பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அதாவது, மலைகளைச்சார்ந்த நிலங் குறிஞ்சி என்றும், காடைச்சார்ந்த நிலம் முல்லை என்றும், கடலைச் சார்ந்த நிலம் நெய்தல் என்றும், நாடைச்சார்ந்து நஞ்சைவயல்கள் சூழ்ந்த நிலம் மருதம் என்றும், படுநிலம் பாலை என்றுமாம்.

வீரசோழியம்

முல்லை குறிஞ்சி மருதத்தொடு / பாலை நெய்தலைந்தும்
சொல்லு மகமா மதனுக்குரை / தொகுசட்டகமோ
நெல்லை நிகழு மிருபதொ / டேழுள வேனையவற்
றொல்லை நிகழு முரையுமறிந்து கொ / ளொண்ணுதலே.

பின்கலை நிகண்டு

கோடு சூழ் மலையின் சாரல் / குறிஞ்சியாம் வனச்சார் முல்லை
நாடு சார் மருதமாகு / நற்கடற் சராவுநெய்த
நீடிய கொடுங்கோன் மன்னர் / நெடுங் குடைக் கீழ் வாழ்கின்ற
பாடிலாக் குடிகள் போலப் / படு நிலம் பாலையாமே.

மலைகளைச்சார்ந்த குறிஞ்சி நிலவாசிகளாம் புருடர்களின் பெயர் குறவர், கானவர், மள்ளர், குன்றவர், புனவர், இறவுனரென்றும் இஸ்திரீகளின் பெயர் குறத்தியர், கொடிச்சியரென்றும் அரசன் பெயர் மலையன், வெற்பன், சிலம்பன், கானக நாடனென்றும் அவர்கள் கொண்டாடுந் தெய்வப்பெயர் முருகன் என்றும் கொட்டுமேளத்தின் பெயர் முருகியன் பறை, துடிப்பறை என்றும் வழங்கி வந்தார்கள்.

இதனுற்பவமோவென்னில், பூங்குறிஞ்சி என்றும் பழனி என்றும் வழங்கும் மலையை ஆண்டுவந்த மருகன் என்னும் அரசனுக்கும் கங்கை என்னும் இராக்கினிக்கும் முருகன் என்னும் ஓர் மகவு விசாக நட்சத்திரத்தில் தோன்றி வளர்ந்து சரவண சங்கத்தை அடுத்து கலை நூற்கள் கற்று பாலதானங் கடந்து குமரதானம் வாய்த்தவுடன் தன் தந்தையாம் அரன்பட்டமேற்று தெய்வானையென்னும் இராணியை மணந்து சுகவாழ்க்கையில் இருக்குங்கால் மற்றுமோர் மலைசார்பில் அதிகரூபசுந்திரமுடைய வள்ளியென்னும் மங்கை இருக்கின்றாள் என்று அறிந்து மையலுற்று அவளைக் கொண்டுவருவதற்கு வியாபாரிபோல் வேடமிட்டுச் சென்றும் பாங் கின்மையால் பௌத்த அரசர்களுக்குள் வழங்கிவந்த மயில் வாகன சூஸ்திரஞ் செய்தார்.

அதாவது, அரக்கு மெழுகுநூல் முதலியவைகளால் மயில்போன்ற ஓர் உருவுசெய்து சூஸ்திர இறக்கைகள் அமைத்து செல்லவேண்டிய இடங்களுக்குச் செல்வதும் வருவதுமாகக் கூடுங் கருவியாகும் ஊர்தி எனப்படும். இஃது மஞ்சளும் அரக்குஞ் சேர்ந்துள்ள கருவியானதால் மஞ்ஞை என்னும் மறுபெயரும் உண்டு.

இதற்குப்பகரமாய் சச்சந்தனென்னும் பௌத்தமார்க்க அரசன் மயில் சூத்திரம் செய்த விவரம்.

சீவக சிந்தாமணி

அந்தரத்தார் மயனே யென வையுறுந் / தந்திரத்தாற் றமநூல் கரை கண்டவன்
வெந்திர வான் பெருந்தச்சனைக் கூவியோர் / எந்திரவூர்தி யியற்று மினென்றான்.
பல்கிழியும் பயினுந்துகி நூலொடு / நல்லரக்கு மெழுகுந் நலஞ்சான் றன
அல்லனவும் மமைந்தெழு நாளினுட / செல்வதோர் மாமயில் செய்தன னன்றே.

- 1:36; பிப்ரவரி 19, 1908 –


பீலிநன் மாமயிலும் பிறிதாக்கிய / கோநன் மாமயிலுங் கொடு சென்றவன்
ஞானமெலா முடையா னடிகைதொழு / தாலுமிம்மஞ்ஞை யறிந்தரு ளென்றார்.

தன்னெறி நூனயந்தா னன்றுனன்றிது / கொன்னறியிற் பெரியாயிது கொள்கென
மின்னெறிபல்கலமே தகப்பெய்ததோர் / பொன்னறைஞாண் கொடுத்தான் புகழ்வெய்யோன்

ஆடியன்மா மயிலூர்தி யை யவ்வழி / மாடமுங்காவு மடுத்தோர் சின்னாள்செலப்
பாடலின்மென்மேற் பயப்பயந்தான்றுரந் / தோட முறுக்கி யுணர்த்த வுணர்ந்தாள்.

பண்டவழ் விரலிற்பாவை பொறிவலத் திருப்பப் பொங்கி
விண்டவழ் மேகம் போழ்ந்து விசும்பிடைப் பறக்கும் வெய்ய
புண்டவழ் வேற்கட் பாவை பொறியிடந் திரிப்பத் தோகை
கண்டவர் மருளவீழ்ந்து கால்குவித் திருக்குமன்றே.