பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/775

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 765


தன் சுகத்தை நாடி பிறர் சுகத்தைக் கெடுக்கும் தீயோர்களும் தான் ஒரு குடி பிழைக்க நூறு குடிகளை கெடுக்குந் தீயோர்களும் வஞ்சினமே குடிகொண்டவர்களும் பொறாமெயே உருவெடுத்தவர்களும், கருணை என்பதே கனவிலும் இல்லாதவர்களும் சீவகாருண்யமே சிந்தையிலற்றவர்களும், பஞ்சபாதகமே பரக்கச் செய்வோர்களுமாயத் தீயக்குடும்பத்தோரையே சிற்றினத்தோரென்றும் கீழ்மக்களென்றும் கூறப்படும்.

இத்தகைய சிற்றனத்தோரது குணாகுணச்செயல்களை நன்காராய்ந்து அரசன் சேர்க்காது அகற்ற வேண்டும் என்பது விரிவு.

51. தெரிந்து செயல் வகை

அதாவது அரசன் நல்லோராம் விவேகிகளைக் சேர்த்துக்கொண்டும் பொல்லோராம் அவிவேகிகளைச் சேர்க்காது அகற்றுவதுடன் தான் செய்யவேண்டிய காரியங்கள் யாவற்றையுங் தெரிந்து செய்யவேண்டியது மேலாயதாதலின் மேலாய ஆலோசனைக் கூறும் மந்திரவாதிகள் ஓதியபோதினும் அவற்றின் பாகுபாடுகளைத் தானுமாய்ந்து செய்ய வேண்டுமென்பதேயாம்.

1.அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு
மூதியமுஞ் சூழ்ந்து செயல்.

(ப.) அழிவதூஉ - எடுக்கு முயற்சி கூடாவிடினும், மாவதூஉ - கூடிடினும், மாகி - சேர்ந்து, வழிபயக்கு - சுகபாதைக்குக் கொண்டுபோமாயின், மூதியமுஞ் - அச்சுகவழிபயனை, சூழ்ந்து - தன்னைச் சூழ்ந்துள்ளக் குடிகளும், செயல் - அநுபவிக்கச் செய்யவேண்டுமென்பது பதம்.

(பொ.) எடுக்கும் முயற்சிக் கூடாவிடினும், கூடிடினும் சேர்ந்து சுகபாதைக்குக் கொண்டுபோமாயின் அச்சுகவழி பயனை தன்னைச் சூழ்ந்துள்ளக் குடிகளும் அநுபவிக்கச் செய்யவேண்டும் என்பது பொழிப்பு.

(க.) தானெடுத்துச்செய்யும் நற்கருமமானது கூடினுங் கூடாவிடினும் விடா முயற்சியில் கூடும் பயனைத் தன்னோடு தன் தேசத்தோரும் அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்பது கருத்து.

(வி.) அரசன்தான் கோறிச் செய்யுஞ் செயல்களுக்கு அங்கத்தவருங் குடிகளுமே ஒன்று கூடி செய்யவேண்டுவது இயல்பாதலின் அக்கருமத்தா லடையும் பயனை அரசன் அநுபவிப்பதுடன் குடிகளும் பகிர்ந்து அநுபவிக்கவுதவுவானாயின் எடுக்குஞ் சகல காரியாதிகளுக்குக் குடிகளும் உபபலமாயிருந்து உற்சாகத்துடன் நடத்துவார்கள் என்பது விரிவு.

2.தெரிந்த வினத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்று மில்.

(ப.) தெரிந்து - தான் நல்லவர்களென் றறிந்து கொண்ட, வினத்தோடு - நற்குடும்பத்தோடு சேர்ந்து, தேர்ந்தெண்ணி - எடுக்குங் காரியத்தை முன்பின்னாலோசித்து, செய்வார்க்கு - செய்யும்படியானவர்களுக்கு, கரும்பொருள் - கைக்கூடாவரிய பொருள், யாதொன்றுமில் - ஏதொன்று மில்லையென்பது பதம்.

(பொ.) தான் நல்லவர்கள் என்றறிந்து கொண்ட நற்குடும்பத்தோடு சேர்ந்து எடுக்குங் காரியத்தை முன்பின்னாலோசித்து செய்யும்படியான வர்களுக்கு கைக்கூடாவரிய பொருள் ஏதொன்றுமில்லை என்பது பொழிப்பு.

(க.) நல்லவர்களை சேர்த்துக்கொண்டு தேற ஆலோசித்து ஓர் காரியத்தை முடிப்போர்க்கு அக்காரியம் முடியாமற் போகா என்பது கருத்து.

(வி.) தீயோர்களாகிய நயவஞ்சகர்களை அகற்றி நல்லோர்களாம் மேன்மக்களைச் சேர்த்துக்கொண்டு எடுக்குங் காரியத்தை நன்காராய்ந்து முடிக்க முயலுவோருக்கு அக்காரிய சித்தியாகாமற் போகாது என்பது விரிவு.