பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 69

பரிநிருவாணமுறும் ஆஸ்திகளை இழந்து நாஸ்தி அடைந்தவர்கள் பூர்வமெய்யறமாம் ஆஸ்தியைநாடாது தற்கால வேஷபிராமணர் பொய்யறமாம் போதனைக்குட்பட்டு ஆடுகள் கசாயிக்காரனைப்பின் செல்லுவது போல் சுயப்பிரயோசன வஞ்சகர்களைப் பின்பற்றி சுவாமி, சுவாமி என்று திரியுமளவும் இந்துதேசச் சீரும் நாஸ்தி, சிறப்பும் நாஸ்தி, வித்தையும் நாஸ்தி, விவேகமும் நாஸ்தி, கல்வியும் நாஸ்தி. கைத்தொழிலும் நாஸ்தியேயாம்.

இவ்வகை நாஸ்தியாம் அபுத்த தன்மத்தை அகற்றி புத்த தன்மத்தைப் பரவச் செய்வோமாயின் இந்துதேசமும் பிரகாசமுற்று இனியமாக்களும் ஐக்கியம் பெற்று என்றும் அழியா ஆஸ்தியையேற்று “ஆரோக்கிய பரமலாபச் சந்துட்டி பரமானந்த, விசுவாச பரமஞாதி, நிப்பானங் பரமாங் சுபமென்னும் " பாக்கியம் பெறலாம். இதையே சன்மார்க்கம் என்னும் நன்மார்க்கம் என்றும் மதிமார்க்கம் என்றும் நீதிமார்க்கம் என்றும் கூறுவதுடன் அழியா ஆஸ்திமார்க்கம் என்றும் கூறப்படும்.

- 1:35; பிப்ரவரி 12, 1908 –

15. முருகக்கடவுள் விவரம்

இம்மகான் குறிஞ்சிநில அரசபுத்திரனாக அவதரித்து குறிஞ்சி நிலங்களுக்கே கடவுளாகத் தோன்றிய விவரத்தை வீறைமண்டலவன் ஆதியங்கடவுளாகும் புத்தபிரானை சிந்தித்தெழுதியுள்ள பின்கலைநிகண்டின் ஆதரவாலும், புத்த மித்திரன் பகவனை சிந்தித்து எழுதியுள்ள வீர சோழியத்தின் ஆதரவினாலும், நற்கீரன் எழுதியுள்ள திருமுருகாற்றுப்படையின் ஆதரவினாலும், காக்கையர் எழுதியுள்ள நாரைக்குறவஞ்சியின் ஆதரவினாலும், இளங்கோவடிகள் எழுதியுள்ள சிலப்பதிகாரத்தின் ஆதரவினாலும் விளக்குகின்றோம்.


பின்கலை நிகண்டு


மகரகேதனனை வென்ற / லாமற்கே தொழும்பு செய்வோ
னிகரிலா குணபத்திரன்ற / ணிருசர ணிதய மானோன்
மிகுபுகழ் புனையானின்ற / வீறைமண்டலவன் செய்தான்
பகரிற் பன்னேழிரண்டும் / பலபொருட் பெயர்க்குஞ் செய்யுள்.


வீரசோழியம்


மிக்கவன் போதியின்மேதக் / கிருந்தவள் மெய்தவத்தாற்
றொக்கவன் யார்க்குந் தொடர / வொண்ணாத வன்றூயனெனத்
தக்கவன் பாதந் தலைமேற் புனைந்து / தமிழுரைக்கப்
புக்கவன் பைம்பொழிற் / பொன்பற்றி மன்புத்த மித்திரனே.


திருமுருகாற்றுப்படை


உலகமுவப்பவலநோ புதிரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாஅங்
கரவறவி நமக்குஞ் சேண்விளங்கவிரொளி.


நாரை குறவஞ்சி


நாநிலஞ்சூழ் நாதனடி நாடி பணிந்தேற்றி
நாரைகுறவஞ்சிநிலை நான் புகல்வேனம்மே.


சிலப்பதிகாரம்


திங்களைப்போற்றுதுந் திங்களைப்போற்றுதும்
கொங்கலர்தார்ச்சென்குளிர் வெண்குடைபோன்றிவ்
வங்கணுலகளித்தலான். செருவறுசினவேற் செம்பியன்
ஒருதனியாழி யுருட்டு வோனெனவே.

புத்தபிரான் நிருவாணதிசையடைந்த ஆயிரம் வருடங்களுக்குப் பின்பு புத்தசங்கத்தோர் அவர் போதனாவிருத்தி விவேகத்தால் ஆகாய சோதியின் குணாகுண விருத்தியையும், தேக குணாகுணங்களையும், மூலிகை குணா குணங்களையும், உபரச குணாகுணங்களையும், நவரத்தின குணா குணங்களையும், நவசார குணா குணங்களையும், பாஷாண குணா குணங்களையும் விவரித்து எழுதிவருங்கால் இவைகளுக் ஆதாரபீடமாக எக்காலும் நிலைத்திருக்கும் நிலத்தின் குணாகுணங்களில் முக்கியமாகும் ஐந்துவகை நிலங்களைக் குறித்திருக்கின்றார்கள்.