பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தசசீலமென்னும் பத்துக்கட்டளைகளை வரிவடிவு அட்சரங்களால் அடிக்கச்செய்து சத்திய தன்மத்தை விளக்கிவருங்கால் சித்தார்த்தியாம் புத்தருக்கு ஜினர், ஜைனர், சினர், சைநரென்றும் அம்மலைக்கு ஜினமலை, சைநமலை யென்றும் வழங்கிவந்தார்கள். நாளது வரையிலும் வழங்கிவருகின்றார்கள். இதுவுமின்றி புத்தபிரானுக்குள்ள ஆயிர நாமங்களில் சைநரென்பது ஒரு பெயர் என்பதை அடியிற் குறித்துள்ள பின்கலைநிகண்டின் பாடலாற் தெரிந்துக் கொள்ளலாம்.

பின்கலை நிகண்டு

தருமராசன் முன்னிந்திரன் / சினன் பஞ்சதாரைவிட்டே
அருள்சுரந் தவுணர்க்கூட்டுந் / தாகதன் ஆதிதேவன்
விரவு சாக்கையனே சைநன் / விநாயகன் சினந்தவிர்ந்தோன்
அரசுநி ழலிலிருந்தோன் / அறி அறன் பகவன் செல்வன்.

ஒலிவடிவாகும் பாலிபாஷையும் புத்தபிரானாலியற்றிய சமஸ்கிருத பாஷையும் தமிழ்பாஷையும் மகதநாடாம் வடநாட்டில் வேறூன்றி அகஸ்தியரால் தென்னாடெங்கும் பரவச்செய்தனர்.

வடநாடாம் மகதநாட்டில் தமிழ்பாஷை வேறூன்றி இருந்ததென்பதற்கு நூலாதாரம்.

உதயணன்காதை - இராஜகிரக சிறப்பு

விண்ணுற நிவந்த பண்ணமை படைமதில்
வாயிலு மருங்கிணுங் காவல் கண்ணி
வேந்து பிழைத்தொழுகினுங்காய்ந்து கலக்கறா அ
முழுப்பரிசார முதற்க ணெய்தி
விழுப்பெருஞ் செல்வமொடு வென்றி தாங்கிய
யைம்பதினிரட்டி யவனச்சேரியு
மெண்பதினிரட்டி யெறிபடைப்பாடியு
மன்பெருஞ் சிறப்பி னாயிரமாகிய
தலைப்பெருஞ் சேனைத் தமிழ்ச் சேரியுங்
கொலைப்படுங் கடுந்திறற் கொல்லச்சேரியு
மிலைச்சச் சேரியுந் தலைத்தலை சிறந்து.

பகவனுக்குரிய சைந ரென்னும் பெயரையும் சைனமலை என்னும் பெயரையும் ஆதாரமாகக் கொண்டு பூர்வம் நாகர் குலம் என்றும் இஸரேலர் என்றும் வழங்கிவந்த ஓர் பெருங் கூட்டத்தார் புத்ததன்மத்தைப் பின்பற்றியச் செயலால் சைனரென்றும் சீனர் என்றும் நாளதுவரையில் வழங்கி வருகின்றார்கள்.

ஜின ஜைநரென்னும் புத்தருக்குரிய பெயரால் அவர் தன்மத்தைப் பின்பற்றிய சைனர்கள் யாவரும் தமிழ்பாஷைக்குரியவர்களுடன் சம்பந்தப்பட்ட வர்கள் என்பதை அடியிற் குறித்துள்ள தொந்த வாக்கியங்களால் அறியலாம். தமிழில் நீ என்னு மொழிக்கு சீனபாஷையில் நீ என்றும், நான் என்பதற்கு ஞான் என்றும் யாம் என்பதற்கு யாம் என்றும், பெண் என்பதற்குப் பெண் என்றும், எஃகு என்பதற்கு எஃ என்றும், கண் அல்லது இடம் என்பதற்கு கண் என்றும், ஈர் அல்லது இரண்டென்பதற்கு ஈர் என்றும், மை என்பதற்கு மை என்றும் வழங்கிவரும் தொந்தமொழிகளால் அறிவதுமன்றி மகதநாட்டைச் சார்ந்த ஜினமலை சைன மலையருகில் சைனர்கள் என்னும் பௌத்தர்களும் தமிழர்கள் என்னும் பௌத்தர்களும் பூர்வத்தில் ஓர் குலத்தினராக விளங்கினார் என்பதும் புலப்படுகின்றது.

தமிழரென்னும் பௌத்தர்கள் யாரென்பீரேல், - தற்காலம் பராயர்களால் பறையர்கள் பறையர்கள் என்று கூறும் பூர்வக் குடிகளேயாம்.

இதன் ஆதரவைக்கொண்டே இலங்காதேசத்துள்ள சிங்கள பௌத்தர்கள் யாவருந் தங்கட் புராதன நூற்களில் பாண்டிய அரச வம்மிஷத்தோர் யாவரையுந் திராவிட பௌத்தாள், திராவிட பௌத்தாளென வரைந்துவைத்திருக்கின்றார்கள்.

சரித்திர பூர்வங்களையும் பாஷையின் பூர்வங்களையும் அவரவர்கள் மதங்களின் பூர்வங்களையும் நன்காராய்ந்து கற்பனா கதைகள் யாவையும்