பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/765

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 755


(க.) மறத்தலும் வீரங்குன்றுதலும் ஆனந்தவிளையாட்டிலேயே சுகத்தைவைத்தலுமாயச் செயல்களே அரசனுக்குக் குற்றமாம் என்பது கருத்து.

(வி.) ஒன்றை ஆலோசித்து அவற்றை அப்போதைகப்போதே மறத்தலும், போக இச்சையால் தேகத்தைக் குன்றச் செய்துக் கொள்ளலும், வீண் விளையாட்டுகளிலேயே காலத்தைக் கழித்தலும் அரசனுக்குக் குற்றம் என்பது விரிவு.

3.தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

(ப.) தினைத்துணையாங் - தினையரிசிக்கொப்பாய சிறிய குற்றத்தைக் காணினும், பழிநாணுவார் - குற்றத்திற்கஞ்சி நடப்போரவற்றை, பனைத் துணையாக் - பனைமரத்தை யொப்பப்பெருங் குற்றமாக, கொள்வர் - ஏற்பரென்பது பதம்.

(பொ.) தினையரிசிக்கு ஒப்பாய சிறிய குற்றத்தைக் காணினும் குற்றத்திற்கஞ்சி நடப்போர் அவற்றை பனைமரத்தை ஒப்பப்பெருங் குற்றமாக ஏற்பர் என்பது பொழிப்பு.

(க.) குற்றங்கள் யாவற்றிற்கும் அஞ்சி நடக்கும் மேலோர் சிறிய குற்றத்தைக் காணினும் அவற்றை பெருங்குற்றமாகவே பாவிப்பார் என்பது கருத்து.

(வி.) தன்னாலுண்டாங் குற்றங்களையும் பிறராலுண்டாங் குற்றங்களையும் அறிந்தடங்கிய பெரியோர்கள் அரயன் பால் தினையளவாய சிறிய குற்றத்தைக் காணினும் பனையளவாய பெருங்குற்றமாகக் கருதுவார்கள் என்பது விரிவு.

4.குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
யற்றத் தரூஉம் பகை.

(ப.) குற்றமே - பலவகையாயக் குற்றங்களையே, பொருளாக - பெருந்தனமாக, காக்க - சேர்த்துள்ள வரசனுக்கு, குற்றமே - அக்குற்றங்களே, யற்றத் - வேற்றரசரது, பகை - விரோதத்தை, தரூஉம் - உண்டு செய்து விடுமென்பது பதம்.

(பொ.) பலவகையாயக் குற்றங்களையே பெருந்தனமாக சேர்த்துள்ள அரசனுக்கு அக்குற்றங்களே வேற்றரசரது விரோதத்தை உண்டு செய்துவிடும் என்பது பொழிப்பு.

(க.) செல்வத்தை சேர்ப்பதுபோல் அரசன் பலவகையாயக் குற்றங்களையே சேர்த்து வருவானாயின் அக்குற்றங்களால் வேற்றரசர் பகைவந்தே நேர்ந்து போம் என்பது கருத்து.

(வி.) அரசன் தனது வீணாய களிவிளையாட்டின் நோக்கத்தால் வேற்றரசர் ஓலைகளைக் கவனியாதும் தனது காமிய இச்சையின் பெருக்கத்தால் வேற்றரசர் தூதுவர்களுக்குத் தக்க உத்தரங் கூறாமலும் தனது கோபப் பெருக்கத்தால் தூதுவரைச் சீறிச் சினத்தலாலும் வேற்றரசர் பகைதானே விளைவதற்கு ஏதுண்டாதலால் குற்றங்களை பொருளாகக் கொண்ட அரசனுக்கு வேற்றரசர் பகைத்தானே தோன்றும் என்பது விரிவு.

5.வருமுன்னர் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

(ப.) வருமுன்னர் - தன் குற்றத்தால் கேடு வருதற்கு முன்னரே, காவாதான் - அவற்றைத் தடுத்துக் கொள்ளாத வரசனது, வாழ்க்கை - குடி நலமானது, யெரிமுன்னர் - நெருப்பினது முன்னில், வைத்தூறு போல - இட்டக் கூளங்களைப் போல, கெடும் - அழிந்துபோமென்பது பதம்.

(பொ.) தன் குற்றத்தால் கேடு வருதற்கு முன்னரே அவற்றைத்தடுத்துக் கொள்ளாத அரசனது குடி நலமானது நெருப்பினது முன்னிலிட்டக் கூளங்களைப் போலழிந்து போம் என்பது பொழிப்பு.

(க.) கேடு வருமென்று அறிந்தும் அவற்றைத் தடுத்துக்கொள்ளாத வரசனது வாழ்க்கை சுகமானது தீயின் முன்னிட்டக் கூளங்களைப் போல் எரிந்து போம் என்பது கருத்து.