பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 79

அகற்றி மெய்ப்பொருள் உணராமல், தங்களுக்கு அன்னியப்பட்ட மதங்களின் பூர்வங்களைக் கண்டுத் தெளிந்தவர்கள் என நடித்து ஜைநமதச்சுவாமி அருகரென்றும், சமணமதச்சுவாமி அருகரென்றுந் தங்கள் மதப்பொய்யை மெய்யாகக் கூறுவதுபோல் அன்னியர்மதமெய்யை அறியாமற் பொய்யாகக்கூறி அலக்கழித்துவருகின்றார்கள்.

சமணர் - பாலி - மகடபாஷா
சிரமணர் - சமஸ்கிருதம் - சகடபாஷா
சௌமியர் - தமிழ் - திராவிடபாஷா

புத்தசங்கத்திற்சேர்ந்து ஞானசாதன சௌமியர்களாக விளங்கினோர்களை பாலியில் சமணரென வழங்கிவந்தார்கள். இவர்கள் ஞானசாதன உயர்வினால் சௌமி யசாகரரென்றும் சமணநீத்தோரென்றும் வழங்கி சாரணர் நிலைதோய்ந்தவர்களை சித்தர்கள் என்றும் அழைக்கப்பெற்றார்கள்.

பின்கலை நிகண்டு

நீரினிற் பூவில் வானில் / நினைந்துழி யொதுங்குகின்ற
சாரண ரெண்ம ராவா / சமணரிற் சித்திபெற்றோர்.

தகரவெதுகை: புத்தன், மால், அருகன், சாத்தன்.
ரகரவெதுகை: தருமராசன்றான், புத்தன், சங்கனோ டருகன்றானாம்.

ஜைநர்கள் புத்தருக்குரிய ஆயிர நாமங்களிற் சிலதையும் தருமங்களிற் சிலதையும் நூதனமான சாதிபேதத்தையும் உண்டு செய்துக்கொண்டு தங்களை புத்தர் பெயர்களில் ஒன்றாகிய ஜைநரென்னும் பெயரால் மாற்றிக்கொண்டபோதிலும் யதார்த்தத்தில் அவர்கள் பௌத்தர்களே யாவர். புத்தமார்க்கத்திலிருந்தே சருவ மார்க்கங்களும் பிரித்துள்ளவற்றை இனி எழுதிவரும் பூர்வத்தமிழொளியில் அறிந்துக் கொள்ளலாம்.

- 1:41; மார்ச் 25, 1908 –

19. வேதவாக்கியங்களின் விவரம்


வேதமென்றும் மறையென்றும் வழங்கும்படியான ஓர் நூல் மனுக்களுக்கு முத நூலென்றும் சிரேஷ்ட நூலென்றும் அதுவே மனுக்களை ஈடேற்றும் நூலென்றும் சகலரும் புகழும்படியாய் இருக்கின்றபடியால், அத்தகைய நூல் யாவரால் இயற்றப்பட்டது என்றும் எக்காலத்தில் இயற்றியது என்றும் அதைக் கற்பதினால் மனுக்கள் அடைந்த சுகம் என்ன என்றும் அவற்றிற்கு வேதவாக்கியங்கள் என்னும் பெயர் வந்த காரணம் யாதென்றும் அவ்வேதவாக்கியம் செய்யாமொழி அதாவது வரையாக்கேள்வியிலிருந்த காலம் யாதென்றும் விசாரித்துத் தெளியவேண்டியதே விவேகிகளின் கடனாம்.

இவ்வேதவாக்கியங்களை இயற்றினவர் யார் என்னில் புத்தர் என்னும் பகவனேயாவர்.

சீவக சிந்தாமணி

ஆதிவேதம் பயந்தோய் நீ / யலாபெய் மாரிய மாந்தோய் நீ
நீதிநெறியை யுணர்ந்தோய் நீ / நிகரில் காட்சிக் கிறையோய் நீ
நாதனென்னப்படுவோய் நீ / நவைசெய் பிறவிக் கடலகத்துள்
பாதகமலந் தொழவெங்கள் / பசையாப்பவிழ பணியாயே.

சூளாமணி

ஆதியங்கடவுளை அருமறை பயந்தனை / போதியங் கிழவனை
பூமிசையொதுங்கினை / போதியங் கிழவனை பூமிசை யொதுங்கிய
சேதியஞ்செல்வநின் றிருவடி வணங்கினம்.

கல்லாடம்

மூன்றழல் நால்மறை முனிவறத்தோய்ந்து / மீறை நீருகுத்தலின் மறையோனாகியும்.

இவ்வேதவாக்கியம் எக்காலத்தில் இயற்றியதென்னில் இரண்டாயிரத்தி ஐந்நூறு வருடங்களுக்கு மேற்பட்டும் மூவாயிரத்தி நானூறு வருடங்களுக்குட் பட்டுமேயாம்.

மணிமேகலை : கலியுலகவருடக் கணக்கு

ஈரெண்ணுற்றோ டீ ரெட்டாண்டினிற் / பேரறிவாளன் றோன்றி.