பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/787

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 777

வெண்ணியிருந்த வரசர்களது, ரெண்ணமிழப்ப - எண்ணங்கள் யாவையு மிழந்து விடுவார்களென்பது பதம்.

(பொ.) அடக்கமுடைய அரசர் இன்னுமடக்க முற்று எதிரியரணின் சுறுக்கவழியினிடங்களைத் தெரிந்து யுத்தஞ் செய்ய முயலுவாராயின் தன்னை அவமதிப்பாக எண்ணியிருந்த அரசர்களது எண்ணங்கள் யாவையும் இழந்து விடுவார்கள் என்பது பொழிப்பு.

(க.) அவமதிப்பின் எண்ணத்திற்குள்ளாய அரசன் தன்னரண்மனையை முத்திரிக்க வந்துவிடுவானாயின் அவ்வெண்ணத்தை இழந்தே விடுவார்கள் என்பது கருத்து.

(வி.) அரசருக்குள் மற்றோரரசரை மனப்பூர்வமாக அன்பு பாராட்டாது அவமதித்து நிற்பது இயல்பாம். அவற்றால் அவமதிப்புற்றுள்ள அரசன் எதிரியினிடமறிந்து படையெடுத்து அவனரண்மனையை முற்றிகையிட்டு விடுவானாயின் அவமதிப்பாய எண்ணங்கள் யாவும் ஒழிந்து மதிப்புற்று நாணுவான் என்பது விரிவு.

5.நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலி
னீங்கின தனை பிற.

(ப.) நெடும்புனலுள் - நிறைந்தவேரி நீரிலுள்ள, முதலை - நீர்ப்புலியானது, வெல்லு - சகல சீவர்களையும் வென்றுவிடும், யடும்புனலி - நிறைந்தநீர், னீங்கி - வற்றிய பூமியில், னதனை - அம்முதலையை, பிற - அன்னிய சீவன்கள் யாவும் வென்றுவிடுமென்பது பதம்.

(பொ.) நிறைந்த ஏரிநீரிலுள்ள நீர்ப் புலியானது சருவ சீவர்களையும் வென்று விடும், நிறைந்த நீர் வற்றிய பூமியில் அம்முதலையை அன்னிய சீவன்கள் யாவும் வென்றுவிடும் என்பது பொழிப்பு,

(க.) நீர் நிறைந்த இடத்தில் வாழும் முதலை சருவ சீவர்களையும் வென்றுவிடும், நீரில்லாவிடமாம் பூமியில் வந்து விடுமாயின் சருவ சீவர்களிடத்துந் தோல்வியடைந்து போம் என்பது கருத்து.

(வி.) நிறைந்த நீரில் வாசஞ்செய்யும் முதலையானது நீரிலுள்ளவரையில் புலிக்கொப்பாய பலனுற்று சருவ சீவர்களையும் வென்றுவருவதால் ஓடதி சாஸ்திரிகளால் நீர்ப்புலியென்னும் மறுபெயரையும் பெற்றிருக்கின்றது. அத்தகைய முதலையானது நீருள்ள இடத்தைவிட்டு பூமியில் வந்து விடுமாயின் சருவ சீவர்களிடத்தும் தோல்வியடைவது அநுபவமுங் காட்சியுமாதலின் அரசன் தன்னிட வலியையும் எதிரியினிட வலியையுங் கண்டு யுத்தத்திற்கு முனியல் வேண்டும் என்பது விரிவு.

6.கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு
நாவாயு மோடா நிலத்து.

(ப.) கால்வ - பூமியிற் கால்விட்டோடும், னெடுந்தேர் - உயர்ந்த ரதமானது, கடலோடா - திரண்ட நீரினிலோடாவாம், கடலோடு - திரண்ட நீரினிலோடும், நாவாயு - பாய்மரக்கப்பலானது, நிலத்து - பூமியின்கண், மோடா - ஓடாவாமென்பது பதம். -

(பொ.) பூமியிற் கால்விட்டோடும் உயர்ந்தரதமானது திரண்ட நீரினில் ஓடாவாம் திரண்ட நீரினில் ஓடும் பாய்மரக்கப்பல் பூமியின்கண் ஓடாவாம் என்பது பொழிப்பு.

(க.) பூமியில் ஓடும் பெருத்த ரதம் நீரினில் ஓடாது நீரினில் ஓடும் மரக்கலமானது பூமியில் ஓடாது அவைபோல் இடனறிந்து யுத்தத்திற்கு முநியல் வேண்டும் என்பது கருத்து.

(வி.) பூமியில் ஓடும் ரதம் நீரில் ஓடக் கூடாததும் நீரில் ஒடுங் கப்பல் பூமியிலோடக்கூடாத துமாபோல் அரசன் சுத்த வீரனாயினும் இடமறிந்து யுத்ததத்திற்கு முநிவனேல் வெற்றி பெறுவான், இடனறியாது யுத்தத்திற்கு முநிவனேல் தோல்வியடைவான் என்பது விரிவு.