பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/781

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம்/771


(பொ.) தனக்குள்ள பொருளின் அளவினை அறிந்து தருமஞ்செய்யல் வேண்டும், அதுவே தனக்குள்ள பொருளை விருத்தி செய்து பலர்க்கு உபகாரமாக விளங்கும் ஒழுக்கமாம் என்பது பொழிப்பு.

(க.) ஒருவன் தனக்குள்ள வரவை அறிந்து செலவு செய்தல் வேண்டும், அதுவே பொருளினை போற்றி வளர்த்து பலருக்கும் உபகாரமாக விளங்கும் நெறியென்பது கருத்து.

(வி.) தனக்குள்ள ஆற்றலாகிய பொருளின் பெருக்கமறிந்து தருமஞ் செய்தல் வேண்டும், அதுவே பொருளினது பெருக்கமறிந்து செய்யும் உபகாரம் எனப்படும் அவைபோல் தனக்குள்ள வலியின் பெருக்கமறிந்து போருக்கு முனிவது அழகாம் என்பது விரிவு.

8.ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா ரகலாக் கடை.

(ப.) ஆகா - பொருளில்லாது, ரளவிட்டி - அளவு கடந்த தானத்தை, தாயினுங் - செய்வதாயினுங், கேடில்லை - ஓர் கெடுதியும் வாராது, ரகலாக்கடை - செல்லலாகா வலியின் முடிவறிந்தோரோ, போகா - முனைமுகஞ் செல்லார்களென்பது பதம்.

(பொ.) பொருளில்லாது அளவு கடந்த தானத்தைச் செய்வதாயினும் ஓர் கெடுதியும் வாராது, செல்லலாகா வலியின் முடிவறிந்தோரோ முனைமுகஞ் செல்லார்கள் என்பது பொழிப்பு.

(க.) வரவுபொருளில்லாது தானத்தைச் செய்யினுங் கெடுதிவராது, தனக்குள்ள வல்லபமில்லாது யுத்தத்தில் முனிவதால் கெடுதியுண்டாம் என்பது கருத்து.

(வி.) தருமஞ் செய்யக்கூடாதவனாயிருந்துந் தருமத்தை அளவு கடந்து செய்வானாயின் ஒரு கேடும் அடையான், யுத்த வலிதில்லாதவன் என்றிந்தும் யுத்தத்திற்கு முனிவதால் கேடுண்டாம் ஆகலின் வல்லபமில்லா முடியறிந்தோர் யுத்தமுகஞ் செல்லார்கள் என்பது விரிவு.

9.அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளிபோல
வில்லாகித் தோன்றாக் கெடும்.

(ப.) அளவறிந்து - தனக்குள்ள வலியின் நிலையறிந்து, வாழதான் - அரசு புரியாதவன், வாழ்க்கை - அரணிலையானது, யுௗபோல - உள்ளது போல் காட்டி, வில்லாகி - மறைந்து, தோன்றாக்கெடும் - இல்லையென்றே யழிந்துபோமென்பது பதம்.

(பொ.) தனக்குள்ள வலியின் நிலையறிந்து அரசு புரியாதவன் அரணிலையானது உள்ளதுபோல் காட்டி மறைந்து இல்லையென்றே அழிந்துபோம் என்பது பொழிப்பு.

(க.) தனது வல்லபமறியாது வாழ்கும் அரசனது அரணிலையானது உள்ளது போல் தோன்றி இல்லையென்றே அழிந்துபோம் என்பது கருத்து.

(வி.) ஓர் தேசத்தை ஆளும் அரசனாகத் தோன்றியவன் தன் வலியும் உபபல வலியும் பெருக்கித் தனதரசவாழ்க்கையை நடாத்தல் வேண்டும், அவ்வல்லபத்தை நோக்காது அரசனென்று இருமாப்புற்று வாழ்வானாயின் அவனது அரணானது உள்ளதுபோல் தோன்றி சத்துருக்களலில்லாமலே அழிந்து போம் என்பது விரிவு.

10.உளவரை தூக்காது வொப்புர வாண்மெ
வனவரை வல்லக் கெடும்.

(ப.) உளவரை - தனக்குள்ள வல்லபத்தை, தூக்காது - சீர் தூக்கி யாராயாது, வொப்புர - சேர்ந்த வுறவின் முறையோரது, வாண்மெ - வல்லபத்தைக்கொண்டு, வளவரை - அரசவாழ்க்கையை நடத்துவதாயின், வல்லக்கெடும் - வலியின்றி அழிந்து போம் என்பது பதம்.

(பொ.) தனக்குள்ள வல்லபத்தை சீர் தூக்கி ஆராயாது சேர்ந்த உறவின் முறையோரது வல்லபத்தைக்கொண்டு அரச வாழ்க்கையை நடத்துவதாயின் வலியின்றி அழிந்து போம் என்பது பொழிப்பு.