பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/794

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

784 / அயோத்திதாசர் சிந்தனைகள்

விடுகிறேன், உன்னால் வளர்க்க முடியுமல்லவா? என்றனர். அவரோடேயே அடியேன் இதுகாறும் உழைத்துவந்த அனுபோக்கத்தைக் கொண்டு பத்திரிகையை நடத்தக்கூடும் என்று நம்பிக்கையாக விடையளித்ததும் பண்டிதர் திருப்தி அடைந்து களித்தனர். அவரைத் தாம் ஸ்தாபித்துப் பாதுகாத்து வந்த சத்திய சங்கங்களைக் குறித்துக் கேட்டபோது புத்தரது ஆதிவேதம் என்னும் நூல் பற்றுக்கோடாக இருக்கட்டும். அதனை ஆராய்வோருக்கு தர்மம் விளங்கும் சங்கமும் நிலைநிற்கும் என்றனர். சென்னையில் கட்டவேண்டிய அறப்பள்ளியைக் குறித்து வினாவியபோது அவர் ஒரு தீர்க்கதரிசிபோல பொன் சிகரங்களோடு கூடிய அறப்பள்ளி ஒன்று சீக்கிரம் ஸ்தாபிக்கப்படும் என்று பூர்ண நம்பிக்கையுடன் சொன்னார். அவரது வார்த்தை நிறைவேறும்படி புத்தபகவான் திருவருள் புரிவாராக! மே மாதம் 5-ம் நாள் காலை பஞ்சஸ்கந்த பிரிவை அடைவதற்கு சில நிமிஷங்களுக்கு முன் அவர் தம்மெய்ச்சுற்றியிருந்த உறவினரையும் சீடர்களையும் நோக்கி சந்தடி செய்யாதேயுங்கள், இந்த தேகத்தைக் கொஞ்சநேரம் ஒன்றும் தொந்தரவு பண்ணவேண்டாம் என்று ஆக்ஞாபித்தார். பிறகு நிர்மயமாய் மன ஆனந்தத்துடன் புராதன பௌத்த முனீந்திரர்களைப்போல் கைகளைக் கூப்பிக்கொண்டு சவுபாதிஸேஸ நிருவாண மார்க்கத்தில் நின்று சுற்றி நின்றவர்களெல்லாம் பிரமிக்கும்படி பஞ்சஸ்கந்த பிரிவினை அடைந்தார்! இவ்வதிசயத்தை கண்ணாரக்கண்டு அருகிலிருந்த அனைவரும் செயலற்று, அழவும் வாய்வராமல், எங்களையும் அறியாமல் கண்ணீர்ப் பெருக ஸ்தம்பித்து நின்றோம். அன்பே உருவாயமைந்த திருமேனியையும் ஏழைகளிடத்தில் இரக்கம் நிறைந்த கண்களையும் எல்லோர் மனத்தையும் ரஞ்சிக்கச் செய்யும் புன்முறுவல் பூத்த திருமுக மண்டலத்தையும் இனி எப்போது காணப்போகிறோம் என்று எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி ஏங்கி நின்றோம். அவருடைய கிருபை நிறைந்த உபந்நியாசங்களைக் கேட்பது இனி கிடைக்குமோ வென்று துக்கக்கடலில் ஆழ்ந்தோம். ஆனால் மானுடராய்ப் பிறந்தோரெல்லாம் பஞ்சஸ்கந்த பிரிவினை அடைய வேண்டியது தானே.

பஞ்சஸ்கந்த பிரிவினை அடைந்தபிறகு இருந்த அவரது திருமுக விலாசத்தை யாவரே வருணிக்கத்தக்கவர். அன்று பகலெல்லாம் அவரது உறவினரும், நண்பர்களும், சீடர்களும் நூற்றுக்கணக்காக வந்து பார்த்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தனர். பகல் 3 மணிக்கு அவருக்குப் பரிசளித்திருந்த மூன்று மெடல்களையும் அணிந்து அலங்கரித்து அவரைத் தரிசித்தோம். மாலை 5.30 மணிக்கு வானத்தில் மேகங்கள் அடர்ந்து புஷ்பமாரிப் பெய்தாப்போல் தூறி நிலத்தைக் குளிரச்செய்தது மனோகரமாயிருந்தது.


"நல்லாரொருவருளரேல் அவர் பொருட்
டெல்லார்க்கும் பெய்யுமழை

மாலை 6 மணிக்கு சர்வாலங்கிருதங்களோடு அவரை வெள்ளைப் பெட்டியில் வைத்து புஷ்பங்களால் அலங்கரித்திருந்த விமானத்தில் இருக்கச் செய்து பௌத்தன்ம சின்னங்களுடன் முன்னால் புத்தரது ஆதிவேதத்திலிருந்து உருக்கமான பாடல்களைப் பாடிக்கொண்டுவர கோலம் புறப்பட்டது. அநேக பர்மிய பௌத்த பிக்ஷக்களும், இந்திய பௌத்தர்களும், பர்மிய பௌத்தர்களும், ஆயிரங்கணக்கான ஜனங்களும் கோலத்துடன் வந்தனர். பண்டிதபெருமான் அவர்களே காருண்யம் பொருந்திய பிரிட்டிஷ் கவர்ன்மெண்டிலிருந்து பௌத்தர்களுக்காக வாங்கிய மயானத்திற்கு தேவ விமானம் கொண்டுபோகப் பட்டது. விமானத்தை இறக்கினதும் சென்ற 1500 வருடங்களாக நடந்திராத பௌத்த சடங்குகள் வெகுசிரத்தையுடன் நடத்தப்பட்டன.

பிறகு மிஸ்டர் ஏ.எஸ். முதலியாரவர்கள் பண்டிதபெருமானவர்களைப்பற்றி ஆங்கில பாஷையில் ஆரவாரத்துடன் உபந்நியாசித்தார். அதன்பின் கீழ்குறித்துள்ள பாடல்கள் முறையே பாடப்பட்டன.

இப்பாடல்கள் பாடி முடிந்ததும் அவருடைய விஷயங்களையெல்லாம் பார்த்துக் கொண்டுவந்த கோலார் தென்னிந்திய சாக்கைய பௌத்த சங்கத்தின்