பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/771

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 761


(பொ.) மேன் மக்களது சேர்க்கையை நீங்கி வாழும் அரசன் பலபேருடன் விரோதத்தை உண்டாக்கிக் கொள்ளுவதுடன் அதன் பற்றுதலால் தீயதேகி என்றும் எண்ணப்படுவான் என்பது பொழிப்பு.

(க.) மதியூகிகளாம் நல்லோர்களைச் சேர்ந்து வாழ்காத அரசன் பலபேர்களின் விரோதத்தைச் சேர்த்துக்கொள்ளுவதுடன் பலபேருக்குத் தானும் தீயவனென்று எண்ணப்படுவான் என்பது கருத்து.

(வி.) செல்காலச் செயல்களையும் நிகழ்காலச் செயல்களையும் வருங்காலச் செயல்களையும் ஆய்ந்து மதியூட்டத்தக்கப் பெரியோர்களைச் சேர்ந்து வாழ்காத அரசன் தன் தேசக்குடிகளின் செயல்களை நன்காராயாது கண்டிப்பதினாலுந் தெண்டிப்பதினாலும் பலபெயர் பகையைத் தேடிக் கொள்ளுவதுடன் அப்பகையினது பற்றினால் பலருக்குந் தீயவனாகத் தோன்றி அரசும் நிலைகுலைந்து போம் என்பது விரிவு.

50. சிற்றினந் சேராமெய்

அதாவது பெரியோர்களாம் விவேக மிகுத்தோர்கள் பொருளாசை யற்றவர்களும் சீவகாருண்யமிகுத்தவர்களுமாகிய மேன்மக்களைத் துணைக் கோடலுமாகியக் கூட்டுறவை உறுதிபடுத்தி சிற்றினமாம் அறிவிலிகளையும் பேராசை மிகுத்தோர்களையும் சீவகாருண்யமற்றவர்களையும் கரவடர்களையும் பொறாமெ மிகுத்தோர்களையும் வஞ்சினமே உருவாகத் தோன்றியவர்களையும் பஞ்சபாதகர்களையும் அரசன் துணை கோடலாகாது என்னும் விதி விலக்குகளை இவ்விடம் விளக்கலானார்.

1.சிற்றின மஞ்சும் பெருமெ சிறுமெதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

(ப.) சிற்றின - அறிவிலிகளின் கூட்டுறவிற்கு, மஞ்சும் - பயப்படுவார்கள், பெருமெ - அறிவுள்ளோர்கள், சிறுமெதான் - அறிவிலிகளோ, சுற்றமா - அறிவிலிகளையே உறன்முறையோராகக்கொண்டு, சூழ்ந்துவிடும் - சேர்ந்தே வாழ்வார்களென்பது பதம்.

(பொ.) அறிவிலிகளின் கூட்டுறவிற்குப் பயப்படுவார்கள் அறிவுள்ளோர்கள், அறிவிலிகளோ அறிவிலிகளையே உறன்முறையோராகக் கொண்டு சேர்ந்தே வாழ்வார்கள் என்பது பொழிப்பு.

(க.) விவேகமிகுத்தப்பெரியோர் அவிவேகிகளைச் சேர்ந்து வாழார்கள், அவிவேகிகளோ அவிவேகிகளையே கூடி வாழ்வார்கள் என்பது கருத்து.

(வி.) நீதியின்பேரிலும் நெறியின்பேரிலும் விவேக விருத்தியின் பேரிலும் பசிதாகம் உள்ளவர்கள் அறிவிலிகளை யடுத்தே வாழ்கமாட்டார்கள் அறிவிலிகளோ துட்டர்களையும் பேராசையோரையும் வஞ்சினரையும் சூதரையுங் பொய்யரையுங் கள்ளரையுமே உறவினராகக் கொண்டொழுகுவார்கள் என்பது விரிவு.

2.நிலத்தியல்பா னீர்திரித் தற்றாத மாந்தர்க்
கினத்தியல்ப தாகு மறிவு.

(ப.) நிலத்தியல்பா - பூமியினது குணத்திற்குத் தக்கவாறு, னீர்திரிந் - நீரும் மாறுபட்டு, தற்றாகு - அவை பேதமுண்டாதல்போல, மாந்தர்க் - மனுகுலத்தோரது, கினத்தியல்ப - குடும்பத்தின் செயலினளவே, தாகு - மாறுபட வளரும், அறிவு - விவேகமுமென்பது பதம்.

(பொ.) பூமியினது குணத்திற்குத் தக்கவாறு நீரும் மாறுபட்டு சுவைபேதம் உண்டாதல்போல மனுகுலத்தோரது குடும்பத்தின் செயலினளவே மாறுபட வளரும் விவேகமும் என்பது பொழிப்பு.

(க.) பூமியினது குணபேதத்தால் நீரும் சுவைபேதமடைதல்போல மனுக்களின் குடும்பபேதச் செயல்களைப்போல அறிவும் பேதப்பட்டே விளங்கும் என்பது கருத்து.