங்குவார்கள். அறிவின் விருத்தி இல்லாதவர்களோ எத்தகையத்தாயப் பொருளுடையவர்களே ஆயினும் இல்லாதவர்களாகவே விளங்குவார்கள் என்பது பொழிப்பு.

(க.) அறிவுள்ளவர் பால் யாது பொருளில்லாவிடினும் சகல பொருட்களும் உள்ளவர்களாகவே விளங்குவார்கள். அறிவில்லாதவர் பால் யாது பொருட்களிருப்பினும் இல்லாதவர்களாகவே விளங்குவார்கள் என்பது கருத்து.

(வி.) அறிவினது விருத்தியையுடையவரிடத்து சொற்பப் பொருட்களிருப்பினும் அவற்றை மேலும் மேலும் விருத்தி செய்து சகலருக்கும் உபகாரிகளாக விளங்குகிறபடியால் எல்லாப்பொருளும் உடையவர்கள் என்றும் அறிவினது விருத்தியில்லாரிடத்து சகல பொருட்களுமிருந்தும் அவைகளை விருத்தி செய்வதற்கு ஏதுவில்லாமலும் சகலருக்கும் உபகாரிகளாகாமலும் இருக்கின்றபடியால் யாதும் இல்லாதவர்கள் என்றுங் கூறப்படும் என்பது விரிவு.

48. குற்றங்கடிதல்

அரசனானவன் தன் தேசத்தையும் தேசமக்களையும் அடக்கி ஆண்டு ரட்சிப்பவனாகலின் முதலாவது தனது குற்றங்களையுஞ் செயலையும் ஆண்டு அடக்கி தேசத்தையும் தேச மக்களையும் சீர்திருத்தி ஆளவேண்டியவற்றில் அறிவின் பயனை விளக்குமாறு குற்றங் கடிதலை தொடர்ந்தே விவரிக்கலானார்.

1.செருக்குஞ் சினமுஞ் சிறுமெயு மில்லார்
பெருக்கம் பெருமித நீத்து.

(ப.) செருக்குஞ் - அகங்கரிப்பும், சினமுஞ் - கோபமும், சிறுமெயு - சோம்பநிலையு, மில்லார் - இல்லாததுடன், பெருமிக - சிற்றின்பப் பெருக்கையும், நீத்து - அகற்றி நிற்போருக்கு, பெருக்கம் - சுக பெருக்க முண்டாமென்பது பதம்.

(பொ.) அகங்கரிப்பும் கோபமும் சோம்ப நிலையும் அல்லாததுடன் சிற்றின்பப் பெருக்கையும் அகற்றி நிற்போருக்கு சுகபெருக்கம் உண்டாம் என்பது பொழிப்பு.

(க.) அகங்கரிப்பும், கோபம், சோம்பல் முதலியவைகளை அகற்றி நிற்பதுடன் காமிய பெருக்கத்தையும் ஒழித்துள்ள வரயன் சுகநிலை அடைவான் என்பது கருத்து.

(வி.) தனக்குள்ளெழும் அகங்காரக் குற்றத்தை அகற்றியும் கோபகுற்றத்தை அகற்றியும் சோம்பற்குற்றத்தை அகற்றியுமிருப்பதுடன் பெருமின்பமாகத் தோற்றிக்கெடுக்கும் காமத்தையும் ஒழித்து நிற்குமரசன் சகல சுகமும் பெருக வாழ்வான் என்பது விரிவு.

2.இவறலு மாண்பிறந்த மானமு மாணா
வுவகையு மேத மிறைக்கு.

(ப.) இவறலு - மறதியும், மாண்பிறந்த - ஆண்மெயற்ற, மானமு - வலிவும், மாணா - மீளாத, வுவகையு - களியாட்டும், மிறைக்கு - அரசனுக்கு, மேத - குற்றமாமென்பது பதம்.

(பொ.) மறதியும் ஆண்மெயற்ற வலிவும் மீளாத களியாட்டும் அரசனுக்குக் குற்றமாம் என்பது பொழிப்பு.