பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/789

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 779


(பொ.) கூரியவேலேந்தி உடையவனுடைய முகத்தைக் கண்டும் பயப்படாத யானையினது கால்கள் ஆழ்ந்த சேற்றிலழுந்திவிடுமாயின் நரியினுக்கு பயந்துபோம் என்பது பொழிப்பு.

(க.) அதிகக்கூராய வேலேந்தியுடையவனைக் கண்டஞ்சாத யானை யானது ஆழ்ந்த சேற்றிலழுந்திவிடுமாயின் நரிக்கு பயந்து ஒடுங்கிப்போம் என்பது கருத்து .

(வி.) கூரிய வேலேந்தியுடையவனுக்கு அஞ்சாத யானை சேற்றிலழுந்தி விடுமாயின் சிறிய ஓர் நரிக்கஞ்சி ஒடுங்கி விடுவதுபோல் அதிவீரமிகுத்த அரசனாயினும் இடுக்கணாய இடத்திலகப்பட்டுக் கொள்ளுவானாயின் வீரங்குன்றி தோல்வியடைவானாகலின் எதிரியினிடமறிந்து யுத்தத்தில் முநியல் வேண்டும் என்பது விரிவு.

55. தெரிந்து தெளிதல்

அதாவது அரசனானவன் தனது மந்திரவாதிகளாயிருப்பவருள் வஞ்சினம் பொறாமெ, பொருளாசை, குடிகெடுப்பு மிகுத்தவர்களே அதிகரித்திருக் கின்றார்களா அன்றேல் நீதியும் நெறியும் சீவகாருண்யமும் பகுத்தறிவும் கலைநுலாராய்ச்சியும் முன்பின் காலவகைகளை அறிந்து மதியூகங் கூறுவோரும் அரசனுக்கு நேரும் பழிபாவங்கள் தங்களையே சாருமென சத்தியதன்மத்தில் நிலைப்போருமாய பெரியோர்களாயுள்ளார்களா எனத் தெரிந்து தெளிந்தும், இரதகஜ துரகபதாதிகளாகிய நால்வகை சேனைகளும் அரசாங்கப்பற்றில் அமைந்துள்ளதா என்றும், ஆயுதசாலைகள் நிறைந்துள்ளதாவென்றும் தானிய பண்டிகள் நிறைந்திருக்கின்றதாவென்றும் தெரிந்து தெளிந்தும் தானும் தனது சேனைகளும் சுகமுற்றிருக்கின்றார்களாவென்றுந் தெரிந்து தெளிந்தும் தனதுயிருக்கு ஓராபத்தும் வாராத காப்புகளைத் தெரிந்து தெளிந்தும் ஓர் காரியத்தில் முநியல் வேண்டும் என்பதேயாம்.

1.அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.

(ப.) அறம் - தேசத்தில் தன்மநெறி பிசகாசெயலும், பொரு - சகலபொருட்களினிறைவும், ளின்ப - சகல சுகமும், முயிரச்ச - உயிர்காப்பும், நான்கின் - ஆகிய நான்கின், றிறந்தெரிந்து - திடங்களை யறிந்து, தேறப்படும் - உறுதிப்படவேண்டுமென்பது பதம்.

(பொ.) தேசத்தில் தன்மநெறி பிசகா செயலும் சகல பொருட் களினிறைவும் சகல சுகமும் உயிர்காப்பும் ஆகிய நான்கின் திடங்களை அறிந்து உறுதிப்பட வேண்டும் என்பது பொழிப்பு.

(க.) அரசனானவன் தன்மநெறி, பொருள் நிறைவு, சுகாதாரம், உயிர்காப்பு இந்நான்கையும் உறுதிபடுத்திக்கொள்ளல் வேண்டும் என்பது கருத்து.

(வி.) அறநெறி வழுவா செங்கோலையும் சகல பொருட்களினிறைவையும் சகல சுக ஆதாரங்களையும் தனதுயிர் காப்புக் காயபடைத்துணையையும் உறுதிபெறச் செய்துக்கொண்டு சகல காரியங்களிலும் முநிதல் வேண்டும் என்பது விரிவு.

2.குடிபிறந்து குற்றத்தி னீங்கி வடுப்பறியு
நாணுடையான் கட்டே தெளிவு.

(ப.) குடிபிறந்து - நல்லக்குடும்பத்திற்பிறந்து, குற்றத்தினீங்கி - தீவினைகளுக்கஞ்சியொதிங்கி, வடுப்பறியு - குற்றங்களை யறிந்து, நாணுடையான் - ஒடுங்கும் படியான தோழன், கட்டே - இடத்தே, தெளிவு - சகலவரிய பொருளும் விளங்குமென்பது பதம்.

(பொ.) நல்லக் குடும்பத்திற் பிறந்து தீவினைகளுக்கஞ்சி ஒதுங்கி குற்றங்களையறிந்து, ஒடுங்கும்படியான தோழனிடத்தே சகல அரிய பொருளும் விளங்கும் என்பது பொழிப்பு.