பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 75

இதையே நீங்கள் பூசித்துவரவேண்டும் என்று புண்டர யாகம் ஏற்படுத்திக்கொண்டது போல் இக்காமிகார்ச்சனை என்னும் லிங்கமதம் ஏற்படுத்திவிட்டார்கள்.

ஞானவெட்டி

ஆவிடையார் கோவிலிலே - யமைத்தகுறி
ஆதர வாகவே சேர்ந்து மாதர்களினால்
மேவியதோர் நாதவிந்து - வெகுவிசித
விற்பனை யறியவொரு கற்பனை சொல்லே
பாவிக ளிதை யறியார் - கல்லுகள் தனில்
பாவனை யோப்பாகவுமே தாவிதஞ்செய்த
ஆவியென்று மழியாமல் - செலவழியா
ஆத்து மலிங்கமதனைப் பார்த்துணராமல்.

இவ்வகையான லிங்கமதம் ஏற்படுத்திக் குறிகளை சிந்தித்து வருவதைக் காணும் விவேகிகள் இஃது அப்பிரயோசன சிந்தனை என விளக்கிக் கண்டித்து வந்தார்கள்.

சிவவாக்கியர்

தீர்த்தலிங்கமுத்தியென்று தேடி யோடுந்தீரரே
தீர்த்தலிங்க முள்ளினின்ற சீவனைத்தெளியும்
தீர்த்தலிங்க மும்முளே தெளிந்து காண வல்லீரேல்
தீர்த்தலிங்கந்தானதாய்ச்சிறந்ததேசிவாயமே..

ஔவை குறள்

உள்ளமேபீட முணர்வே சிவலிங்கந் / தெள்ளியரர்ச்சிக்குமாறு.

ஞானமதியுள்ளான்

கல்லைப்பிளந்து சிறுசிலையாக்கிக் / கன்னாரர்வைப்பதைக் கண்டு மிருந்தும்
எல்லைப்பிடாரி இது சிவலிங்கமென் / றேற்றிப்பணியு மிடும்பனல்லோபேயன்.
நானோடா பேயன்.

திருக்காவலம்மானை

ஆண்குறியும் பெண்குறியு மத்தனென்றேயோதி
வீண்பெருமெய் கொண்டார் வீணர்களுமம்மானே.
வீண்பெருமெ யாவும் வினைப்பயன் காண்போதுணர்வார்
ஆண்மெகாமியத் தழிவோ ரற்ரே யம்மானே.

- 1:39; மார்ச் 11, 1908 –

இத்தகைய லிங்கமதம் ஏற்படுத்திய வேஷபிராமணர்கள் தாங்கள் கட்டியுள்ளக் கட்டிடங்களில் மேற்சென்னபடி குறிகளை ஸ்தாபித்துவிட்டது மன்றி லோக ஊற்றுக்களின் அருகிலும் ஸ்தாபித்துவிட்டு தங்களை அடுத்தக் குடிகள் யாவரையும் அழைத்து அவரவர் சுபாசுபகாலங்களில் சாணத்தினா லேனுங் களிமண்ணினாலேனும் ஆவிடையார் பீடமும், இலிங்கமும் பிடித்து வைத்து அதன் முனையில் அருகம்புல்லைக் குத்தி இந்தப் புல்பூண்டுகள் முதல் சருவ தோற்றத்திற்கும் இவ்விலிங்கமே காரணமாதலால் இதைப் பூசித்து நீரில் விட்டுவிடுங்கோளென்று போதித்துள்ள வாக்கின்படி சிற்சிலக் குடிகளுஞ் செய்துகொண்டுவந்தார்கள். நாளது வரையிலுஞ் செய்துக் கொண்டே வருகின்றார்கள்.

ஞானமதியுள்ளான்

பார்த்துள லிங்கத்தை யேத்தி பணிபூசை
பண்ணாமல் வீணர்பலர் பசுசாணமோ
டேத்தி மண்லிங்கத்தை போற்றியெடுத்துப்பின்
தண்ணீரில் போடும் தகல்பாஜிபேயன், நானோடாபேயன்.

இவ்வகைச் செய்கைகளால் லிங்கமதம் பரவிவருவதைக் கண்டு வைணவமதத்தார் தங்கள் மதசீவனத்திற்குக் குறைவு நேரிடுகிறதென்று எண்ணி இலிங்கமதக் கண்டனப் புத்தகங்கள் அச்சிட்டு அதில் தாருகாவனம் என்னும் ஓர் தோட்டம் இருந்ததாகவும் அத்தோட்டத்துள் இரிஷிகளும் இரிஷிப் பத்தினிகளும் இருந்ததாகவும் அவ்விரிஷிப்பத்தினிகளை சிவனென்பவர் கற்பழித்ததாகவும் அப்பத்தினிகள் சாபத்தால் குறியறுந்து விழுந்துவிட்டதாகவும் அதையே சிலர் பூசித்துவருவதாகவும் எழுதிவிட்டார்கள்.