பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இத்தகையக் கதையை எழுதியவர் இரிஷிகள் என்னும் வாக்கியத்தின் பொருளையும், பத்தினிகள் என்னும் வாக்கியத்தின் பொருளையும், லிங்கம் என்னும் வாக்கியத்தின் பொருளையும் அறியாமலே எழுதியிருப்பதாக விளங்குகின்றது.

புத்தசங்கங்கள் இருந்தகாலத்தில் புருஷர்களில் குடிமி வைத்துள்ளவர்கள் - குடும்பிகள் என்றும் - சடைமுடி வைத்துள்ளவர்கள் - இருடிகள் என்றும் - சங்கத்துள் தங்கி சிறமொட்டை உள்ளவர்கள் சமணர்கள் என்றும் - வகுக்கப்பட்டிருந்தார்கள்.

மனையாளுடன் இல்லத்திருந்து குடும்பியாகாமலும் மடத்திற்சேர்ந்து சிரங்கழித்து சமணநிலை சாராமலும் இல்லத்திலுமிடி துறவிலுமிடியாகும் ஈரிடிகள் உண்டு காலங்கழித்தவர்களுக்கு இருடிகள் என்று பெயர். இவ்வகை யிருடி என்போர்களுக்கு மனைவிகள் கிடையாது. மனைவிகள் இருப்பார் களாயின் அவர்களை மனைவாழுங் குடும்பிகள் என்று அழைக்கத்தகுமேயன்றி இருடிகள் என்று அழைக்கத்தகாது.

பத்தினிகள் என்பதில் இஸ்திரீகளுக்குள் பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்னும் அவரவர்கள் குணாகுணச் செயல்களைக் கண்டு எழுதியிருக்கின்றார்கள். இதில் பத்மினி என்பவள் அன்னியப் புருடர்களை கண்ணெடுத்துப் பாராதவளும் கனவிலும் பரபுருடனை எண்ணாதவளும் தன் கணவனையே கடவுளாகப் பாவித்து பணிவிடைச் செய்துவருபவளு மாயிருப்பாள். அத்தகைய உத்தமியை ஒருவன் கற்பழித்தபோது அவளை பத்மினியெனத் தகுமோ. அங்ஙனங் கற்பழிந்தவளின் வாக்கும் பலிதமாமோ ஒருக்காலுமாகா.

இலிங்கம் என்னும் மொழியின் ஞானார்த்தம் தேகமும் மனமும் அயர்ந்தவிடம் அதாவது கருவி கரணங்கள் ஓய்ந்தவிடம். வயிததியார்த்தம் சிவந்த நிறமுள்ள ஓர் மருந்துகட்டியின் பெயர். சோதிடார்த்தம் செவ்வாய் என்னும் கிரகத்தின் பெயர்.

ஆதலின் இலிங்கம் என்பதற்கு ஆண்குறி என்று எந்த சாஸ்திரங்களுங் கூறவில்லை.

இத்தகைய பொய்யுக்குப்பொய் கண்டனம் எழும்பியதைக் கண்ட லிங்கமதத்தோர் விஷ்ணுமதத்தரைநோக்கி உங்கள் தெய்வமாகிய இராமசாமி எங்கள் லிங்கசாமியைப் பூசித்தபடியால் இராமலிங்கம் என்னும் பெயருண்டாயிற்றென்றும் அந்தலிங்கம் எடுக்கச் சென்ற அநுமாருக்கு வாலறுந்து போய்விட்டதென்றும் இன்னோர் கற்பனை வகுத்து அவர்களைக் குறைக் கூறிவந்தார்கள். இத்தகையக் கற்பனா மதப்போர்கள் யாவும் தங்கள் தங்கள் சீவனங்களுக்காய் எதிரி மதத்தைத் தாழ்த்தியும் தங்கள் மதத்தை உயர்த்தியும் பேசிவந்த சங்கதிகளால் ஒருவருக்கொருவர் ஒற்றுமெய்க்கேடுண்டாயதும் அன்றி நமதுதேச ஞானத்தின் மகத்துவார்த்தங்களுங் கெட்டுப்போயிருக்கின்றன. தங்கள் தங்கள் சுயப்பிரயோசனங்கருதுபவர் யாவரும் எங்கெங்கும் பங்கப்படுவார்கள் என்பது இயல்பாதலின் நமது தேசத்தோர் செய்துவருஞ் செய்கைகள் நுண்ணியதாயினும் எண்ணிசசெய்யாமல் மனம் போனப் போக்கில் செய்துவிட்டு மாளா துக்கத்தில் ஆழ்த்திவிட்டார்கள்.

அதுவும் போதாமல் இன்னும் இம்மதவூழல்களை அன்னிய மதத்தோர் எளிதில் அறிந்துக் கொள்ளுவதற்கு ஏசல் என்னும் ஓர் நூலியற்றி அதிற் பார்வதி இலட்சுமியை ஏசுவதுபோலும் இலட்சுமி பார்வதியை ஏசுவதுபோலும் மத்தா லடிப்பட்டாரடி உங்கள் பெருமாள் என்றும், பிரம்பால் அடிப்பட்டாரடி உங்கள் சிவனாரென்றும் உள்ள சங்கதிகள் யாவையும் பரக்கத் தீட்டிவிட்டார்கள்.

ஒரு சமயத்தோருடன் மற்றொரு சமயத்தோர் விரோதத்தினால் ஏற்படுத்திக்கொண்ட கண்டனங்கள் சுவாமிகளின் திருவிளையாட்டென்று ஏசுவதினால் விச்சாரிணைப் புருஷர்கள் யாவரும் அதைத் தெரு விளையாட் டென்று கூறித் தள்ளிவிடுகின்றார்கள். ஆதலின் நமது தேசத்தார் இனியேனும்