பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/777

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 767


6.செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமெ யானுங் கெடும்.

(ப.) செய்தக்க - தக்கவழியிலோர் காரியத்தை, வல்ல - செய்ய முடியாதென்றறிந்தும், செயக்கெடும் - செய்யில் முடியாமலே போகும், செய்தக்க - முடியக்கூடிய காரியத்தை, செய்யாமெயானுங் - முடிக்காமல் விட்டுவிடலாலும், கெடும் - அதுவுமழிந்து போமென்பது பதம்.

(பொ.) தக்கவழியில் ஓர் காரியத்தை செய்ய முடியாதென்று அறிந்தும் செய்யில் முடியாமலே போகும், முடியக்கூடிய காரியத்தை முடிக்காமல் விட்டுவிடலாலும் அதுவும் அழிந்து போம் என்பது பொழிப்பு.

(க.) ஆரம்பிக்கும்போதே அக்காரியம் முடியாதென்று அறிந்தும் முடிக்க முயல்வதால் கெட்டுப்போம், முடியக்கூடியக் காரியத்தை முடிக்காமல் விட்டுவிடலால் அதுவுங் கெட்டுப்போம் என்பது கருத்து.

(வி.) சமுத்திர நீரை எடுத்துவிட்டு சமபூமியாக்க முடியாது என்பதை தெரிந்தும் அந்நீரை எடுக்க முயன்று பயனடையாது போவதுங் குற்றமாம். தேசத்துக் குட்டைநீரால் பற்பல புழுக்கள் தோன்றி அதனது துர்நாற்றத்தால் மக்களுக்குப் பிணியுண்டாவதென்று அறிந்தும் அந்நீரை எளிதில் எடுத்துவிட்டு சமபூமியாக்கிவிடலாம் என்று தெரிந்தும் அவவகை செய்யாமலிருப்பதுங் குற்றமாம். அதுபோல் செய்வனவற்றைச் செய்யலும் செய்யாதனவற்றைச் செய்யாமலும் தெரிந்துச் செய்வதே அழகாம் என்பது விரிவு.

7.எண்ணித் துணிக கருமந் துணிந்தபி
னெண்ணுவ மென்ப திழுக்கு.

(ப.) கருமந் - ஓர் காரியத்தை யாரம்பிக்கும்போதே, எண்ணித் துணிக - முன் பின்னாலோசித்துவாரம்பிக்க வேண்டியது, துணிந்தபி - காரியத்தைச் செய்ய முயன்ற பின்னர், னெண்ணுவமென்ப அதையாலோசிப்பது, திழுக்கு - குற்றமாமென்பது பதம்.

(பொ.) ஓர் காரியத்தை ஆரம்பிக்கும் போதே முன்பின் ஆலோசித்து ஆரம்பிக்கவேண்டியது. காரியத்தைச் செய்ய முயன்றபின்னர் அதை ஆலோசிப்பது குற்றமாம் என்பது பொழிப்பு.

(க.) ஏதோர் காரியத்தை முடிக்க முயலும்போதே அதனை தேற ஆலோசித்தே முயலல்வேண்டும், அங்ஙனஞ் செய்யாது காரியத்தில் முயன்றபின் அவற்றை யோசிப்பது இழுக்காம்.

(வி.) அரசனானவன் எதிரி அரசன் மீது படையெடுப்பின் காரியத்தையேனும் குடிகளின் சீர்திருத்தக் காரியத்திலேனும் தேற ஆலோசித்து பின்னர் முனியல் வேண்டும் காரியத்தை ஆரம்பித்தபின்னர் துன்பம் நேருங்கால் ஆலோசிப்பது இழுக்காம் என்பது விரிவு.

8.ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

(ப.) ஆற்றின் - தன் சுகத்தைநாடி செய்யுங் காரியத்தை, வருந்தா - அதிகஷ்டத்துடன் யூகித்துச் செய்யாது, வருத்தம் - பின்னர் துன்புறுங்கால், பலர் நின்று - பல்லோரொன்றுகூடி, போற்றினும் - உதவி புரியினும், பொத்துப்படும் - யாதொரு பயனுமில்லாமலே யழிந்து போமென்பது பதம்.

(பொ.) தன் சுகத்தை நாடி செய்யுங் காரியத்தை அதி கஷ்டத்துடன் யூகித்துச் செய்யாது பின்னர் துன்புறுங்கால் பல்லோரொன்றுகூடி உதவி புரியினும் யாதொருபயனுமில்லாமலே அழிந்துபோம் என்பது பொழிப்பு.

(க.) ஓர் காரியத்தை ஆரம்பிக்கும் போதே தெரிந்து செய்யாது அவை முடியாது தடையுறுங்கால் பலபேர் கூடியவற்றிற்கு உதவி புரியினும் முற்றுங் கூடாமலே பொய்யாய்ப் போம் என்பது கருத்து.

(வி.) ஒருவனோர் காரியத்தை முன்பின் ஆலோசித்துத் தேறத் தெரிந்து செய்யாது, அக்காரியம் முடியாது துன்புறுங்கால் பலபேரவற்றிற்கு