பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/776

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

766 / அயோத்திதாசர் சிந்தனைகள்


3.ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
யூக்கா ரறிவுடை யார்.

(ப.) ஆக்கங்கருதி - பேராசையால் பெரும் லாபத்தை நோக்கி, முதலிழக்கும் - உள்ள பொருளையு மழிக்கும், செய்வினை - காரியத்தில், யூக்கா - முயற்சிக்கமாட்டார்கள், ரறிவுடையார் - விவேகமிகுத்தோர்களென்பது பதம்.

(பொ.) பேராசையால் பெரும் லாபத்தை நோக்கி உள்ள பொருளையும் அழிக்குங் காரியத்தில் முயற்சிக்கமாட்டார்கள் விவேக மிகுத்தோர்கள் என்பது பொழிப்பு.

(க.) அறிவின் மிகுத்தோர் அவாவின் மிகுதியால் பெரும் லாபத்தைக் கருதி தனக்குள்ள பொருளையும் போக்கடித்துக் கொள்ளமாட்டார்கள் என்பது கருத்து.

(வி.) அறிவின் மிகுத்தோரும் நல்லினத்தைச் சேர்ந்தவர்களும் பேராசை மிகுதியால் அதிலாபத்தைக் கருதி தனக்குள்ள பொருட்களை வீணே யழித்துவிடமாட்டார்கள் என்பது விரிவு.

4.தெளிவி லதனைத் தொடங்கா ரிளிவென்னு
மேதப்பா டஞ்சு பவர்.

(ப.) தெளிவி - நிதானியாது, லதனை - ஓர் காரியத்தை, தொடங்கா - ஆரம்பிக்க மாட்டார்கள், ரிளிவென்னு - அதனாற் குறை யுண்டாமென்று, மெதப்பா - முன்பரிந்து. டஞ்சுபவர் - அடங்கி நடப்போர்களென்பது பதம்.

(பொ.) நிதானியாது வோர் காரியத்தை ஆரம்பிக்கமாட்டார்கள் அதனாற் குறையுண்டாம் என்று முன்பறிந்து அடங்கி நடப்போர்கள் என்பது பொழிப்பு.

(க.) நிதானமும் அடக்கமும் முன்பே ஆலோசிப்போருமானவர்கள் முடியா காரியத்தை முடிக்க முயன்று இழிவடையார்கள் என்பது கருத்து.

(வி.) எக்காலும் நிதானமும் தன்னடக்கமும் முன்னாலோசினையும் உள்ளவர்கள் நிறைவேறாது என்றறிந்த காரியத்தை நிறை வேற்றவும் முடியாத காரியத்தை முடிக்கவும் முயன்று அதனால் தாழ்ச்சியடையார்கள் என்பது விரிவு.

5.வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.

(ப.) வகையற - தான் நடத்தும் யுத்தத்தை முற்றும் ஆலோசியாமலும், சூழா - தன்னைச் சூழ காக்கும் படையுதவியில்லாமலும், பகைவரை - எதிரியரசர் மீது, தெழுதல் - படையெடுத்தலாயது, பாத்தி - தானே யோர் கால்வாய் வெட்டி, படுப்பதோராறு - ஆற்றுநீரை ஊருக்குள் திருப்பிக் கொண்டது போலாகுமென்பது பதம்.

(பொ.) தான் நடத்தும் யுத்தத்தை முற்றும் ஆலோசியாமலும் தன்னை சூழ காக்கும் படையுதவி இல்லாமலும் எதிரியரசர் மீது படையெடுத்தாலயது தானே ஓர் கால்வாய் வெட்டி ஆற்று நீரை ஊருக்குள் திருப்பிக்கொண்டது போலாகும் என்பது பொழிப்பு.

(க.) எதிரியரசன் வல்லபமறியாதும் தன்னைச் சூழ்ந்து காக்கும் படையுதவியில்லாதும் படையெடுத்தல் புறம் ஓடிக்கொண்டிருந்த ஆற்றைக் கால்வெட்டி ஊருக்குள் திருப்பி தேசத்தை நாசஞ்செய்துக்கொள்ளுவதற்கு ஒக்கும் என்பது கருத்து.

(வி.) அரசன் ஓர் யுத்தத்திற்கு முனியுங்கால் எதிரி அரசன் வல்லபத்தையுந் தன்னைச் சூழ்ந்து காக்கும் படைகளின் வல்லபத்தையும் ஆய்ந்து முனிதல் வேண்டும் அங்ஙனம் வகையறியாது யுத்தத்திற்கெழுவதாயின் ஆற்றுநீரை வெட்டி ஊருக்குள் திருப்பி தானே தன் தேசத்தையும் தேசமக்களையும் அழித்துக் கொள்ளுவதற்கு ஒக்கும் என்பது விரிவு.