பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/770

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

760 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(பொ.) வற்புறுத்தி மதிகூறுங் கூட்டுரவோரை துணையாகக் கொண்டு வாழும் அரசனை வேற்றரசர் யாவரேயாயினும் அவர்களால் அழிக்க வல்லமெயாகாது என்பது பொழிப்பு.

(க.) அரசனுக்கு வற்புறுத்திமதி கூறுங்கூட்டுரவோர் ஒருவரிருப்பாராயின் வேற்றரசர்களால் அவ்வரசனை மேற்கொள்ளும் வல்லபம் எழா என்பது கருத்து.

(வி.) அரசனது நட்பைக்கருதி சீவிப்போனாயிராது அவனது ராட்சிய சிறப்பையும் அரசன் சுகத்தையுங் கருதி கண்டித்து மதியூகங்களை ஊட்டி வரும் விவேகமிகுத்த பெரியார் ஒருவரை துணை கொண்டொழுகும் அரசனை வேற்றரசர் மேற் கொள்ளலாகாது என்பது விரிவு.

8.இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

(ப.) இடிப்பாரை - வற்புறுத்தி மதிகூறுவோரை, யில்லாத - சேர்ந்துவாழ்காத, வேமரா - ஆலோசனையற்ற, மன்னன் - அரசனது வாழ்க்கை , கெடுப்பா - தன்னை மேற்கொள்ளு மரசர், ரிலானுங் - இல்லாவிடினும், கெடும் - தானே யழிந்துபோமென்பது பதம்.

(பொ.) வற்புறுத்தி மதிகூறுவோரை சேர்ந்து வாழ்காத ஆலோசனை அற்ற அரசனது வாழ்க்கை தன்னை மேற்கொள்ளும் அரசனில்லாவிடினும் தானே அழிந்துபோம் என்பது பொழிப்பு.

(க.) அப்போதைக்கப்போது கண்டித்து மதியூட்டிவரும் பெரியோர் துணையற்று வாழும் ஆலோசனையற்ற அரசனது ராட்சியம் எதிரி அரசர்களால் அழிபடா விடினுந் தானே அழிந்து போம் என்பது கருத்து.

(வி.) அரசன் செய்துவரும் ஆலோசனையுள்ள நற்காரியங்களுக்கு இடங்கொடுத்தும் ஆலோசனையற்ற துற்காரியங்களுக்கு இடங்கொடாதுங் கண்டித்து மதியூட்டி வரும் பெரியோரது கேண்மெயின்றி ஆலோசனையற்று வாழும் அரசனது ராட்சியத்தை வேற்றரசர் கைபற்றாவிடினும் அவ்வரசு தானே அழிவதற்கு ஏதுண்டாகிப் போம் என்பது விரிவு.

9.முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

(ப.) முதலிலார்க் - தனமுதல் தானிய முதலில்லார்க்கு, கூதியமில்லை - வியாபார விருத்தி விவசாய விருத்தி யில்லாதது போல, மதலையாஞ் - அறியார்க் கறிவூட்டும், சார்பிலார்க் - பெரியோரைச் சேர்ந்து வாழ்கா வரசனுக்கு, கில்லைநிலை - அரசுநிலை பெறாதென்பது பதம்.

(பொ.) தனமுதல் தானிய முதலில்லார்க்கு வியாபார விருத்தி விவசாய விருத்தியில்லாததுபோல் அறியார்க்கறிவூட்டும் பெரியோரைச் சேர்ந்து வாழ்கா அரசனுக்கு அரசு நிலை பெறாது என்பது பொழிப்பு.

(க.) கைம்முதலில்லார்க்கு சகல காரணவிருத்தியுமில்லாது போல விவேக மிகுத்தப் பெரியோரைச் சேர்ந்து வாழ்கா அரசனுக்கு இராட்சிய விருத்தியும் இல்லாமற் போம் என்பது கருத்து.

(வி.) மனுமக்களுக்கு தனமுதலில்லாது வியாபார விருத்தியில்லாதது போலும் தானிய முதலில்லாது விவசாய விருத்தியில்லாததுபோலும் அரசனுக்கு அறிவை ஊட்டி வரும்மந்திரவாதிகளாம் பெரியோர்கள் இல்லாவிடின் அவ்வரசும் விருத்தியற்றுப்போம் என்பது விரிவு.

10.பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமெத்தே
நல்லார் தொடர்கை விடல்.

(ப.) நல்லார் - மேன்மக்களது, தொடர்கை - சேர்க்கையை, விடல் - நீங்கி வாழுமரசன், பல்லார் - பலபேருடனும், பகைகொளலிற் - விரோதத்தை யுண்டாக்கிக் கொள்ளுவதுடன், பத்தடுத்த - அதன் பற்றுதலால், தீமெத்தே - தீயதேகியென்று மெண்ணப்படுவானென்பது பதம்.