பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/790

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

780 / அயோத்திதாசர் சிந்தனைகள்

(க.) கருணையும் நீதியும் அமைந்த குடும்பத்திற்பிறந்து யாதொரு குற்றங்களுக்கும் ஆளாகாது அகன்று சகலவகைக் குற்றங்களுக்கும் ஒடிங்கி நடக்குந் தோழனால் சகல சுகத்தெளிவும் உண்டாம் என்பது கருத்து.

(வி.) நல்லொழுக்கக் குடும்பத்திற் பிறந்து நாணமுறுஞ் செயல்களுக்கு ஒதிங்கி சகல குற்றங்களையும் ஆய்ந்து அடங்கி நிற்போனை அரசன் தோழனாகக் கொள்ளுவானாயின் சகல தெளிவும் பெறுவான் என்பது விரிவு.

3.அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா
லின்மெ யரிதே வெளிறு.

(ப.) அரியகற் - அரியகலை நூற்களைக் கற்று, றாசற்றார் - சகல குற்றங்களு மற்றுள்ளோரை, கண்ணுந் - கண்டு தெளிந்து. தெரியுங்கா - தோழனாகத் தெரிந்து கொள்ளு மரசனுக்கு, லின்மெயரிதே - ஒருபொருளுமில்லையென்று சொல்லுவோரிராரென்பதே, வெளிறு - வெளிப்படையா மென்பது பதம்.

(பொ.) அரிய கலை நூற்களைக் கற்று சகல குற்றங்களு மற்றுள்ளோரைக் கண்டுதெளிந்து, தோழனாகத் தெரிந்து கொள்ளும் அரசனுக்கு ஒருபொருளும் இல்லையென்று சொல்லுவோரிராரென்பதே வெளிப்படையாம் என்பது பொழிப்பு.

(க.) கலை நூற்களைக் கற்று சகல குற்றங்களு மற்றுள்ளப் பெரியோரைத் தோழராகக் கொண்ட அரசனுக்கு இல்லையென்னும் பொருளொன்று இராது என்பதே கருத்து.

(வி.) சகல கலை நூற்களையும் சரிவரக் கற்று மனமாசகன்ற பெரியோரை அரசன் தெரிந்தெடுத்துக் கொள்ளுவானாயின் அவனது தேசத்தில் ஒரு பொருளுண்டு ஒரு பொருளில்லையென்று கூறாது சகல வளமும் பொருந்தி நிற்கும் என்பதே விரிவு.

4.குணனாடிக் குற்றமு நாடி யவற்றுண்
மிகைநாடி மிக்க கொளல்.

(ப.) குணனாடி - அரசன் நற்குண முள்ளோரை நேசிப்பதுபோல, குற்றமுநாடி தீயகுணமுள்ளோரையும் நேசித்து, யவற்றுண் - அவர்களுக்குள், மிகைநாடி - நல்லோர்களையே தேடி , மிக்ககொளல் - அதிகமாக நேசிக்கவேண்டுமென்பது பதம்.

(பொ.) அரசன் நற்குணமுள்ளோனை நேசிப்பது போல தீய குணமுள்ளோரையும் நேசித்து அவர்களுக்குள் நல்லோர்களையே தேடி அதிகமாக நேசிக்க வேண்டும் என்பது பொழிப்பு.

(க.) நற்குணமுள்ளோரை நேசிப்பது போலவே துற்குண முள்ளோரையும் அரசன் நேசித்து அவர்களுக்குள் நற்குணமுள்ளோர் நேசிப்பையே மிக்க பாவிக்க வேண்டும் என்பது கருத்து.

(வி.) அரசனானவன் தேசக்குடிகள் யாவருக்கும் பொதுவாய தந்தையாதலின் சகலரையும் மைந்தர்போல் பாவித்து நல்லோரையும் பொல்லோரையும் நேசித்து அவர்களுள் நல்லோர் வாக்கியங்களையே மிகுதியாக்கொண்டு தனது ராட்சியபாரத்தைத் தாங்கவேண்டும் என்பது விரிவு.

5.பெருமெக்கு மேனைச் சிறுமெக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்.

(ப.) பெருமெக்கு - தம்மெ மேலாக வுயர்த்திக்கொள்ளற்கும், மேனை - மற்றும், சிறுமெக்குந் - தம்மெக் கீழாகத் தாழ்த்திக் கொள்ளற்கும், தத்தங் - தாங்கள் தாங்கள் செய்யும், கருமமே - செயல்களே காரணமென்பது, கட்டளைக்கல் - கல்லின்மீதெழுத்து போலாமென்பது பதம்.

(பொ.) தம்மெ மேலாக வுயர்த்திக் கொள்ளற்கும் தம்மெக் கீழாகத் தாழ்த்திக் கொள்ளற்கும் தாங்கள் தாங்கள் செய்யுஞ் செயல்களே காரணமென்பது கல்லின்மீதெழுத்து போலாம் என்பது பொழிப்பு.